‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’.
– கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.
இதே தகவல் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தால், ‘யாருகிட்ட என்ன பேசுறீங்க’ என்று இதற்கு எதிராக மல்லுக்கட்டுபவர்களின் எண்ணிக்கை பெருந்திரளாக இருந்திருக்கும்.
ஒரு நகர வரைபடத்தில் ஆங்காங்கே புள்ளிகளாகத் தென்படும் அளவுக்குக் கருத்தரித்தல் மையங்கள் பெருகிவிட்ட இந்நாளில் அந்த தகவல் பீதியை அதிகப்படுத்தியது என்பது வருத்தம்தரும் விஷயம்.
கடந்த சில ஆண்டுகளாகவே விவாகரத்து நாடி நீதிமன்றங்களை நாடும் இந்திய ஜோடிகளில் பலர் உடல்நலக் குறைவு, கருத்து வேறுபாடு, புரிதலின்மை, உடலுறவில் அதிருப்தி, வீட்டில் வெறுமை போன்றவற்றையே காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த விஷயங்கள் அனைத்தும், இந்தியாவில் செக்ஸ் பற்றிய தகவல்களும் புரிதலும் போதிய அளவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கிட்டத்தட்ட அது போன்ற கேள்விகளால் உந்தப்பட்டு எழுத்தாளராக, கதைசொல்லியாக, புராணங்கள் மற்றும் உறவு நலம் தொடர்பான ஆலோசகராகச் செயல்பட்டு வருபவர் சீமா ஆனந்த்.
மிக முக்கியமாக, வாத்ஸ்யாயனர் எழுதிய ‘காமசூத்ரா’வின் கொ.ப.செ. போன்று விளக்கங்கள் அளிப்பது இவரது சிறப்பம்சம்.

அறுபத்து மூன்று வயதைக் கடந்தவர் சீமா ஆனந்த் என்பதனை வெண்மையான கூந்தல் பிரதிபலித்தாலும்,
இளம் நங்கையருக்குப் போட்டியாக உடல் அழகைப் பேணுவதன் வழியாக அதனைக் கேள்விக்குட்படுத்தி வருகிறார் இவர்.
அதுவே கூட, சமீபத்தில் இவரைச் சர்ச்சைகளில் சிக்க வைத்தது.
பத்திரிகையாளர் சுபாங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்ட் சேனலுக்கு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சீமா தெரிவித்த கருத்துகள், பொதுச்சமூகம் இன்றைய நாட்களில் ‘ச்சீ.. ச்சீ..’ என்று வெறுத்து ஒதுக்குகிற ரகத்தில் இருந்தன.
அதன் விளைவாக, இவரது புகைப்படங்களும் காணொளிகளும் விவரக் குறிப்புகளும் சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகின.
புதுடெல்லியில் பிறந்த சீமா, தற்போது தனது கணவர் மூன்று குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார்.
பன்னாட்டு நிறுவனங்களில் உறவு நலம், பெண்கள் பிரச்சனைகள், தனிமனித மேம்பாடு தொடர்பாகத் தொடர்ந்து வழிகாட்டுதல் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார்.
மிக முக்கியமாக, ஆண் பெண் அந்தரங்க உறவு குறித்த விளக்கங்களைப் புராணக் கதைகள், பண்டைய நூல்களில் இடம்பெற்ற தகவல்களோடு காமசூத்ராவையும் எளிய ஆங்கிலத்தில் வெளிப்படையாகத் தன் உரையில் இடம்பெறச் செய்வது இவரது பாணி.
சமீபத்தில் ஸ்க்ரால்.இன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தனது மூன்றாவது குழந்தை பிறந்தபோதே இதனை ஒரு பணியாகச் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்ததாகக் கூறியிருக்கிறார் சீமா ஆனந்த்.
காமம் தொடர்பாக இந்திய இலக்கியங்களில் உள்ள தகவல்களைப் பகிர முனைந்திருக்கிறார்.
“பெண்களுடைய அடையாளங்களை இந்தச் சமூகம் வரையறுத்திருக்கிறது. ஆனால், தனது உடல் மீது ஒரு பெண் கொண்டிருக்கிற உரிமை சரிவரச் சொல்லித் தரப்பட்டிருக்கிறதா என்று சிந்தித்தேன்.

