பிரதமர் வருகையும் திருப்பரங்குன்றம் கோயிலும்!

அண்மையில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கும் மதுரைக்கும் வந்துசென்ற அனுபவங்களிலிருந்து சில துளிகள்:

புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, “புதுச்சேரியின் வளர்ச்சிக்கு இரட்டை இஞ்சின்களாக எந்தளவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். புதுச்சேரியின் பொருளாதாரத்தை முன்னேற்றியிருக்கிறோம்”

– என்கின்ற புள்ளிவிவரங்களை உற்சாகத்துடன் தொகுத்து அளித்தார். அடுத்து பேச வந்த புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி துணிச்சலாக ஒரு போட்டு போட்டார். 

 “என்னதான் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு புதுச்சேரிக்கு செய்திருந்தாலும் நாங்கள் பல வருடங்களாக 13 தீர்மானங்களை இயற்றி, கோரிக்கை விடுத்த புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து இன்னும் ஏன் அளிக்கப்படவில்லை” என்று பிரதமரை முன்னால் வைத்தபடியே அவர் பேசியபோது பெரும் கைதட்டல்.

அடுத்து, பிரதமர் மோடி மதுரைக்கு சில ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தும் சில திட்டங்களைத் துவக்கி வைத்துவிட்டு, அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திற்கு வந்தார்.

அப்போது, கூடியிருந்த கூட்டத்தில் அடிக்கடி ‘பாரத் மாதா கி ஜே’ என்கின்ற முழக்கங்கள் உரத்துக் கேட்டன.

மேடையில் வீற்றிருந்த எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் பேச அழைத்தபோது “நாளை அமைய இருக்கிற ஆட்சியின் முதல்வர் வேட்பாளர்” என்றதோடு மட்டுமல்லாமல்

“இரண்டு அமாவாசைகளுக்குப் பிறகு வந்த பவுர்ணமியே” என்கிற விஷேச டைட்டிலோடு எடப்பாடி அழைக்கப்பட்ட விதம் வித்தியாசமானதாக இருந்தது.

தன்னுடைய வழக்கமான பேச்சைவிட அதிவேகமாகப் பேசினார் எடப்பாடி. பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக மீதும் காங்கிரஸ் மீதும் அடுக்கடுக்காக முன்வைத்தவர்,

“அதிமுக தலைமையிலான ஆட்சி தான் அமையும்” என்பதை இருமுறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

அவரது பேச்சுக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைதட்டல்களுடன் கூடிய வரவேற்பு இருந்தது. 

அடுத்து பேச வந்த பிரதமர் மோடி, பேச்சின் துவக்கத்தில் பல்வேறு நபர்களை வரிசைப்படுத்திக் கூறியபோது, இடையில் அண்ணாமலையைப் பற்றிக் குறிப்பிட்டபோது பலத்த கைதட்டல்.

பேச்சின் துவக்கத்திலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றிப் பேசிவிட்டு, அடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வந்ததை தெய்வீக அனுபவமாக உணர்வதாகச் சொன்னார்.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றச்சொல்லி போராட்டம் நடந்தபோது உயிரிழந்த இளைஞர் பூர்ண சந்திரன் வீட்டிற்குச் சென்று, அவருடைய மனைவியையும் இரு குழந்தைகளையும் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டபோது கூட்டத்தில் அங்கங்கே சலசப்பு தெரிந்தது.

“அவருடைய ஆத்மா முருகனுடைய திருவடிக்குச் சென்று சேரும்” என்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனையை இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி அது குறித்துப் பேசியது ஊடகவியலாளர்களால் விஷேசமாக கவனிக்கப்பட்டது.

அவருடைய வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாஜகவின் சில தலைவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்று பேசியிருந்தனர்.

அதை வழிமொழிவதைப் போல மதுரைக்கு வந்து பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

வடக்கே அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் நடத்தி, கோயிலையும் கட்டி முடித்தவர்கள், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முருகனை அரசியலுக்கான பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவடைவதற்குள் இன்னும் என்னென்ன செயல்பாடுகள் முருகனின் பெயரால் நடக்குமோ தெரியவில்லை. 

– மணி அமுதன்

You might also like