விஜயகாந்த் வழியில் விஜய்யா?

விஜய்யின் தவெக பற்றி தான் எத்தனை எத்தனையோ வதந்திகள் இங்கு ரெக்கைக் கட்டி  பறக்கின்றது.

தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்கள் என்று எல்லாவற்றிலும் விஜய் முதலில் காங்கிரஸோடு கூட்டணி வைக்கப் போகிறார் என்றும், அடுத்து பாஜக-அதிமுக கூட்டணியுடன் சேரப் போகிறார் என்றும் பலதரப்பட்ட விவாதங்கள் நடந்தது.

அண்மையில், ‘அப்படி யாருடனும் கூட்டணி கிடையாது  234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்பதை’ விஜயே அறிவித்ததும், இதுவரை பொதுவெளியில் பறக்க விடப்பட்ட வதந்தியான பலூன்கள் அனைத்தும் காற்றில்லாமல் கீழிறங்கிவிட்டன.

தான் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி அவர்களுக்கான குறைந்தபட்சமான தேர்தல் செலவை ஏற்கும் நிலையில் விஜய்யும் தவெக தலைமையும் இருக்கிறதா? என்பது மிகப்பெரிய கேள்வி.

இதைவிட நேரடியான ஒரு தேர்தல் கள அனுபவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தைத் துவக்கி முதல் முறை சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், தேர்தலில் அப்படி தனித்துப் போட்டியிடுவதற்கு முன்பு கூட்டணி வைப்பதற்காக என்னென்ன முயற்சிகளெல்லாம் அவர் எடுத்தார் என்று அவருக்கு நெருக்கமாக இருந்த சில பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.

உண்மையில் அவர் அப்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பெரிதும் ஆசைப்பட்டார்.

அதற்காக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க அவருடன் சிலர் வந்துப் பேசி அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்தார்கள்.

ஆனால், இடையில் நடந்த குளறுபடிகளால் அந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்தது.

அந்த சமயத்தில் பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி இருந்தவரை நேரடியாகச் சந்தித்தபோது பல விஷயங்களைச் சொன்னார். ஒரு மணி நேரம் வரை தனித்து மனம் விட்டுப் பேசினார்.

கட்சியை ஆரம்பித்து, தான் சந்தித்து வருகிற நடைமுறை சிரமங்களை வரிசையாக விவரித்தார்.

கட்சி செலவுகளுக்கு யாரிடமிருந்துக் கடனை வாங்கி இருக்கிறேன் என்பதைக் கூட வெளிப்படையாகச் சொன்னார்.

தன்னிடம் பேச வந்த ஒரு உளவுத்துறை அதிகாரி, தன்னிடம் ஒரு விதமாகவும் தான் பேசியதாகவும் ஜெயலலிதாவிடம் போய் திரித்து வேறொன்றை சொல்லிவிட்டதாகவும் மனம் வெதும்பிய நிலையில் பேசினார்.

அப்போது அதிமுக கூட்டணி அங்கம் வகித்த மதிமுகவை விட குறைந்த தொகுதிகள் தனக்கு கிடைத்தால் போதும் என்றும் கூடச் சொன்னார்.

ஆனால், அவர் ஆதங்கத்துடன் அன்று வெளிப்படுத்திய பேச்சுக்கள் எவையும் போயஸ் கார்டனுக்கு முறையாக போய்ச் சேரவும் இல்லை, கூட்டணியும் அமையவும் இல்லை.

தனித்து களமிறங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆட்பட்டு, தேர்தல் களத்தில் பலமான பிரச்சாரத்தை செய்து 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் விஜயகாந்துக்கு அமைந்தது.

தற்போது அதே நிலையில் தான் தவெக தலைவர் விஜயும். பெரும்பாலும் கூட்டணி சேர வாய்ப்புகள் கூடி வந்தும், சேராமல் தனித்து நிற்கிறார். இதன் மூலம் தன்னுடைய அசலான வாக்கு வங்கி என்ன என்பதை அவர் கண்டறிய முடியும்.

அதே சமயம் தன்னுடைய வாக்குப் பிரிப்பு மூலம் திமுகவை சிரமம் இல்லாமல் ஜெயிக்க வைக்கவும் முடியும்.

ஆக, சினிமாவில் விஜயகாந்த் வழியில் புகுந்தது போல அரசியலிலும் அவர் மாதிரியே தனித்துக் களம் காண்கிறார் விஜய்.

– லியோ

You might also like