வேட்பாளர்கள் தேர்வு: பாஜக, காங்கிரஸில் கலகம்!

வேட்பாளர் பட்டியலைக் கடைசியாக அறிவிப்பது, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். இந்த முறையும் அதுவே நிகழ்ந்தேறி இருக்கிறது.

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை மனு தாக்கல் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் பாணியை, இந்த தடவை பாஜகவும் கடை பிடித்துள்ளது. அந்தக் கட்சியும் நேற்றுதான் வேட்பாளர்களை அறிவித்தது.

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இரு கட்சிகளிலும் பிரச்சினை. வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரு கட்சிகளிலும் கலகக்குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலூர் தவிர எஞ்சிய 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது.

கட்சித் தொண்டர்கள் பலருக்கு பட்டியலில் திருப்தி இல்லை. ‘கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் முணு முணுப்புகள் எழுந்துள்ளன.

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.

இதனால் தனது எதிர்ப்பை கரூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

ஜோதிமணியின் பதிவு:

“வேட்பாளர்கள் முன்பே முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி, வருகிற, தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது வேதனையளிக்கிறது.

இருபது, முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது கட்சிக்கு வந்து சில நாட்களே ஆன,  கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், சட்டப்பேரவைக் கட்சி தலைவர், பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ,

தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்த பிறகே விரிவாகப் பேசலாம்” என ஜோதிமணி குமுறலுடன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ‘அரோகரா’ :

தமிழகத்தில் பாஜகவை அடிமட்டம் வரை கொண்டு சென்ற அண்ணாமலைக்கு சீட் கிடைக்கவில்லை.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழக பாஜக-வின் முகம் முற்றிலுமாக மாறியது. அறிக்கை அக்கப்போர் அரசியலை கைவிட்டு, நேரடியாக களத்தில் இறங்கி போராடினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தைப் பெற அண்ணாமலையில் உழைப்பே காரணம்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில், அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிள்ளது.

அண்ணாமலை மட்டுமல்லாது, அவரது ஆதரவாளர்களும் ‘கட்டம் ‘கட்டப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை அன்&கோவுக்கு டிக்கெட் கிடைக்காததன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கைங்கர்யம் இருப்பதாக அவர்களின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like