இறுதிக்கட்ட தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

வழக்கத்தைவிட வெப்பத்தின் சூடு அதிகரித்திருப்பதைப் போலவே, பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.

தனிப்பட்ட வசைகள் முன்பிருந்ததைவிட வாக்காளர்கள் கவலைப்படும் அளவிற்கு விழுந்திருக்கின்றன.

மைக்கிற்கு முன்னால் சொற்களாலேயே பரஸ்பரம் பிராண்டுவது நடக்கிறது. 

அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றி கடுமையாகப் பேச, பதிலுக்கு முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இன்னும் சில திமுக தலைவர்களும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அனல் பறக்கும் வெய்யிலிலும்கூட இவர்களுடைய பேச்சில், கொச்சை நெடி அடிக்கிறது. 

உண்மையிலேயே கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சி எதைச் செய்திருக்கிறது? எதைச் செய்ய மறந்திருக்கிறது? என்பது குறித்த உருப்படியான ஆய்வு நுணுக்கத்துடன் கூடிய விமர்சனம் இங்கு முன் வைக்கப்படவில்லை. 

அதேமாதிரி, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைப் பற்றியும், அர்த்தமுள்ள விமர்சனங்கள் பொதுவெளியில் பரிமாறப்படவில்லை. 

இந்தளவுக்கு பிரச்சாரத்தின்போது இயல்பில் இருந்தாலும் தேசியக் கட்சிகள் எந்தளவுக்கு தங்களுடைய பிரச்சாரத்தை முன் வைத்திருக்கின்றன?

பாஜகவை மத ரீதியான ஆதிக்கச் சக்தியாக முன்னிறுத்திய பிரச்சாரத்தையே காங்கிரஸ் முன் வைத்திருக்கிறது.

அதேமாதிரி காங்கிரசின் 2-ஜி உள்ளிட்ட அந்தக் காலச் செயல்பாடுகளையே தூசி தட்டி பாஜக பேசிக் கொண்டிருக்கிறது. 

இடையில், தொகுதி மறுவரையறை தொடர்பாகவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாகவும் கூட்டப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தைப் பற்றியும், அக்கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட சட்ட மசோதா பற்றியுமான பேச்சுக்கள் எல்லாம் தனி.

இப்படி தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் இம்மாதிரி பிரச்சனைகளையே அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய தமிழ்நாட்டின் தற்போதைய அசலான தேவைகள் என்ன? அவற்றை எப்படி நிறைவேற்றுவது?

5 லட்சம் கோடிக்கும் அதிகமான மாநிலக் கடனை எப்படித்தான் குறைப்பது?

வெறுமனே இலவசங்களின் பக்கம் பார்வையைத் திருப்பாமல், பெருவாரியான மக்களை பாதித்துக் கொணடிருக்கும் மதுவிலக்கு அதிகமான அளவுக்கு விநியோகமாகிக் கொண்டிருக்கும் போதைப் பழக்கத்தின் பரவலான விநியோகம் பற்றியோ,

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறியிருக்கும் பாலியல் புகார்கள் பற்றியோ, வடமாநிலத்தவர்கள் ஒரு கோடிக்கும் மேல் அதிகமான எண்ணிக்கை தமிழகத்திற்குள் நுழைந்து இங்குள்ள தமிழக இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பில்லாமல், தவித்து வருவதைப் பற்றியோ,

ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி விதிப்புகளால் நிலை குலைந்துபோன சிறு,குறு தொழில்கள் பற்றியோ, கடலோரத்தில் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்கள் பற்றியோ, யாரும் பிரச்சாரத்தில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

மாறாக பொதுமக்களுக்கு முன்னால், சைக்கிள் ஓட்டிக் காட்டுகிறார்கள். பல்வேறு கோவில்களுக்குள், மசூதி, சர்ச்சுகளுக்குள் உள்ளே நுழைந்து – பக்திப் பழமாக மலர்ச்சியான முகத்துடன் கேமராக்களுக்குமுன் சிரிக்கிறார்கள். 

தன்னுடைய பிரச்சார வேனுக்குப் பின்னாலோ, முன்னாலோ விடாப்பிடியாக பின்தொடர்ந்து அடிபடும் இருசக்கர வாகன ஓட்டிகளை கனிவானப் பார்வையுடன் கைதூக்கிவிட்டு தோளைத் தட்டி ஆறுதல்படுத்தி, அதே கேமராக்களுக்கு முன்னால் கருணையுடன் புன்னகைக்கிறார்கள்.

பிரச்சாரத்திற்குச் செல்லும் பலர், எதிர்படும் டீக்கடைகளில், கூட்டமாகக் கூடி டீ வாங்கி அருந்தி, டீயின் ருசியை முகத்திற்கு வரவழைத்து பரவசம் காட்டுகிறார்கள்.

சிலர், ஆங்காங்கே இருக்கும் கரும்பு ஜுஸை தானும் வாங்கிக் குடித்து மற்றவர்களையும் உறிய வைக்கிறார்கள். 

பெண்களில் சிலர் இடையில் தென்படும் அசைவக் கடைகளில், மீன் குழம்பை ஒரு கிண்டு கிண்டுகிறார்கள். சிரமப்பட்டு புரோட்டாவைத் திருப்பிப் போடுகிறார்கள்.

நல்லவேளையாக இடையில் தென்படும் எந்த டாஸ்மாக் கடைக்குள்ளேயாவது வேட்பாளர்கள் நேரடியாக புகுந்து, அங்கிருந்த பாட்டில்களை, தெருவில் போகிறவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்து வள்ளலாக மாறவில்லை.

