என்னைக் கேட்டால் எனக்கெப்படித் தெரியும்?

“நான் எதுவும் அமரகாவியம் எழுதி விடவில்லை. பத்திரிகையில் இடம் காலி இருக்கிறது என்று சொன்னதால் அவசர அவசரமாக கதைகள் எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான்.”

– இப்படி தன்னைத்தானே வர்ணித்துக் கொண்ட தமிழ் எழுத்தாளன் எவரும் கிடையாது. அதனால் தான் அசோகமித்ரனைப் பிடிக்கும்.

2004-ல் சென்னை பிரிட்டீஷ் கவுன்சிலில் கலை பற்றிய என் ஆங்கில உரையைக் கேட்க அசோகமித்திரன் திடீரென்று வந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன்.

அப்போது அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.

“உங்களின் மிகைபுனைவு அற்ற கதைசொல்லும் பாணியைத் தமிழில் ஏன் யாருமே பின்பற்றவில்லை?”

அப்போது அசோகமித்திரன் அவருக்கே உரித்தான பாணியில் சிரிப்பின் நடுவே சொன்னார், “என்னைக் கேட்டால் எனக்கெப்படித் தெரியும்?”.

கல்கி, கி.ரா, தி.ஜானகிராமன் ஆகியோருக்குக் கிடைத்த இலக்கிய வாரிசுகள் ஏன் அசோகமித்திரனுக்குக் கிடைக்கவில்லை? இந்தக் கேள்விக்கு இன்று வரை பதில் எனக்குக் கிடைக்கவில்லை.

சினிமா உலகம் பற்றி அசோகமித்திரன் எழுதிய நாவலான “கரைந்த நிழல்கள்” ‘தீபம்’ இதழில் தொடராக வந்தபோது பச்சையப்பன் கல்லூரி நூல்நிலையத்தில் ஒரு மாணவனாகப் படித்திருக்கிறேன்.

சினிமா உலகம் பற்றி சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’ படித்திருக்கிறேன்.

ஆனால், அசோகமித்திரனின் மிகுபுனைவற்ற கதைசொல்லல் என்னை உள்வாங்கியது போல சுஜாதாவின் கதை சொல்லல் என்னைக் கவரவில்லை.

சுஜாதா ஒரு வெளி மனிதராக இருந்து கதை சொல்லும் போது அசோகமித்திரனின் கதை சொல்லல் அந்தக் கதையில் பங்கேற்ற ஒரு கதாபாத்திரம் பேசுவது போல உள் மனிதனாக நின்று பேசியது.

அங்கேதான் சினிமா உலகத்தின் ஒரு பங்கெடுப்பாளராக அசோகமித்திரன் எழுதியிருப்பார். சுஜாதா ஒரு பார்வையாளராக சினிமாவுலகம் பற்றி எழுதி இருப்பார்.

– எழுத்தாளர் இந்திரன்

You might also like