இராமநாதபுரத்து மனிதரான கந்தர்வன், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார்.
தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் ஓசூர், சேலம், பரமக்குடி என பணி மாற்றத்தினால் பல்வேறு ஊர்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, இறுதிக் காலத்தில் தென்சென்னையில் இருந்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயல்பாடுகளில் நீண்ட அக்கறை செலுத்தினார். உடல்நிலை சரியில்லாத சூழலிலும் இடையறாது வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் நண்பர்களோடு உரையாடிக் கொண்டுமிருந்தார்.
இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு தனது கருத்தை முன்வைப்பதில் அவருக்கு அலாதி ஆர்வம்.
அவரது நட்பு வட்டம் எல்லையற்றிருந்தது. அவர் எல்லாரிடமும் பிரியத்துடன் பழகுவது போலவே, அவர் மீதும் எல்லாருக்கும் பிரியம். இளைஞர்களை உற்சாகப்படுத்துவதை அவர் ஒரு பணியாகவே கொண்டிருந்தார்.
கந்தர்வனின் உடல்நிலையை அவரது நிழல்போல பின் தொடர்ந்து நிமிடத்துக்கு நிமிடம் கண்காணித்துக் கொண்டிருந்தவர் அவரது துணைவியார்.
வீடாக இருந்தாலும், இலக்கிய மேடையாக இருந்தாலும் கந்தர்வன் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறபோதெல்லாம் “பேசுனது போதும். நிறுத்திக்கிங்க’’ என சைகையினால் அன்போடு கடிந்து கொள்வார்.
கந்தர்வனும் சிரித்துக்கொண்டே “உத்தரவு வந்தாச்சு, நிறுத்திக்கிறேன்’’ என்பார். அவரது பழகுதலில் உயிர்ப்பும் ஈர்ப்பும் எப்போதும் இருக்கும்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில் அவரது இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட உரையாடலின்போது, மிகுந்த ஈடுபாட்டோடு கதை சொல்வது மாதிரி, தன் வாழ்வனுபவங்களை ரசித்து ரசித்து நுணுக்கி நுணுக்கிச் சொல்லிக்கொண்டு போனார்.
அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு உரையாடலை நாம் நிதானமாக நிகழ்த்திக் கொண்டு போனாலும், அவருக்கென்ன எப்போதும் போல சிரிப்பும் கும்மாளமும்தான்.
அவ்வப்போது உற்சாக மிகுதியால் அதிர்ந்து சிரித்து, துணைவியாரிடமிருந்து ‘உத்தரவு’களை வாங்கிக்கொண்டே மெல்ல மெல்ல இந்த உரையாடலை நகர்த்திய அனுபவம் மிக இனிமையானது.
கந்தர்வனின் இறுதி உரையாடலிருந்து ஒரு பகுதி.
உங்களின் பிரபலமான கவிதை வரிகளுள் ஒன்று, ‘நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை’’ என்பது.
பொதுவாக, உங்கள் கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் சார்ந்த பதிவுகள் ஏராளமாக இருக்கின்றன. இப்படியான கவிதைகளை எழுதத் தூண்டிய சூழல் எது?
29 வயதிலேயே மதிப்புமிக்க அரசாங்க ஆபீசர் ஆகிவிட்டேன். தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்தேன். வீட்டுக்கு வந்தால் கடிதங்கள் பார்ப்பது, வருகிற தோழர்களோடு பேசுவது…
சிந்தனாவாதியாகவும் தலைவராகவும் என்னை என் மனைவியிடம் காட்டிக்கொள்ள நான் சிரமப்படவே இல்லை. அது இயல்பாகவே வந்திருந்தது.
இந்த நிலையில், தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு நான் சிறை சென்று வந்தேன். இதன்பின் 19 மாதங்கள் சஸ்பென்சனில் வீட்டில் இருக்க நேர்ந்தது.
அப்போதுதான் என் மனைவியின் அன்றாட வேலைகளையும் அவலங்களையும் உற்றுப் பார்க்க முடிந்தது.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் என் துணி, அவள் துணி, குழந்தைகள் துணி எல்லாவற்றையும் அள்ளி கிணற்றில் போட்டு துவைக்க ஆரம்பித்தேன். இதுதான் நான் பெண்களை உற்றுப் பார்த்து உணர ஆரம்பித்த விதம், நிகழ்வுகள்.
இடதுசாரி இயக்கத்தில் ‘தியாகம் செய்’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். நான் பெரிய தியாகங்கள் எல்லாம் செய்து கொண்டிருப்பதாய் மனதில் கர்வப்பட்டுக் கொண்டிருந்தேன்.
அவையெல்லாம் என் மனைவியின் வேலைகளையும், துயரங்களையும் பார்த்து, ‘புஸ்’ என்று ஆகிப்போனது. அவளே பெரிய தியாகியாக எனக்குத் தெரிந்தாள். என் சஸ்பென்சனின் விளைவு என்னைவிட அவளையே அதிகம் தாக்குவதாக அறிந்தேன்.
அந்தச் சமயம் விருதுநகரில் ‘ஜனநாயக மாதர் சங்க’ மாநில மாநாடு நடைபெற்றது. அதற்காக ஒரு வாரம் முன்பே ஒரு நீண்ட கவிதையை எழுதினேன்.
அதன் ஒவ்வொரு வரியையும் நான் மேடையில் வாசிக்க வாசிக்க உழைக்கும் பெண்கள் “ஓ”வென்று கை தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றார்கள்.
அந்தக் கவிதையில் உள்ளதுதான் நீங்கள் குறிப்பிட்ட “நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை; ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’’ போன்ற வரிகள்.
இதன்பின் இயல்பாகவே நான் பெண்கள் குறித்து கூடுதல் அக்கறையோடும் கவலையோடும் பொறுப்போடும் எழுதி வருகிறேன்.
