எந்தவொரு கலை வடிவமும் சம்பந்தப்பட்ட கலைஞரின் சிந்தனைகளைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வீச்சு கொண்டதாக இருக்க வேண்டும்.
அதன் வழியே நிகழும் விவாதங்களும் செயல்பாடுகளும் அந்தக் குரலை மக்களுக்கானதாக மாற்றும்.
அப்படியோர் அனுபவத்தைத் தர முயல்கிறது, சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றுவரும் உள்மெய் தலித் அழகியல் கலைக்காட்சி.
நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘வானம் கலைத் திருவிழா’வின் ஒருபகுதியாக, இதில் நாடு முழுவதிலு மிருந்து 36 கலைஞர்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
நூற்றாண்டு கால வரலாற்றிலும் சரி; சமகாலத்திலும் சரி; தலித் சமூகத்தினர் எதிர்கொண்ட ஒடுக்குதல்கள் எப்படிப் பட்டவை என்பதை ஆவணப்படுத்துவதாகப் பெரும்பாலான படைப்புகள் அமைந்திருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் பெண் விடுதலை, கல்வியின் மகத்துவம், பாலினச் சமத்துவம், கருத்துச் சுதந்திரம், வரலாற்றுத் திரிபுகள் எனப் பலவற்றையும் இந்தப் படைப்புகள் பேசுகின்றன.
கணவனை இழந்த பெண்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் சாவித்திரிபாய் புலே கல்வி புகட்டியதை ஒரு தேவதையின் பரிசாக உணரவைத்துள்ளது.
நீராதாரங்கள், தேநீர்க் கடைகள் என அன்றாடச் செயல்பாடுகளில் தலித் மக்களின் அனுபவங்கள், பல்வேறுபட்ட நிலப்பரப்புகளில் பாவிக் கிடக்கிற எளிய மக்களின் வாழ்வு,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுயரப் போராடிய அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நினைவுகூர்தல் ஆகியவற்றைப் பேசுகின்றன.
புத்தரின் முகத்தைச் செதுக்குகிற முயற்சியில் வீணான கல் சிதறல்களைக் கண்ணாடிப் பெட்டியில் நிறைத்து, ஒவ்வொரு துகளுமே புத்தர்தான் என்கிறது ஒரு படைப்பு.
ஜடைமுடிகளுக்கு நடுவே கிடக்கும் மல்லிகை, மிளகாய், செம்பருத்தியைக் கொண்டு யுகம்யுகமாகப் பெண்கள் கடந்து வந்த வாழ்வைப் பேசுகிறது இன்னொரு படைப்பு.
சில வெறும் ஓவியங்கள், சிற்பங்கள் என்றில்லாது கலவையான கலைப்படைப்புகளும் இவற்றில் உண்டு.
அருவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு, பல்வேறு சிந்தனைகளை அமைதியாக நமக்குள் எழுப்புகின்றன.
மிகச் சிலவற்றில் கண்ணாடி இடம்பெற்றிருப்பது, அப்படைப்பில் வெளிப்படும் சமூகத்தில் நாமும் ஓர் அங்கம் என உணர வைக்கிறது.
வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு பட்ட வகையில் ஒடுக்குதலை எதிர்கொள்கிற மனிதர்களை, சிந்தனைகளை, திரிக்கப்பட்ட வரலாறுகளை நம் முன் வைக்கிற இப்படைப்புகள், இதுநாள்வரை அவற்றைப் பற்றி அறியாதவர்க்கும் அவற்றை உணர்ந்தோருக்கும் ஒருசேர வலியைத் தருகின்றன.
இதுபோன்ற படைப்புகளில் எளிமை கூடும்பட்சத்தில், அவற்றின் வீச்சு எதிர்பார்ப்புக்கு மேலானதாக இருக்கக்கூடும்.
ஏப்ரல் 18 அன்று இந்தக் கலைக்காட்சி நிறைவடைகிறது.
– உதயசங்கரன் பாடகலிங்கம்
நன்றி: இந்து தமிழ் திசை