செல்போனில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்!

இன்று உலக புகைப்பட தினம். முன்பெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு புகைப்படக் கலைஞர்களின் உதவி தேவையாக இருந்தது.

ஆனால், இப்போது செல்போன் வைத்துள்ள அனைவரும் புகைப்பட கலைஞர்கள்தான்.

சுற்றுலாத் தலங்களில் வேடிக்கை பார்ப்பவர்களைவிட, செல்பி எடுத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.

இதற்கு முன்னோடியாக இருந்தவர் பிலிப் கான். 1997-ம் ஆண்டில் செல்போன் மூலம் முதல் புகைப்படத்தை எடுத்தவர் பிலிப் கான்.

1997-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி பிறந்த தனது குழந்தையை அவர் முதல் முறையாக செல்போனில் படமெடுத்து, தனது இமெயிலில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

4 தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனரும், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளரும், கண்டுபிடிப்பாளரும், கணக்கியல் வல்லுநராகவும் விளங்கியவர் பிலிப் கான்.

எப்போதும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயது முதலே இவருக்கு உண்டு.

1990-களில் அவரது ஆர்வம் செல்போன்களின் பக்கம் திரும்பியது.

அந்தக் காலகட்டத்தில் வேகமாக பிரபலமாகி வந்த செல்போன்களை, படம் எடுக்கவும் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கிய அவர், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

1997-ம் ஆண்டில் இவரது இந்த ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தச் அச்சமயத்தில் அவரது மனைவி கருவுற்றிருந்தார்.

தான் தந்தையாகப் போவதை நினைத்து மகிழ்ந்த பிலிப் கான், தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையை செல்போன் உதவியுடன் படமெடுத்து, அதை தனது நண்பர்களுக்கு இணையதளம் மூலம் உடனடியாக அனுப்பி வைக்க திட்டமிட்டார். அதற்கான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார்.

1997-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி, வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையின் பிரசவ அறைக்குள் தனது மனைவி கொண்டுபோகப்பட, பிலிப் கான் பரபரப்பானார்.

தனது டிஜிட்டல் கேமரா, செல்போன் மற்றும் தனது லேப் டாப்பை ஒயர்கள் மூலம் இணைத்து சில தொழில்நுட்ப விஷயங்களையும் செய்து முடித்து குழந்தை பிறக்கும் நேரத்துக்காக காத்திருந்தார்.

இவர் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி செல்போனின் பட்டனை தட்டினால், அடுத்த வினாடியே அதனுடன் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கேமரா படமெடுக்கும்.

அடுத்த விநாடியே அந்த செல்போன் உடனடியாக வெப் சர்வருடன் இணைப்பை ஏற்படுத்தி, அதிலுள்ள பிலிப்பின் நண்பர்களின் இ-மெயில் முகவரிகளுக்கு படத்தை அனுப்பி வைக்கும்.

மேலும் இப்படி ஒரு படம் இ-மெயிலில் வந்திருப்பதற்கான சமிக்ஞையையும் அந்த இ-மெயில் முகவரியில் உள்ளவர்களுக்கு கொடுக்கும்.

சில நிமிடங்கள் கழித்து, தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை நர்ஸ் சொன்னதும் தான் செல்போன், கேமரா மற்றும் லேப்டாப்பை இணைத்து வைத்திருந்த இடத்துக்கு குழந்தையை எடுத்துவரச் சொன்னார் பிலிப்.

பின்னர் அக்குழந்தையை அவர் படம் எடுக்க, அடுத்த நொடியே செல்பொனுக்கும் லேப் டாப்புக்கும் இடையிலான இணைப்பால் அது இ-மெயில் வழியாக பிலிப்பின் இ-மெயிலில் உள்ள சுமார் 2000 நண்பர்களைச் சென்றடைந்தது.

இப்படி பிலிப் கானுக்கு பெண் குழந்தை பிறந்த நாளில்தான் முதன்முதலாக செல்போனில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

1997-ம் ஆண்டில் செல்போன் மூலமாக முதல் படத்தை எடுத்த பிறகு, இதுதொடர்பாக மேலும் பல்வேறு ஆய்வுகளை கான் மேற்கொண்டார்.

2000-ம் ஆண்டில் இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை வாங்கிய ஜப்பானின் ஷார்ப் நிறுவனம், கேமராவுடன் இணைந்த செல்போன்களைத் தயாரித்து வெளியிட்டது.

  • லலித்
You might also like