தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வைக் கண்டு “முன்னாடியே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே” என வருத்தப்படுபவர்களை இன்று எல்லா இடங்களிலும் பார்க்கிறோம்.
தங்க விலையேற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுவது போலந்து.
போலந்து மத்திய வங்கி (NBP) 2023-ம் ஆண்டில் மட்டும் சுமார் 130 டன் தங்கத்தை வாங்கியது. 2022-ல் இருந்து ரஷ்ய அரசும், ரஷ்ய நிறுவனங்களும் பொதுமக்களும் 282 டன் தங்கத்தை வாங்கியுள்ளனர்.
2024-ன் தொடக்க மாதங்களில் இந்தியாவின் வெள்ளி இறக்குமதி மிகத் தீவிரமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் உலக அளவிலான மாதாந்திர நுகர்வில் பெரும் பகுதியை இந்தியா வாங்கியது.
இந்தியா மற்றும் சீனா தான் தற்போது உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன.
தங்கத்தை ஃபாரெக்ஸ் ரிசர்வ் ஆக வைத்திருப்பது கடினம். சீனா, அரேபியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்க வேண்டுமெனில் டிஜிட்டல் முறையில் டாலரை அனுப்பலாம்.
தங்கத்தை எப்படி அனுப்ப முடியும்? கப்பலில் ஏற்றிப் பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும் அல்லது தங்கத்தை அடிப்படையாக வைத்து டிஜிட்டல் கரன்சி உருவாக்கலாம்.
அதனால் தற்போது பிரிக்ஸ் நாடுகள் ஒரு புதிய முறையை ஆலோசித்து வருகின்றன. அதாவது, தங்கம் அந்தந்த நாட்டு வங்கிகளிலேயே இருக்கும்.
ஆனால், அதன் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் டோக்கன் அல்லது கரன்சியைப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துவது.
ஆனால், சீனாவோ அல்லது இந்தியாவோ தங்கத்தை அடிப்படையாக வைத்து ஒரு கரன்சியைக் கொண்டு வந்தால், அதைப் பிற நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது அந்த நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கையைப் பொறுத்தது.
உலகில் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கம் சுமார் 2,72,000 மெட்ரிக் டன். தற்போது தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $5,000ஐத் தாண்டியுள்ள நிலையில், உலகத் தங்கத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் $20 டிரில்லியன் முதல் $27 டிரில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் செய்யும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் (Trade) மொத்த மதிப்பு சுமார் $30 டிரில்லியன் முதல் $32 டிரில்லியன் ஆகும்.
ஆக, உலகில் உள்ள அத்தனை தங்கத்தையும் திரட்டினாலும், அது ஓராண்டு உலக வர்த்தகத்தைக் கூட முழுமையாக ஈடுகட்டப் போதாது.
சர்வதேச வர்த்தகம் நொடிக்கு நொடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் தங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது.
நாம் வர்த்தகம் செய்யும் வேகத்திற்கு ஏற்பத் தங்கத்தை வெட்டி எடுக்க முடியாது. இதனால் வர்த்தகத்திற்குத் தேவையான பணப்புழக்கம் (Money supply) பற்றாக்குறை ஏற்படும்.
உலகில் உள்ள தங்கத்தில் பெரும்பகுதி ஒரு சில நாடுகளிடம் (அமெரிக்கா, ஜெர்மனி, சீனா) மட்டுமே உள்ளது.
அமெரிக்காவிடம் மட்டும் சுமார் 8,133 டன் தங்கம் உள்ளது. நாம் டாலரைத் தவிர்ந்துவிட்டுத் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டால், தங்கம் வைத்துள்ள நாடுகளே மீண்டும் ராஜாவாக இருக்கும்.
டாலர் என்பது ஒரு டிஜிட்டல் எண். அதை நொடியில் உலகிற்கு மாற்றலாம். ஆனால் தங்கத்தை மாற்ற கோல்ட் ஸ்வாப்ஸ் (Gold Swaps) அல்லது டிஜிட்டல் டோக்கன்கள் தேவை. இதற்கு அனைத்து நாடுகளும் ஒரு பொதுவான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், அது தற்போதைக்குச் சவாலானது.
ஆக, தங்கத்தின் விலை ஏற்றம் தற்காலிகமானதுதான். தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு செலவு செய்யாமல் இருக்கவும் முடியாது.
சர்வதேச வர்த்தகத்துக்குப் பயன்படுத்துகையில் தங்கம் மீண்டும் சந்தையில் புழக்கத்துக்கு வந்துதான் தீரும். விலை அப்போது கட்டுக்குள் வரும்.
இந்தச் சூழலில், நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் பெரிய அரசுகள், மத்திய வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் நகர்த்தும் சந்தையில் நேரடியாகப் போட்டியிட முடியாது.
அதனால் சந்தையின் குறுகிய கால உச்சங்களைக் கணிக்க முயல்வதை விட, நீண்ட கால திட்டமிட்ட முதலீடுதான் சிறந்த வழி. சிறு முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வழி என்னவென்றால், தொடர்ந்து முறையான முறையில் இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் (Index Funds), தங்கம், நிலம் போன்ற சொத்துகளில் படிப்படியாக முதலீடு செய்வதே.
முக்கியமான விஷயம் என்னவென்றால், சொத்துகளை விலை உச்சத்தில் இருக்கும்போது வாங்குவதல்ல; விலை சமநிலையாக அல்லது குறைவாக இருக்கும்போது திட்டமிட்டு வாங்குவது.
சந்தையின் உச்சத்தில் ஓடிப் பிடிப்பது முதலீடு அல்ல, அது உணர்ச்சி சார்ந்த சூதாட்டம். அதனால் சந்தையைக் கணிக்க முயல்வதற்குப் பதிலாக, நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே விஷயம் — திட்டமிட்ட முதலீட்டு ஒழுக்கம்.
எனவே உண்மையான முதலீடு என்பது அமைதியானது, திட்டமிட்டது, உணர்ச்சியற்றது. தொடர்ந்து முறையாக முதலீடு செய்யுங்கள். விலை குறைந்தபோது வாங்குங்கள். உச்சத்தில் வாங்க வேண்டாம்.
இதுவே நீண்ட காலத்தில் நிதி பாதுகாப்பையும் செல்வ வளர்ச்சியையும் தரும்.
~ நன்றி: நியாண்டர் செல்வன்.