எனது மகள் அப்படியொரு நிலையை எதிர்கொள்ளக்கூடாது என்று நினைத்தேன்.
அதன்பிறகே, இது பற்றிப் பேசவும் எழுதவும் ஆரம்பித்தேன்” என்கிறார் சீமா ஆனந்த்.
ஆனால், இதற்காக இவர் எதிர்கொண்டுவரும் எதிர்ப்பு கொஞ்சநஞ்சமல்ல. “இந்த வயசுல கோவில், குளம்னு சுத்தியலையாம, கண்டதையும் பேசுறது சரியா இருக்கா’ என்ற தொனியில் இவரைச் சுற்றி வட்டமிடுகின்றன பல ‘கமெண்ட்கள்’.
அவற்றில் சில, உயிருக்கே அச்சுறுத்தலை அளிக்கும் வகையிலும் உள்ளனவாம். ’நல்லவேளையா நான் இந்தியாவில் வசிக்கலை’ என்று அந்தக் கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார் சீமா.
எதிர்ப்புகளை மீறி இவரது கருத்துகளுக்குத் தனியாக ஒரு ‘ரசிகர் வட்டம்’ உள்ளது என்பதை உணர்த்துகிறது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள 15 லட்சம் பாலோயர்கள் எண்ணிக்கை.
அதற்கேற்றாற் போல ஊட்டச்சத்துகளின் அவசியம், பணிச்சூழல் அழுத்தம், போதைப் பொருட்களின் தாக்கம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவக் குறைவு, தாம்பத்தியத்தில் நீண்ட கால ஈர்ப்பு சரிவு எனப் பலவற்றைப் பேசுகிறது இவரது காணொளிகள்.
2017 மற்றும் 2025இல் இவர் எழுதியுள்ள நூல்களும் இதனை விலாவாரியாகப் பேசுகின்றன.
இந்தியச் சமூகத்தில் செக்ஸ் கல்வி அவசியம் என்று சொல்கிற மிகச் சிலரது கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன இவரது உரைகள், பேட்டிகள்.
முந்தைய தலைமுறை தொடங்கி இன்று வரை, ஆண் – பெண் உறவு குறித்த வழிகாட்டுதல்கள் பெரிதாக இல்லை என்பதே சீமாவின் அபிப்ராயம்.
“ஒரு உறவை எப்படி அமைப்பது? அதனை எவ்வாறு பேணுவது என்று இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது தனிப்பட்ட உறவு சிறப்பாக இருக்கக் கடுமையான உழைப்பைத் தர வேண்டியிருக்கும்.

சில நேரங்களில் உங்களது உறவு மோசமான நிலைக்குச் செல்லலாம்.
அப்போது உங்களது தனியறையிலும் சரி, இயல்பான உரையாடல்களும் சரி, சுமூகமான பந்தம் அமைகிறதா என்பதை அசைபோட வேண்டும்.
அடுத்ததாக, உறவுகளில் எல்லைகள் வகுத்துக்கொள்வது மிக முக்கியம். அதனை யாரும் சொல்லித்தர மாட்டார்கள்.
உங்களைத் தண்டனைக்கு உள்ளாக்குவதாகவோ அல்லது நீங்கள் தண்டனையை அளிப்பதாகவோ அந்த எல்லைகள் இருந்துவிடக் கூடாது. அதனைச் சரி செய்யப் பழகிக்கொண்டால், உறவென்பது இனிமையானதாக அமையும்” என்பது இவர் தரும் அறிவுரை.
திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தில் உறவினர்கள், தோழமைகளின் கிண்டல் கேலிகள் வழியே ஆண் – பெண் உறவு சார்ந்த கற்பிதங்கள் போதிக்கப்படுகிற சூழல் ஒருகாலத்தில் இருந்தது.
‘எதிலும் தூய்மைவாதம்’ என்றாகிவிட்டபிறகு, அந்த வழக்கம் அருகிச் சிறுத்து இன்று முற்றாகத் தேய்ந்திருக்கிறது. கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே இதுதான் நிலைமை.
அதன் விளைவாக, கோயில் கோபுரங்களிலும் மண்டபங்களிலும் பாலுறவை விளக்குகிற சிற்பங்கள் கலாசாரத்திற்கு எதிரானதாக நோக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில் சீமா ஆனந்த் போன்றவர்களின் கருத்துகள் நம் சமூகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு வழிகாட்டுதலாக அமையக்கூடும்.
ஒரு வலைப்பின்னல் போலப் பாவிப் பரவிப் பலரையும் சென்றடையக்கூடும்.
வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இச்சமூகத்திற்கு வழங்கப்படுவது அதற்குத்தானே..!
- சரோ