கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றது முதல், கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டும் பிரச்சனை மீண்டும் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தேசிய கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி அணை கட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, கர்நாடக எல்லையில் தமிழகப் பேருந்துகளைத் தடுக்கும் அளவிற்கு அங்குள்ள சில அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெங்களூருக்குச் சென்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரைச் சந்திக்க இருப்பதாக வந்த தகவலுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சிகள், பாமக மற்றும் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் காவேரி பிரச்சனைக்காக காமராஜர் மற்றும் எம்ஜிஆர் ஆட்சிக் காலங்களிலும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சென்னையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திய வரலாற்றுப் பின்னணியும் நினைவுகூரத்தக்கது.
தற்போது, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, எந்த மாநிலத்தின் அனுமதியும் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி தெரிவித்துள்ள கருத்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, காவிரிப் பாசன விவசாயிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முடிவெடுக்கத் தமிழக முதல்வர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையைக் கட்ட இயலாது என்று தெளிவாகச் சொல்லியிருந்த நிலையில், மத்திய இணை அமைச்சரின் தற்போதைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை தமிழகத்திற்கு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.
– யூகி