ரங்கசாமிக்கு மீண்டும் வாய்ப்பு: புதுச்சேரி தேர்தல் நிலவரம்!

தமிழகத்துடன் சேர்ந்தே புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை அந்த வழக்கத்தை, தேர்தல் ஆணையம் மாற்றி விட்டது. 9 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

யூனியன் பிரதேசம் என்பதால் எல்லா விஷயங்களுக்கும் புதுச்சேரி மத்திய அரசை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

இதனால் மத்தியில் ஆளும் கட்சிக்கே, மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது, அந்த கட்சி இதுவரை 6 முறை ஆட்சியில் இருந்துள்ளது.

காங்கிரசில் இருந்து என். ஆர். ரங்கசாமி பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் எனும் கட்சியை எப்போது ஆரம்பித்தாரோ, அப்போதே காங்கிரசின் கதை முடிந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

அங்கு மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது.

இந்த தேர்தலில் ஆரம்பத்தில் தமிழகத்தை போலவே நான்கு முனை போட்டிதான் நிலவியது.

ஆனால் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தி உள்ளதால் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தவெகவும் அங்கு தனித்து நிற்கிறது. இரு கட்சிகளுக்கும் இளைஞர்கள் ஆதரவு உள்ளது. அந்த கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெறும்.

கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒன்றை இ.கம்யூனிஸ்ட்டுக்கும், தி.மு.க.வுக்கு ஒதுக்கிய 14 தொகுதிகளில் ஒன்றை வி.சி.க-வுக்கும் கொடுக்க முடிவானது.

ஆனால், அதை மீறி 22 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.

இதில் திமுக போட்டியிடும் 5 தொகுதிகள் அடங்கும். காங்கிரசின் ஏடாகூட நடவடிக்கையால் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி உடைந்து நொறுங்கி விட்டது.

கூட்டணியில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பனிப்போர் நிலவுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, புதுச்சேரியில் முதலமைச்சராக இருந்தவர் நாராயணசாமி. மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இந்த தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் நாராயணசாமி ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்சினை எல்லை மீறிச்சென்றது.

மாறாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய அளவில் பிரச்சினை இல்லை.இந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

என்.ஆர்.ரங்கசாமி இந்த தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்.

இப்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெல்லும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

என்.ஆர். ரங்கசாமி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் அவர்கள் அடித்து சொல்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.

  • பாப்பாங்குளம் பாரதி.
You might also like