கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ்.
இதன்மூலம் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இடதுசாரி அரசு பதவியில் இல்லை என்ற சூழலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையும், மாநிலத் தலைமையும் இணைந்து எடுத்த சில நடவடிக்கைகள்தான் முக்கிய காரணம்.
முடிவுக்கு வந்த உள்கட்சி மோதல்:
உள்கட்சி மோதல்களுக்கு பெயர்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக அதையெல்லாம் மறந்து, ஓரம்கட்டி கட்சியின் வெற்றிக்காக உழைத்ததே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
அதிலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அதிகாரத்தை நெருங்கும்போது, தங்களுக்குள் யாருக்கு பதவி என்று அடித்துக்கொள்வது கேரள காங்கிரஸின் நெடுநாள் பழக்கம். கடந்த 2021-ல் அதுதான் நடந்தது.
அந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற்றது.
ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குள் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் எழ, இடதுசாரிகள் மீண்டும் ஆட்சி அமைத்தனர்.
இம்முறை அப்படி நடந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் கவனமாக இருந்தனர்.
கட்சியின் மூத்த தலைவர் சசி தரூருடன் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நீண்ட ஆலோசனை நடத்தி, கருத்து வேறுபாடுகளைக் களைந்தனர்.
சசிதரூர் பிரச்சாரக் குழுவின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தற்போதையை எம்பிக்கள் யாரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனால் சில தலைவர்களிடையே எழுந்த எதிர்ப்புகளை ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் சமாளித்தனர்.
இளம் தலைவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். பிரச்சாரத்தை வி.டி.சதீசன் பார்த்துக்கொண்டார்.
காங்கிரஸ் போட்ட சமூக கணக்கு:
கேரளாவைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம்.
இதில் இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்யும் பொறுப்பை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி பார்த்துக் கொண்டது.
கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சன்னி ஜோசப்பை மாநிலத் தலைவராக நியமித்ததால், அவர்களின் வாக்குகள் உறுதிப்பட்டன.
இந்துக்களை பொறுத்தவரை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் அதிகம்.
அதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னித்தாலா ஆகியோரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இப்படி மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைத்தது காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணம்.
தேர்தல் வாக்குறுதிகள்:
கேரள மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளும் அக்கட்சியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேரளப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
மூத்தோருக்கான மாதாந்திர பென்ஷன் 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்பங்களுக்கான மருத்துவ இன்ஷூரன்ஸ் தொகை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
அந்த வாக்குறுதிகளும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அடுத்த முதல்வர் யார்?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலில் வென்றதைப் போல் முதல்வரை தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமாக இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

அங்கு முதல்வர் பதவிக்கான போட்டியில் இப்போது மூன்று பேர் இருக்கிறார்கள்.
இவர்களின் முதலாமவர் வி.டி.சதீசன். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு, கட்சியை ஆரம்பத்தில் இருந்து கட்டமைப்பதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
எதிர்கட்சித் தலைவராக இவர் நியமிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புத்தெழுச்சி ஏற்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார முகமாக இருந்த வி.டி.சதீசனை முதல்வராக்க வேண்டும் என்பதே பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம்.
காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டாளியான முஸ்லிம் லீக் கட்சியும் இவரது பெயரையே பரிந்துரைக்கிறது.
ஞானப்பழத்துக்காக முருகன் உலகையே சுற்றிவர, தாய் தந்தையை சுற்றிவந்து வினாயகர் அந்த பழத்தைப் பெற்றதை ‘திருவிளையாடல்’ படத்தில் பார்த்திருப்போம்.
அந்த வகையில் இங்கு வி.டி.சதீசன் முருகன் என்றால், கே.சி.வேணுகோபால் வினாயகராக இருக்கிறார்.
டெல்லியில் ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோரைச் சுற்றிவரும் கே.சி.வேணுகோபால் முதல்வர் பதவி மீது கண் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்போதுள்ள 63 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 46 பேர் வேணுகோபாலை ஆதரிப்பார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
ரமேஷ் சென்னித்தாலா :
இந்த இருவருக்கும் இணையாக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவர் ரமேஷ் சென்னித்தாலா.
கேரளாவின் முன்னாள் உள்துறை அமைச்சரான இவர், 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளனர்.
கட்சியில் சீனியராக இருக்கும் ரமேஷ் சென்னித்தாலாவுக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
மொத்தத்தில் கேரள மாநிலத்தில் தேர்தலை எளிதாக வென்ற காங்கிரஸ் கட்சி, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் விழிபிதுங்கி நிற்கிறது.
- ராதா