இப்படி பொதுமக்களில் ஒருவனாக தங்களைக் காட்டிக் கொள்ள முயலும், பல வேட்பாளர்களும் அவர்களை தேர்ந்தெடுக்க இருக்கும் வாக்காளர்களுக்கு முன் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை உணர, எந்த வேட்பாளரும் சாக்கடைக் குழிக்குள் இறங்கிப் பார்க்க துணிவார்களா?

பட்டாசுத் தொழில் உடல் சிதறி இறக்கும் தொழிலாளர்களின் வலியை உணர, அதே பட்டாசு ஆலைக்குள் ஒரு மணி நேரமாவது அதன் கந்தக நெடிக்குள் தங்களை நுழைத்துக் கொள்வார்களா?

மீனவர்களின் துயரத்தை உணர அவர்களோடு படகில் ஏறி கடலில் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை செல்வார்களா?

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற சமூகத்தினரை அழைத்துக் கொண்டு அதே கோவிலுக்குள் பக்தி உணர்வுடன் செல்லத் துணிவார்களா? என்பதெல்லாம்  இங்கே மறக்கடிக்கப்பட்ட கேள்விகள்.

இதேமாதிரி, ஒவ்வொரு ஆற்றுப் படுகைகளிலும் களவாடப்படும் மணல் பற்றியோ, மலைகளையே திருடும் கயவர்களைப் பற்றியோ, கனிம வளங்களைத் தொடர்ந்து சூறையாடும் கும்பலைப் பற்றியோ அல்லது திட்டமிட்டு கள்ளச் சாராயம், போதை வஸ்துக்களை புழக்கத்தில் விடுகிற புண்ணியவான்கள் பற்றியோ யாரும் பேசுவதற்குக் கூட இங்கு துணிந்திருக்கிறார்களா என்று பார்த்தால், தற்போதைய பிரச்சாரத்தின் வலிமைக்கான எல்லை பிடிபடும்.

அதேசமயம் தற்போதைய தேர்தலில் முக்கியமான அம்சம் கூட்டணிகளில் உருவாகியிருக்கிற ஒருவித இறுக்கம்.

அதிமுக – பாஜக கூட்டணியிலாவது பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் ஒருசேர ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அந்த கூட்டணிப் பிணைப்புக் கூட இல்லை. காங்கிரசுடன் கூட்டணி உருவாவதற்குள் அவர்களுக்கிடையே இருந்த புகைச்சல், பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்திலும் கூட தீரவில்லை.

பக்கத்திலுள்ள கேரளாவிற்கும், புதுச்சேரிக்கும் உற்சாகத்துடன் பிரச்சாரத்திற்கு போய்வந்த ராகுல்காந்தி அதே உற்சாகத்துடன் தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

கடைசி நேரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு ராகுல்காந்தி நேரடியாக வந்து ஆஜர் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும், திமுக தலைவரான ஸ்டாலினுடன் இணைந்து எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. 

இதேவிதமான கூட்டணியில் ஒன்றிணைப்பு இல்லாத ஒரு தன்மை விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகளிடமும் நீடிக்கிறது.

இதற்கு முன்பும் பல தேர்தல்களில் அவர்கள் ஒரே மேடையில் ஒருங்கிணைந்து கைகளை உயர்த்தி, ஒரு நேச சிரிப்பு சிரிப்பார்கள். அவை ஊடகங்களிலும் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், அப்படிப்பட்ட கூட்டணிப் பரவசங்கள் தற்போது இல்லை.

தலைமையே இப்படி இருக்கும்போது, வெவ்வேறு கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் எப்படி ஒருங்கிணைந்து மற்றக் கட்சிகளுக்கு வேலை செய்வார்கள்.

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்கின்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட மாட்டார்களா?

இதற்கிடையில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறபடி 8000 ரூபாய்க்கான கூப்பனை வாக்காளப் பெருமக்கள் தேர்தலுக்கு முன்பே எதிர்பார்த்திருக்கிறார்கள். 

திமுக எம்எல்ஏ ஒருவர் பிரச்சாரத்திற்கு சென்றபோது, தாழ்த்தி வைக்கப்பட்ட சழூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி 8000 ரூபாய் கூப்பனை தருவீர்களா என்று கேட்டபோது, அப்படி கேட்டதற்காகவே அந்தப் பெண் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண் அதே மன உளைச்சலில் வீட்டிற்குப் போய் தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறார். 

இது ஒரு உதாரணம் என்றாலும், ஜனநாயகம் உருவாக்கிக் கொடுக்கும் அதிகாரத்தை எந்தளவுக்கு ஒரு பிரதிநிதி தவறாக எடுத்து, ஒரு உயிர்போகும் அளவிற்கு செய்திருக்கிறார் என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டியிருக்கிறது.

இறுதியாக, தவெக தலைவரான விஜய் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரத்திற்குச் செல்ல நினைத்தாலும், அதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டதாக, அவர்களே சொன்னாலும், அது நம்பும் விதத்தில் இல்லை.

திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்திற்கு அவர் சென்றபோது, அவர் பேசுவதற்கேற்றபடி உரிய நேரத்தை தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் வழங்கியிருந்த போதும், அதை தவெக தலைவரான விஜய் திட்டமிட்டபடி பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பேச வாய்ப்பிருந்தும், எதனாலோ அவர் பேசாமல் அந்த வாக்காளர்களை கடந்து சென்றார்.

அவர் எந்தளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார்? எத்தனை சதவீத வாக்குகளைப் பெறுவார் என்கின்ற கேள்விகள் எல்லாம், மே-4ம் தேதி வரை அலையடித்துக் கொண்டுதான் இருக்கும்.

– லியோ

You might also like