“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருவள்ளுவரின் வரிகளை நாம் பள்ளிகளில் மனனம் செய்கிறோம்.
ஆனால், அந்தக் குறளின் உயிரான உழவையும், மண்ணையும், விதையையும், விவசாயியையும் நமது கல்வி முறை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறதா?
இதுதான் இன்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
மாணவர்கள் அணுவைப் பற்றி பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவைப் பற்றி விவாதிக்கிறார்கள். விண்வெளியில் மனிதன் குடியேறுவது பற்றிக் கட்டுரை எழுதுகிறார்கள்.
ஆனால், தினமும் சாப்பிடும் ஒரு பிடி சோறு எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், அவர்களுக்குப் புத்தக அறிவைத் தாண்டிய வாழ்க்கை அறிவு இல்லை.
இது மாணவர்களின் குறையல்ல. கல்வி முறையின் குறை.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் என அனைத்தையும் கற்பிக்கும் நாம், மனித வாழ்வின் முதல் அறிவியலான “உணவு உருவாகும் அறிவியலை” கற்பிக்க மறந்துவிட்டோம்.
மண்ணைத் தொடாத கைகள், விதையை விதைக்காத விரல்கள், நாற்றை நடுவதற்கு நடக்காத கால்கள், விவசாயியின் வியர்வையை அறியாத மனங்கள் இவையெல்லாம் நாளைய சமுதாயத்தின் மிகப் பெரிய பலவீனமாக மாறப்போகின்றன.
நகரங்களில் வளரும் பல குழந்தைகளுக்கு, நெற்கதிரைப் பார்த்த அனுபவம்கூட இருக்காது.
அரிசி, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருள் அல்ல; வயலில் விளையும் நெல்லிலிருந்து கிடைக்கிறது என்பது கூட பலருக்குத் தெரியாத உண்மையாகிவிட்டது.
90களில் பிறந்த அம்மாக்கள் தொடங்கி, பின்தலைமுறை அம்மாக்கள், தங்களது குழந்தைகள் மண்ணில் விளையாடினால் அழுக்காகிவிடும், தொற்று ஏற்படும் எனச் சொல்லி மண்ணை எதிரியாக உருவகப்படுத்துகிறார்கள்.
மண்ணை தொடவிடுவதில்லை, வெறும்காலால் நடக்கவிடுவதில்லை. இப்படியிருந்தால் மண்ணின் மதிப்பை இந்தச் சமூகம் எப்படிப் புரிந்துகொள்ளும்?
அதனால்தான், தமிழ்நாடு ஒரு புதிய கல்விப் புரட்சியைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வயதுக்கேற்ற வகையில் ”விவசாயம் மற்றும் இயற்கை வாழ்க்கைக் கல்வி” என்ற பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
இது மதிப்பெண் பெறுவதற்கான பாடமாக இருக்கக் கூடாது. வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான பாடமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறிய தோட்டம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் ஒரு விதையை விதைக்க வேண்டும். ஒரு செடியை வளர்க்க வேண்டும். ஒரு மரத்தை வளர்க்க வேண்டும். பருவமழைக்காகக் காத்திருக்க வேண்டும்.
அறுவடையின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். விவசாயியுடன் ஒரு நாள் வயலில் உழைக்க வேண்டும். அப்போதுதான் உணவை வீணாக்கும் மனநிலை மாறும். இந்த அனுபவம் காலநிலை மாற்றம் குறித்த அறிவையும் கற்றுத்தரும்.
இன்று உலகமே விவசாயத்தை புதிய பார்வையில் பார்க்கிறது.
காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம், துல்லிய வேளாண்மை, செங்குத்து விவசாயம் என வேளாண்மை நாளைய உலகின் மிகப்பெரிய அறிவியல் துறையாக வளர்ந்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் வேளாண்மையில் முதலீடு செய்கின்றன.
பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் வேளாண்மையில் பெரும் முதலீடு செய்துள்ளனர்.
ஏனெனில், எதிர்காலத்தின் மிகப்பெரிய செல்வம் தங்கமோ, பெட்ரோலோ அல்ல; உணவுதான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
ஆனால், விவசாயத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் நமது மாணவர்களுக்கு, விவசாயத்தைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருப்பது வேதனையான முரண்பாடு.
ஒவ்வொரு மாணவரும் விவசாயியாக மாற வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒவ்வொரு மாணவரும் உணவின் மதிப்பை அறிந்த மனிதனாக வளர வேண்டும். அந்த மனிதனை உருவாக்குவது பள்ளியின் கடமை.
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், இதுபற்றிய அறிவிப்பு இடம்பெற்றால், புதியதொரு சிந்தனைக்கு அது தொடக்கமாக அமையும்.
பள்ளிக் கல்வித் துறை, விவசாயத்தை செய்முறை வாழ்க்கைக் கல்வியாக அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளியும் ஒரு கற்றல் தோட்டமாக (Learning Garden) மாற வேண்டும்” என்ற தொலைநோக்குத் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும். வாய்ப்புள்ள பள்ளிகளில் கற்றல் தோட்டம் அமைவதை கட்டாயமாக்க வேண்டும்.
அந்தத் தோட்டம் வெறும் செடிகள் வளர்க்கும் இடமாக இருக்கக் கூடாது; மண்ணின் மதிப்பையும், உணவின் அருமையையும், உழைப்பின் உயர்வையும், இயற்கையின் சமநிலையையும் கற்றுத்தரும் திறந்தவெளி வகுப்பறையாக இருக்க வேண்டும்.
ஒரு பள்ளித் தோட்டத்தில் விதைக்கப்படும் சிறிய விதை, நாளை ஒரு மரமாக மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் மனசாட்சியாகவும் வளரும்.
ஏனெனில், ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகுப்பறைகளில், மண்ணின் மணம் வீசத் தொடங்கும் நாளில் தமிழ்நாட்டில் புதிய வரலாறு தொடங்கும்.
- அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.