மக்கள் மனதில் குரல் :
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து உண்மையிலேயே மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பது வெளிப்படுவதற்கு முன்பே பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் உணர்ச்சிவயப்பட்ட பல விவாதங்கள் நடக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதையொட்டி இதுவரை பலதரப்பட்ட கருத்துக்கணிப்புகள் முன்வைக்கப்பட்டு, அவையும் தன்னளவில் சலசலப்பை ஏற்படுத்து வருகின்றன.
பொதுவாக அரசியல் பார்வையாளர்கள் இதற்கு முன்பு நடந்த எந்தத் தேர்தலுக்கும் இவ்விதமான கருத்துக் கணிப்புகள் அலையடிப்பதைப் பார்த்ததில்லை.
இவ்விதமான கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமான முடிவை முன்வைத்திருக்கின்றன.
சில கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கின்றன.
வேறு சில கருத்துக் கணிப்புகள் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றன.
தற்போதைய வாக்குப்பதிவு 85 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிற நிலையில், அதன் விளைவாக தவெக ஆட்சியமைக்கும் என்கிற அளவுக்கு சிலரும், தவெக உடன் சில கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சிலரும் பல்வேறு விதமாகக் கணிக்கிறார்கள். அல்லது தங்களது விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
இதில், முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் இவ்வித கருத்துக்கணிப்புகளை எதிர்கொள்ளும் விதம்தான் சிலர் இப்போதே விஜய் தலைமையில் ஆட்சி என்பதையும் அவர் எத்தகைய அமைச்சரவையை அமைப்பார் என்பதையும் கூட ஆரூடமாக மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்கள்.
தவெக தரப்பிலான ஆரவாரமான வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும், தவெக தொண்டர்களும் விஜய்யை விரும்பும் சிறு குழந்தைகளும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தும் எதிர்வினைகள் அதிர வைக்கும் விதத்தில் இருக்கின்றன.
தவெக தலைவரான விஜய் ஒருவேளை தோற்றால் தாங்கள் குடும்பத்தோடு உயிரிழக்கும் அளவுக்கு செல்வோம் என்பதை கேஷுவலாக அறிவிக்கிறார்கள்.
10, 12 வயதுள்ள குழந்தைகள் கூட, விஜய் ஒருவேளை தோற்றால் தாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்பதை குழந்தைத் தனமான குரலில் சொல்கிறார்கள்.
இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட காட்சிப் பதிவுகள் அதைப் பார்க்கும் எந்த பார்வையாளரையும் பதற்றத்தில் ஆழ்த்துகின்றன என்பது உண்மை.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றவரான கிருபாகரன் இது பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, இதைத் தடுக்கும் விதத்தில் சம்பத்தப்பட்ட கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
வேறு சில சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் பரவும் உணர்வு வயப்பட்ட நோய்க்கூறான மனநிலையைk கண்டித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, கரூரில் பிரச்சாரத்தின்போது 41 உயிர்கள் பறிபோனபோது உருவான துக்கத்தின் அழுத்தத்தை விஜய் உணர்ந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.
அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது வாகனத்திற்கு முன்பும் பின்பும் அசுர வேகத்துடன் வாகனங்களை ஓட்டி வந்த இளைஞர்களைக் கண்டித்திருக்கிறார்.
ஒரு தொண்டர் வாகன விபத்தில் சிக்கி அடிபட்டபோது தனது வாகனத்தை விட்டுக் கீழிறங்கி அவரிடம் நலம் விசாரித்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
தற்போது உணர்வு வயப்பட்ட பல்வேறு எதிர்வினைகள் சிறு குழந்தைகளிடமும் பெண்களிடமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதே விதமான ஆற்றுப்படுத்துவதை விஜய் மேற்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், அப்படி எதுவும் செய்யாமல் விஜய் மவுனம் காப்பது எந்த விதத்திலும் சரியல்ல.
தன்மீது வைத்த நேசத்திற்காக இன்னொரு உயிர் பறிபோகும் ஆபத்தை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.
அதைத் தடுக்கும் விதத்தில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் எத்தகைய முடிவை மக்கள் வெளிப்படுத்தினாலும், அதை இயல்பான ஜனநாயக உணர்வாக எடுத்துக் கொள்வதற்கான மனப் பக்குவத்தை தனது தொண்டர்களிடம் விஜய் விஷுவலான காட்சிப் பதிவின்மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
தன்னை நம்பும் தொண்டர்களை அரசியல் மயப்படுத்துவதற்கு இதுவே உகந்தவை.
விஜய்க்கு முன்பு வைக்கப்படுகிற மனிதநேயம் சார்ந்த இத்தையக கோரிக்கைகளை, தவெக தொண்டர்கள் ஒவ்வொருவரின் உயிர் மீதான அக்கறையுடன் விஜய் பரிசீலிப்பது அவருக்கும் அவருடையை தொண்டர்களுக்கும் நல்லது.
தன்னுடைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறபடி விஜய் இத்தகைய கோரிக்கைகளைப் பரிசீலிப்பாரா?
– ஆர். தியோபிலஸ்