கூடைப்பந்து விளையாட்டு எப்படி உருவானது என்பதைப் பற்றி சில நாட்களுக்கு முன் பார்த்திருப்போம்.
அதே ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் 1892-ம் ஆண்டில் கூடைப்பந்து விளையாட்டை ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், அக்கல்லூரியில் அவரிடம் மாணவராக இருந்த வில்லியம் ஜி.மோர்கன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுதான் வாலிபால்.
கூடைப்பந்து விளையாட்டில் மாணவர்கள் பந்தை கடத்திச் செல்லும் சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலும், இவ்விளையாட்டை ஆட மாணவர்கள் அதிக ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருந்ததாலும், கூடைப்பந்து ஆட்டத்தை வில்லியம் ஜி மோர்கன் விரும்பவில்லை.
அதற்கு பதிலாக மாணவர்கள் அதிக அளவில் ஆற்றலை செலவழிக்காமல், அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சிக்கு உதவும் வகையில் ஒரு விளையாட்டை உருவாக்க விரும்பினார்.

அப்படி ஒரு விளையாட்டை உருவாக்குவதைப் பற்றி அவர் பல ஆண்டுகள் சிந்தித்துள்ளார்.
பின்னர் அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும், உள் விளையாட்டு அரங்கில் ஆடும் புதிய விளையாட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தினார்.
அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால்.
கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து, டென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வலை, கைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை மற்றும் பேஸ்பால் விளையாட்டில் இருந்து சில விதிகள் என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து 1895-ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் ‘மிண்டோனெட்’ என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டு, மிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும், ஒய்எம்சிஏ அங்கத்தினரிடமும் பிரபலமடைந்தது.
பின்னாளில் ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர். ஆல்பிரட் ஹல்ஸ்டெட், இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால்’ என்று பெயரிட்டார்.
1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன.
வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம். இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும்.

வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இரு அணிகளும் தலா ஒரு செட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் 15 புள்ளிகளைக் கொண்ட 3-வது செட் போட்டி நடத்தப்படும்.
வாலிபால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும், அதன் மொத்த எடை 280 கிராம்தான்.
வாலிபால் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் பந்தை எதிர்புறத்துக்கு தட்டி விடுவதற்காக, போட்டி நேரத்தில் சராசரியாக 300 முறையாவது குதிக்கவேண்டி இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
அதனால் இதை ஆடும் வீரர்களுக்கு சிறந்த உடற்பயிற்சி கிடைக்கிறது.
மற்ற நாடுகளில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வாலிபால் போட்டிகள் தொடங்கியபோதிலும், இந்தியாவில் 1951-ம் ஆண்டு இந்திய வாலிபால் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட பிறகே இந்த ஆட்டம் பிரபலமடைந்தது.
பல ஆண்டுகள் தொடர்ந்து ஆடப்பட்டு வந்தாலும், 1964-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்ட பிறகுதான் வாலிபால் விளையாட்டுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டிலும் வாலிபால் போட்டி இடம்பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் உள்ளரங்கில் ஆடுவதற்காக வாலிபால் விளையாட்டு உருவாக்கப்பட்டாலும், பின்னாளில் கடற்கரை பகுதிகளில் ஆடுவதற்கு ஏற்ற வகையில் பீச் வாலிபால் போட்டிகள் உருவானது.
1996-ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தடம் பதித்தது.
– பி.எம்.சுதிர்