வாழும் எம்.ஜி.ஆர். விஜய்!

சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் உரை

தவெக தலைமையினால ஆட்சி அமைந்த பிறகு, சபாநாயகர் ஆகி இருக்கிறார் ஜேசிடி பிரபாகர்.

அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ஜேசிடி பிரபாகர், தற்போது சபாநாயகராக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து புகழுரைகளை மற்ற கட்சித் தலைவர்களின் பேச்சில் காண முடிந்தது.

முக்கியமாக தமிழக முதலமைச்சரான விஜய்யும் சபாநாயகரை வாழ்த்தியபடிதான் தன்னுடைய பேச்சைத் துவக்கினார்.

துணை சபாநாயகர் பேசிய பிறகு தன்னுடைய உரையைத் துவக்கிய சபாநாயகர் பிரபாகர், பல சுவாரசியமான தகவல்களையும் சில வரலாற்றுப் பின்னணியையும் நினைவுபடுத்தித் தன்னுடைய பேச்சை பலரின் ஈர்ப்புக்குரிய ஒன்றாக மாற்றினார்.

தன்னுடைய பேச்சின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி அவர் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

“1980-ம் ஆண்டு நான் இதே தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது எனக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பிய என் பெற்றோரையும் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் நான் மறந்துவிட முடியாது.

எந்த விதத்திலும் மற்றவர்கள் உன் வீட்டு வாசலில் வந்து எதிர்ப்புக் காட்டாதபடி செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வழங்கிய அறிவுரை.

அதன்படியே தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடைய வழிகாட்டுதலின் பேரில், இந்த சட்டசபைக்குள் நான் நுழைந்தேன்.

அப்போது நான் இளம் வயதிலேயே சட்டசபை உறுப்பினராக உள்ளே நுழைந்து குறிப்பிட்ட சில காலத்திற்குள்ளேயே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார், “உன்னைப் பற்றி மட்டும் எந்தப் புகார்களும் வருவதில்லை. இப்படிப்பட்ட கண்ணியமான பேரை எப்படி சம்பாதித்திருக்கிறாய்?” என்று.

அப்போது, “நீங்கள் இளம் வயதிலேயே எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பை கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிற நான் உங்கள் பேருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் எப்படி நடந்து கொள்வேன்” என்று பதிலளித்தபோது என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

அதோடு மட்டுமல்லாமல் என்னிடம் மிகவும் நெருக்கம் காட்டிய மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் என்னிடம், “எனக்கொரு மகள் இருந்திருந்தால், உனக்குதான் திருமணம் முடித்துக் கொடுத்திருப்பேன்” என்றும் சொன்னார்.

அப்படி என்னுடைய வாழ்வில் நான் அன்றைய அரசியலுக்கு பல விதத்தில் உதவியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

அதே மாதிரிதான் தற்போது பொறுப்பேற்றிருக்கிற முதலமைச்சர் தளபதி விஜய்யை நான் பார்க்கிறேன்” என்றவர் விஜய்யை வாழும் எம்ஜிஆர் என்றார்.

அடுத்து, புரட்சித் தளபதி விஜய் என்கின்ற அடைமொழியையும் கொடுத்துப் பாராட்டிப் பேசினார்.

அவையில் சபாநாயகர் மட்டுமல்ல, அவை உறுப்பினர்கள் அனைவரும் எப்படிப்பட்ட உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும், சட்டசபை மோதலுக்கான இடமல்ல, அது மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடம் என்பதை தெளிவுபடுத்தினார்.

ஏறத்தாழ அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஜேசிடி பிரபாகரனின் பேச்சு, சட்டசபை வளாகத்தில் பல்வேறு தரப்பினராலும் பாராட்டைப் பெறும் அளவுக்கும் அதிகமான கைத்தட்டலை பெறும் அளவுக்கும் தொடர்ந்தது.

நிறைவாக முதலமைச்சருக்கும் தன்னை தேர்ந்தெடுத்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கும் சட்டசபைக்கு வந்திருக்கின்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் வாழ்த்துச் சொல்லி தன்னுடைய உரையை நிறைவு செய்தார் ஜேசிடி பிரபாகர்.

தமிழக அரசியலில் பல்வேறு சபநாயகர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற்றிருக்கிறார்கள் என்றாலும், தற்போதைய சபாநாயகர் பொறுப்பேற்றிருக்கிற ஜே.சி.பி. பிரபாகரின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்பது சட்டசபை மரபுக்கான நல்லதொரு துவக்கம்.

You might also like