“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்?’’
– கவியரசர் கண்ணதாசன்
1998-ம் ஆண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கிற கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் சென்ற – மதுரை நண்பர், கவிஞர் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவரான ஆர்.சொக்கலிங்கத்திற்கும், பிரபல ஜோதிடர் சிவல்புரி சிங்காரத்திற்கும் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
அப்போது குமுதத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
ஊருக்குள் அவர்களோடு நுழைந்ததும் கண்ணதாசனின் பாடல் வரிகள் எழுதப்பட்ட மலையரசி அம்மன் கோவில், அவர் அமர்ந்திருக்கும் திண்டு என்று கவிஞரை நினைவுபடுத்தும் பலவற்றைப் பார்த்துக் கொண்டு போனபோது, கவிஞரின் வீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சி பரவியது.
சுற்றிலும் பச்சையான முள்மரங்களுடன் கவிஞர் வாழ்ந்த வீடு, காலத்தால் பாழடைந்து போய், முகப்புத் துண்டு மட்டும் வாழ்ந்த வீட்டுக்கான சரிந்த அடையாளமாக மிஞ்சியிருந்தது.
“கண்ணதாசன் பிறந்து வாழ்ந்த வீட்டைப் புதுப்பிக்க மாட்டார்களா?’’ என்கிற ஆதங்கம் அங்குள்ளவர்களுக்கு இருந்தது. கவிஞரின் ரசிகர்களுக்கும் இருந்தது.
சென்னை திரும்பிய பிறகு அடுத்த வார குமுதம் இதழில் – முதல் பக்கத்தில்,
“இது புகழ்பெற்ற ஒரு கவிஞன் வாழ்ந்த வீடு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? என்று கவிஞரின் சிறுகூடல்பட்டி வீட்டின் புகைப்படம் வெளியானது.
இதழின் உள்ளே ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் கவிஞரின் வீட்டைச் சீரமைக்க யாராவது முன்வருவார்களா என்கிற ஆதங்கம் வெளிப்பட்டிருந்தது.
சிறு பொறி தான்.
முதல்வராக இருந்த கலைஞரின் பார்வைக்குப் போனது. அரசு தரப்பில் ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, கவிஞரின் உறவினர்கள் தரப்பில் “நாங்களே வீட்டைப் புதுப்பித்துக் கொள்கிறோம்’’ என்று பதில் வந்திருக்கிறது.
கவிஞரின் சகோதரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.சீனிவாசனின் குடும்பத்தினரே அதே இடத்தில் வீட்டைக் கட்டிக் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.
பல மொழிகளில் 60 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறவரான சீனிவாசன் ‘சௌத் இந்தியன் ஃபிலிம் சேம்பர்’-இல் தலைவராக இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தைத் துவக்கியவர்.
அவரும், கண்ணதாசனும் ஊரை விட்டு வந்து, பிரபலம் அடைந்த பிறகும் சிறுகூடல்பட்டியில் இருந்த அவர்கள் வளர்ந்த வீடு காலத்தினால் சிதிலமடைந்த நிலையில் தான் இருந்தது.
இவ்வளவுக்கும் சென்னை அயனாவரத்தில் கவிஞரின் தந்தை சாத்தப்பன் குடும்பத்தினருக்கு இருந்த நிலம் மட்டுமே முந்நூறு ஏக்கர் என்றால், அப்போதிருந்த மதிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு நொடிந்து போனது அவர்களுடைய குடும்பம். வேறொரு குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டுப் போனார் முத்தையா என்ற கண்ணதாசன்.
பிறகு சகோதரர்கள் இருவருமே திரையுலகப் பக்கம் போய்விட்டார்கள்.
கவிஞர் இறுதி நாட்களில் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டபோது கூட, ஊரிலிருக்கும் மலையரசி அம்மன் கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
“சாத்தப்பன் பெற்ற மகனைத் தமிழ் பாட வைத்தனை சிறுகூடற்பட்டி வளர் தங்க மலையரசி உமையே” என்று இதே அம்மனைப் பற்றிப் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் கவிஞர் தன்னுடைய பால்ய வயதில்.
