வாக்காளப் பெருமக்களுக்கு வந்த பெருஞ்சோதனை!

ஒரு வழியாக லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அண்மையில் தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 70 லட்சம் பேர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு விதத்தில் சொன்னால், தேர்தல் ஆணையம் ஒரு போகிப் பண்டிகையை நடத்தி முடித்திருக்கிறது. வழக்கமாக தமிழக வாக்காளர்களுக்கு முன் இரண்டு விரல்களைத்தான் பொதுவாக நீட்டுவார்கள்.

அதில், ஒன்றைத்தான் வாக்காளர்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்தாக வேண்டும். இதுவரை இப்படித்தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது.

தற்போது அப்படி அல்ல. திமுக கூட்டணி முடிந்தவரைக்கும் சிறு சிறு கட்சிகளுடனும் கூட ஏதோ ஒரு விதத்தில் சமாதானம் செய்து தனது கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ சேர்த்துக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைத்து, தாய்க் கழகத்தில் இணைந்ததாக பொறுப்புடன் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

திமுகவுடன் நீண்ட காலக் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய கூட்டணி இருப்பை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

அதற்கு அடுத்து அதிமுக-பாஜக கூட்டணியில் நடக்கும் உள்குத்துக்களுக்கும் வெளிக்குத்துகளுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது.

அந்தக் கூட்டணியில் சேர்வதாக இருந்த பலர் பின்வாங்கி இருக்கிறார்கள். எதிரணியில் போய் சேர்ந்து புன்னகைக் கமழப் பேட்டிக் கொடுக்கிறார்கள்.

இன்னும் அந்தக் கூட்டணியில் சேர்வார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது அதிமுக-பாஜக கூட்டணி.

பாஜக பலரை தனது கூட்டணியில் சேர்க்க முயற்சித்தாலும் கூட, எடப்பாடி பழனிசாமி அந்த கூட்டணிக்கான கதவை இறுக்கமாக மூடிய நிலையிலேயே வைத்திருக்கிறார். கூட்டணிக்குள் சேர்வதற்கு தனியாக 144 தடை போட்டிருக்கிறார்.

கூட்டணி சேர்வதில் அவர் கிழித்தக் கோட்டை மீறி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரவாரமாக விஜயால் துவக்கப்பட்ட தவெக மிகக் குறுகிய காலத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.

விஜய் சொல்கிறபடி பலரும் அவரை அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தனிப்பட்ட ரீதியிலும் குறிவைத்து தாக்குகிறார்கள். பாஜக ஒருபுறம் அழுத்தம் கொடுக்க, மற்ற கட்சிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கரூர் வழக்கில் துவங்கி, வருமான வரி வழக்கு, இன்னும் குடும்ப ரீதியான வழக்கு என்று பல வழக்குகள் அவரைச் சுற்றிலும் வரிசையாக நிற்கின்றன.

இதையும் மீறி இதுவரை முடக்கப்பட்டிருக்கிற ‘ஜனநாயகன்’ படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசாமல் அவ்வப்போது கால இடைவெளிவிட்டு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு எந்தளவுக்கு வாக்குச் சதவீதம் கிடைக்கும் என்பதைப் பற்றி பல தொலைக்காட்சிகளில் விவாதிப்பவர்கள், ஆளுக்கு ஒரு ஆரூடத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியோ, தேர்தல் கள அரசியலில் முக்கியமான பேசுபொருளாக மாறி இருக்கிறார் விஜய்.

மற்றொருபுறம் வழக்கமான கையை உயர்த்தி, கரகரத்த முழக்கத்தோடு 234 தொகுதிகளுக்கும் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் நாம் தமிழர் தலைவரான சீமான்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, புரட்சித்தாய் என்று அவரது தொண்டர்களால் பாசத்துடன் அழைக்கப்படுகிற சசிகலா, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரசியலில் புகுந்து, தனிக் கொடியை தென் தமிழகத்தில் நிலைநாட்டியிருக்கிறார்.

கட்சியின் பெயரையும் விரைவில் அறிவிப்பதாக சொல்லி இருக்கிற சசிகலா, பொதுவெளியில் எடப்பாடி பற்றி வெளிப்படையாக பேசிய உண்மை, அவருடைய அணி தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் டெல்டா பகுதிகளிலும் தென் தமிழகத்திலும் ஓரளவுக்கு சமூக வாக்குகளைப் பெற்றுத் தர உதவும்.

இது தவிர பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவித்த கையோடு, “ஒத்த கருத்துடையோர்களுக்கு தேர்தலில் ஆதரவு கொடுப்போம்“ என்று சொல்லி புதிய கட்சியைத் துவக்கி இருக்கிறார்.

இனி சிறிது நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் தமிழக வாக்காளர்களைச் சுற்றித்தான் எத்தனைக் கட்சிகள் சுற்றிவளைக்க முயல்கின்றன.

சிலர் உடனடியாக 5000 கொடுக்கிறார்கள். சிலர் தேர்தல் முடிந்தபிறகு அட்வான்ஸ் புக்கிங் போல 10000 ரூபாய் கருணையாகவோ அல்லது உதவியாகவோ கொடுப்பதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இனிமேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் வாக்காளர்களுக்கு முன்னால் வரிசை கட்டி நிற்கலாம்.

தற்போதைய நிலையில் பல விரல்கள் தமிழக வாக்காளர்களின் முன் வெவ்வேறு முழக்கங்களுடன் நீண்டிருக்கின்றன.

இதற்கிடையில் தமிழக வாக்காளப் பெருமக்கள் இதை நம்பி, அல்லது நீட்டிய விரல்களுக்கு இடையில் எந்த விரலைத் தொட்டு வாக்கு இயந்திரத்தில் பதியப் போகிறார்களோ?

– ரா. செல்வக்குமரன்

You might also like