125 ஆண்டுகள் வாழ விரும்பிய மகாத்மா காந்தி!

1948, ஜனவரி 30 – காந்தியை கோட்சே கொன்ற நாள்.

காந்தியின் இறுதி நாளன்று அவர் காலை 9.30 மணிக்கு காலை உணவை உண்டார். அதிக பார்வையாளர்களைச் சந்தித்தார்.

”எனது முக்கியமான கடிதங்களுக்கு இன்றே பதில் எழுத வேண்டும். நாளை நான் இருப்பேனோ இல்லையோ“ என்று காரியதரிசியிடம் ஏனோ சொன்னார்.

மாலை பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் சென்றபோது மணி 5-ஐக் கடந்து விட்டது. நேரமாகி விட்டது என்று மூக்குக் கண்ணாடி பெட்டி, ஜெபமாலை, நோட்டுப் புத்தகம், உமிழ்நீர் பாத்திரம் எல்லாவற்றையும் மனுபென் எடுத்துக் கொண்டார்.

மனு பென்னும், ஆபாபென்னும் இருபுறம் பிடித்துக்கொள்ள பிர்லா ஹவுஸ் தோட்டத்தை நோக்கி வேகமாக வந்தார் காந்தி.

கூட்டம் அவருக்கு வழிவிட, சில அடிகள் நடந்து சென்று கூட்டத்துக்கு கை கூப்பினார். அப்போது ஒரு பச்சை சட்டை மீது காக்கி கோட் அணிந்திருந்த ஒரு மனிதர் மனுபென்னைத் தள்ளிக் கொண்டு முன்னால் வந்தார்.

அப்போது மனுபென் கையிலிருந்த மூக்குக் கண்ணாடி பெட்டி, ஜெபமாலை ஆகியவை கீழே விழுந்தன. அந்த மனிதர் மகாத்மாவின் காலில் விழுவது போல கீழே குனிந்தார்.

மனுபென் அவரிடம் ”பாய் (சகோதரரே) ஏற்கனவே பாபுஜிக்கு பிரார்த்தனை தாமதமாகி விட்டது. வழி விடுங்கள்“ என்றார்.

அவர் பேசி முடிப்பதற்கு முன்னால் 3 குண்டுகள் தொடந்து சுடப்பட்டன.

ஒன்று அடிவயிற்றில், இரண்டு வலது மார்பில் பாய்ந்தன.

”ஹே ராம்…ஹே ராம்” என்றவாறு காந்தி கீழே விழுந்தார்.

அப்போது மாலை 5.12 மணி. கைகள் கூப்பிய நிலையிலேயே இருந்தன. அவரது வெள்ளைக் கம்பளி சால்வையில் ரத்தம் வழிந்தது.

காக்கி கோட்டு அணிந்திருந்த அந்த கொலைகாரன் நாதுராம் விநாயக் கோட்சே என்று பின்னாள் அறியப்பட்டான். காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

ஆனால், பிர்லா ஹவுஸ் தோட்டத்தில் மருத்துவர்கள் யாருமில்லை. தரை மீது கிடத்தப்பட்டவுடனே மகாத்மா காந்தி இறந்து விட்டார். அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 5 மாதங்களே ஆகியிருந்தன.

125 ஆண்டுகள் வாழ வேண்டுமென விரும்பினார் மகாத்மா காந்தி. ஆனால், 78 வயதில் கொலை செய்யப்பட்டார்.

– கலை விமர்சகர் இந்திரன்

You might also like