என் கவிதைகளுள் ‘கயிறு’ பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஞானபீடமும் அதனை மொழிபெயர்த்திருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து ‘பொய்விதிகள்’ என்றொரு கதையை எழுதியிருந்தீர்கள்.
இதே பிரச்னையை மையமாகக் கொண்டு ‘நல்லாதான் இருக்கிறேன்’ என்றொரு பிரபலமான கவிதையையும் எழுதியிருக்கிறீர்கள். இவை உங்கள் வாழ்க்கை அனுபவப் பதிவுகளா…?
எனது பதினோரு வயதிலிருந்து பதிமூன்று வயது வரை என்னைக் கொண்டு போய், தொழில் கற்றுக்கொள்வதற்காக ஒரு மளிகைக் கடையில் விட்டார்கள்.
சித்தப்பா மகனும் அங்கு இருந்தான். நான் அங்கு பட்ட அவதிகளையும், அங்கிருந்து தப்பித்ததையும்தான் ‘பொய் விதிகள்’ கதையாக எழுதியிருக்கிறேன். அது என் சொந்த அனுபவம்தான்.
அதேபோல, ஓட்டலில் எச்சில் துடைக்கிற பையனாக பணி செய்த ஒரு பையனைப் பற்றியதுதான் ‘நல்லாதான் இருக்கிறேன்’ கவிதை.
நான் கடையில் வேலை செய்த காலத்தில், படிக்கவேண்டும் என்கிற ஆவலில், என் கடை முதலாளி கண்டபடி அடிப்பதாகவும், கெட்ட வார்த்தையில் திட்டுவதாகவும் கற்பனையாக, பொய்யாக வாரம் ஒரு கடிதம் அப்பாவுக்கு எழுதினேன்.
அதனால் என்னை வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டார் அப்பா. அந்தக் கடிதங்களில் இருந்த கற்பனையும், கதை ஜோடிப்பும் பின்னர் கதை எழுத எனக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.
அப்பாவைப் பற்றி நிறைய கதைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை உங்கள் அப்பாவைப் பற்றிய நிஜ பாதிப்புகளா…?
அப்பா! எல்லாரையும் போல அவர்தான் என்றைக்கும் எனக்கு ஹீரோ. அவரைப் போல நான் இன்னும் ஆகவில்லை என்றே நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு கதை ‘தராசு’, பத்து வருடங்களுக்கு முன் தினமணிக் கதிரில் வெளிவந்தது.
அவர் சைவர். எல்லாத்திலும் அவர் தராசுதான். எப்பவும் கதர் சட்டைதான். காந்தி போல உப்பு இல்லாத சைவ சாப்பாடு. நாங்களும் அப்படித்தான் சாப்பிடவேண்டும்.
‘கொல்லாமை’ பற்றி உள்ளூர் வாத்தியாருக்கு இவர் பாடம் எடுப்பார். அப்படிப்பட்டவர் தன் மனைவியை மட்டும் அசைவமாக இருக்க அனுமதித்தார். தன் பெண்டாட்டிக்காக மீனைப் பிடித்துக் கொன்றுப் போடுவார்.
அதுதான் ‘தராசு’ கதை. அவருடைய இன்னொரு செயலே ‘அப்பாவும் மகனும்’ கதை. ‘தீராநதி’யில் வெளிவந்தது.
‘துண்டு’, ‘சாசனம்’ போன்ற சில கதைகளில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறீர்களே…?
என் தாத்தா காலத்தில் எங்கள் வீட்டு வாசலில் தலித் மக்களுக்கு நிகழ்ந்த அவமானங்களை நான் அறிவேன். அதற்கு, சிறுபிள்ளையாய் இருந்தபோது நானே சாட்சியாய் இருந்தேன்.
பின், பொதுவுடைமைத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டபோது அவர்களுக்கு நேர்ந்த அவமானங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை என் அனுபவங்களினூடே சிறுகதைகளாக எழுதினேன்.
உங்களின் முக்கியமான கதைகளில் ஒன்று ‘சீவன்’. அந்தக் கதையைக்கூட அறிவொளி இயக்கத்தில் சிறு நூலாக வெளியிட்டு பல்லாயிரம் பிரதிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். அந்தக் கதையை நாத்திகப் பிரச்சாரம் செய்வதுபோல எழுதியிருந்தீர்களே…?
எங்க ஊர் முனியசாமிக் கதை அது. இப்போதும் முனியசாமி கையில் அரிவாளோடு துடியான தெய்வமாக எங்க ஊர் மக்களுக்கும், பக்கத்து பல ஊர் மக்களுக்கும் காட்சியளித்தும், பூசை, பலி முதலியவற்றை பெற்றுக்கொண்டும் இருக்கிறார்.
என் கதையில் மட்டுமே அவர் உடைபட்டு தூள் தூளாகக் கிடந்தார். கர்ணப் பரம்பரைக் கதைகள் குறித்த ஒன்றை எடுத்துப் போட்டு உடைக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். எங்களூர் துடியான தெய்வத்தையே தூக்கிப் போட்டு உடைத்தேன்.
இந்தக் கதையை ‘அன்னம்விடு தூது’ இதழில் வெளியிடுவதற்காக கவிஞர் மீராவுக்கு அனுப்பினேன். அவர் படித்து முடித்ததும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.
‘கந்தர்வன்…. இங்கு பெரியார் இல்லை. இருந்திருந்தால் ரயில் ஏறி இந்தக் கதையை அவர் கையில் கொடுத்துவிட்டு வந்திருப்பேன்’ என்று.
– புதிய புத்தகம் பேசுது, மே 2004
சந்திப்பு : சூரியசந்திரன்
நன்றி: புக் டே இதழ்