மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு!?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது ஆண்டாக இன்று (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இதன்மூலம் 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்ச்சர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது வித்தியாசமான புடவைகளை அணிந்து வருவது அவரது ஸ்டைல்.

அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிர்மலா சீதாராமன் எந்த வகை சேலையை அணிந்து வருகிறார் என்று பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது.

அதனால் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பார்வையை அவரது புடவையில் இருந்தே தொடங்குவோம்.

காஞ்சிப் பட்டில் வந்த நிர்மலா சீதாராமன்:

2019-ம் ஆண்டில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வந்தபோது தங்க பார்டர்களைக் கொண்ட இளஞ்சிவப்பு மங்கல்கிரி பட்டுப் புடவையை நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார்.

2020-ம் ஆண்டில் பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

இதேபோல 2021-ம் ஆண்டில் போச்சம்பள்ளி பட்டுப் புடவை, 2022- ம் ஆண்டில் ஒடிசாவின் பொம்காய் சேலையை அணிந்து வந்தார்.

2023-ம் ஆண்டு நிதிநிலை அறைக்கை தாக்கல் செய்யும்போது, கர்நாடகாவின் தார்வாட் பகுதியைச் சேர்ந்த கசுதி எம்பிராய்டரி வகை புடவையை அணிந்த அவர்,

2024-ம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் பிரபலமான கைவினைப் பொருளான காந்தா எம்பிராய்டரியுடன் கூடிய நீல நிற டஸ்ஸார் பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.

கடந்த ஆண்டில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வந்த நிர்மலா சீதாராமன், பிஹாரில் வடிவமைக்கப்பட்ட மதுபானி வகையிலான வெள்ளை நிற கைத்தறிப் பட்டுப்புடவை அணிந்து வந்துள்ளார்.

அதன் பார்டர் தங்க நிறத்தில் அமைந்துள்ளது.

அதில் மீனை கருப்பொருளாக கொண்டு எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுபானி கலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சேலையை நிர்மலா சீதாராமன் உடுத்தி இருக்கிறார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதாலோ என்னவோ நிர்மலா சீதாராமன் அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

பங்குச் சந்தை சரிந்தது ஏன்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த உடனேயே இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன.

சுமார் 1,547 புள்ளிகள் சரிந்து 80,722.94 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 495 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 24,825.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பாதுகாப்புக்கான முதலீடு அதிகமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், பாதுகாப்புக்கான முதலீட்டை அதிகரிக்காதது மற்றும் பட்ஜெட்டில் மூலதனச் செலவு எதிர்பார்த்ததைவிட குறைந்தது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிவடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திப்பது இது முதல் முறையல்ல என்றும்,

அடுத்தடுத்த நாட்களில் பங்குச் சந்தைகள் மீளும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவற்றுக்கெல்லாம் விலை குறையும்?

புற்றுநோய்க்காக இறக்குமதி செய்யப்படும் 17 அத்தியாவசிய மருந்துகளின் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால் புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோயைப் போல மேலும் 7 அரிய வகை நோய்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறையும்.

வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டணம் குறையும்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரிகளிலும் சில சலுகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால் வெளிநாடு சென்று படிப்பதற்கான மாணவர்களின் கல்விச் செலவு குறையும்.

மைக்ரோவேவ் ஒவன்கள், தோல் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளும் குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் விளையாட்டை ஊக்குவிக்க ‘கேலோ இந்தியா மிஷன்’ திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், விளையாட்டு உபகரணங்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சி உபகரணங்கள், அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் அடிப்படை கலால் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இவற்றின் விலையும் குறையும்.

எவற்றுக்கெல்லாம் விலை உயரும்?

மற்ற நிதிநிலை அறிக்கைகளுக்கு பிறகு உயர்ந்ததுபோலவே இந்த நிதிநிலை அறிக்கைக்கு பிறகும் சிகரெட், பீடி, பான் மசாலா, குட்கா ஆகியவற்றின் விலை உயரும்.

வருமான வரி செலுத்தும்போது வருமானம் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்தால், வரித் தொகையில் 100 சதவீதத்திற்குச் சமமான அபராதம் விதிக்கப்படும்.

காபிக் கொட்டைகளை வறுக்கும் இயந்திரங்கள், காபி தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் காபி விற்பனை இயந்திரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இந்த இயந்திரங்களின் விலை அதிகரிப்பதால் இனி காபியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வீடியோ கேம்களுக்கான கருவிகளுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை திரும்ப பெறப்பட்டுள்ளதால், வீடியோ கேம்களின் கட்டணம் அதிகரிக்கும்.

கடிகாரங்கள், மது உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கான விலை உயரும்.

தமிழ்நாட்டுக்கு கிடைத்தது என்ன?

தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடப்பதால், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இருப்பினும் பல்வேறு திட்டங்களுக்கு ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பயன்பெறும் வகையில் 500 நீர்தேக்கங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களும் பயன்பெறுவார்கள். கைத்தறித்துறையை மேம்படுத்தும் மகாத்மா காந்தி கைத்தறித் திட்டம் தமிழ்நாட்டுக்கு பெருமளவு பயனளிக்கும்.

தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஆதிச்ச நல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு, தமிழர்களின் பெருமையை உயர்த்துவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும்,

தென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதன் மூலம் தமிழகம் பெருமளவு பயன்பெறும்.

இதுதவிர மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்துக்கு கூடுதல் பயன் சேர்க்கும்.

பி.எம். சுதிர்

You might also like