அந்த வீட்டைப் புதுப்பிக்க சிறுகூடல்பட்டிக்குச் சென்றபோது ஊர் மக்கள் வைத்த கோரிக்கை.
“கவிஞருக்குச் சிலை ஒன்றை அமைக்க வேண்டும்”.
வீட்டைப் புதுப்பிக்கும் வேலைகள் துவங்கி நடந்தன. பிரபல சிற்பியான மணி.நாகப்பா கவிஞரின் மார்பளவுச் சிலையை உருவாக்கினார். ஊருக்குள் நுழைகிற இடத்தில் அவருடைய நினைவு வளைவும் அமைக்கப்பட்டது.
2001-ல் சிறுகூடல்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட வீடு, சிலைத் திறப்பு, நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஊரே களைகட்டியிருந்தது. பிரபலங்கள் பலர் திரண்டிருந்தார்கள். கவிஞரின் ரசிகர்கள் குவிந்திருந்தார்கள்.
ஊரின் எல்லையில் இருக்கும் நினைவு வளைவுக்கான அடிக்கல்லை நாட்டியவர் புதுக்கோட்டை மன்னரான தொண்டைமான்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எஸ்.ராமச்சந்திரன், ராணி சாருபாலா தொண்டைமான், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, கமலா திரையங்க உரிமையாளர் வி.என்.சிதம்பரம், திண்டுக்கல் லியோனி என்று பலர் வந்திருந்து வாழ்த்த திறக்கப்பட்டது கண்ணதாசனும், அவருடைய சகோதரர் சீனிவாசனும் பிறந்து வளர்ந்த இல்லம்.
வீடு, சிலை அனைத்திற்கும் அப்போது ஆன செலவு 25 லட்சம் ரூபாய்.
“கவிஞர் இங்கு பிறந்தது 1927 ஜூன் 24 ஆம் தேதி.
கலைஞரும் கவிஞரும் மிக நெருக்கமானவர்கள் என்பதை உலகறியும். அவருடைய நினைவாக காரைக்குடியில் ஒரு மணிமண்டபத்தை எழுப்பினார் கலைஞர்.
கவிஞர் பிறந்த வீடு இந்த நிலையில் இருக்கிறது என்கிற செய்தி வெளிவந்ததும் அது பற்றி விசாரித்திருக்கிறார் கலைஞர்.
“சிறுகூடல்பட்டியில் உள்ள வீட்டை நாங்கள் சீரமைக்கிறோம் என்றதும் கலைஞர் தலையிடவில்லை.
அந்த வீட்டை 2001 ஜூன் 24 அன்று, கவிஞரின் பிறந்த நாளுக்குள் புதுப்பிக்க முடிவு செய்தார் என் கணவரான ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்.
வீட்டிற்குள்ளேயே ஒரு நூலகம். அதில் கவிஞரின் நூல்கள். அவர் பயன்படுத்திய பொருட்கள். உள்ளேயே ஒரு பதிவேடு. பார்வையிட வருகிறவர்கள் அதில் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டுப் போகிறார்கள்.
பிரபலமான பலர் இந்த வீட்டைப் பார்வையிட்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.
கவிஞருடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் உறவினர்கள் ஊருக்குச் செல்கிறோம்.
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை வரும் பலர், கவிஞர் பிறந்த ஊரையும், வீட்டையும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வருகிறார்கள்” என்கிறார் கவிஞரின் அண்ணன் சீனிவாசனின் மருமகளான திருமதி.ஜெயந்தி கண்ணப்பன்.
சிறுகூடல்பட்டிக்கு இன்று செல்கிறவர்கள் கவிஞரின் புன்னகைத்த சிலை, அவர் வணங்கிய மலையரசி அம்மன் கோவிலோடு, அவர் தவழ்ந்த மரத்தொட்டில், பயன்படுத்திய நாற்காலிகள், அமர்ந்த ஊர்த் திண்ணை என்று கவிஞரின் பசுமை நிறைந்த நினைவுகளுக்குள் சென்று வர முடியும்.
– மணா