சினிமாத் துறையில் இருக்கும் அற்புதமான மனிதர்கள்!

நடிகர் ‘சோ’வின் அனுபவங்கள்

நடிகர் முத்துராமன். இவருடன் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய டைரக்ஷனில் வெளியான ‘உண்மையே உன் விலை என்ன?’, ‘மிஸ்டர் சம்பத்’ படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
 
படங்களில் தனக்குக் கொடுக்கப்பட்ட ரோலை ஜம்மென்று பண்ணுவார். படப்பிடிப்பு நடக்கும்போது கூட நடிப்பவர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்.
 
இன்னும் சொல்லப்போனால் ‘உண்மையே உன் விலை’ என்ன படத்தில் ஒரு பாதிரியார் வேடத்தில் அவர் பிரமாதமாக நடித்திருந்ததால், தனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.
 
அப்போது அந்த வேடத்திற்கு விருது கிடைக்கலாம் என்கிற பேச்சும் இருந்தது. அது கிடைக்காதபோது மிகவும் வருத்தப்பட்டார்.
 
அப்போதெல்லாம் என்னுடன் நடிக்கிற சிலரை போன் பண்ணி கலாட்டா பண்ணியிருக்கிறேன். ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும்.
 
முத்துராமன் வீட்டிற்கு போன் பண்ணிக் குரலை மாற்றிப் பேசினேன். அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில் போன் இருந்திருக்கும் போலிருக்கிறது. அவர் தான் போனை எடுத்தார்.
 
“ஹலோ… நான் கரிக்கோல்ராஜ் நாடார் பேசுறேன்.. அங்கே முனுசாமி நாடார் பேசுறாரா?” – குரலை ஒரு தினுசாக இழுத்துப் பேசினேன்.
 
“இல்லை சார்… இங்க அப்படி யாரும் கிடையாது” – பவ்யமாகச் சொன்னார் முத்துராமன்.
 
“ஹலோ… முனுசாமி நாடார் உங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு தானே. அதான் கூப்பிட்டேன். அவரைக் கொஞ்சம் கூப்பிட்றீங்களா?”
 
“சார் நான் பாதி ராத்திரியில் போய் யாரையும் கூப்பிட முடியாது. 12 மணிக்கு போன் பண்ணிக் கூப்பிடச் சொல்றீங்களே… என்னால முடியாது…”
 
-அவருடைய குரலில் ஒருவித எரிச்சல் தென்பட ஆரம்பித்து விட்டது.
 
நான் விடவில்லை.
 
“ஹலோ… முனுசாமி நாடார் சம்சாரம் சாகக் கிடக்கிறாங்க… நீங்க கூப்பிடலீன்னா பாவம் உங்களுக்குத்தான் ஒட்டிக்கும்.”
 
“கொஞ்சம் இருங்க சார்… பார்க்கிறேன்…”
 
யாரையோ பார்க்க அனுப்பி இருப்பார் போலிருக்கிறது. சிறிது நேரம் கழித்து, “பக்கத்து வீட்டில் நீங்க சொல்ற மாதிரி யாரும் கிடையாது சார்” – என்று சொல்லிவிட்டு டக்கென்று ரிசீவரை வைத்து விட்டார்.
 
நான் மறுபடியும் போன் பண்ணினேன்.
 
“ஹலோ… உங்க தெருவில் தான் இருப்பார்… தேடிப் பாருங்களேன்…” – என்றதும், மறுபடியும் போனை வைத்து விட்டார்.
 
திரும்பவும் நான் போன் பண்ணினேன்.
 
“உங்களுக்கு ரொம்பவும் பாவம் வந்துரும். இங்கே அவங்க சம்சாரத்துக்கு மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கு. அவங்க அங்கே இருந்து மருந்து வாங்கி அனுப்பி ஆகணும். நீங்க இந்த மாதிரி சொன்னா எப்படி?” – கேட்டதும் கடுப்பாகி போனை வைத்துவிட்டார்.
 
“ஹலோ… எல்லோரும் சொன்னாங்க.. இது சினிமா நடிகர் வீடு… எடுக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க… சரியாத்தான் இருக்கு.. நடிகர்னா இந்த மாதிரிதானா?” – சொன்னதும் எதிர்முனையில் கோபத்துடன் அவர் போனை வைப்பது கேட்டது.
 
நான் திரும்பவும் “ஹலோ..” என்று ஆரம்பித்ததும் அலறி விட்டார்.
 
“ஐயையோ கரிக்கோல்ராஜ் நாடாரா?” என்று தீனக்குரலில் முத்துராமன் அலறியதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
 
அடக்க முடியவில்லை.
 
“யார்… யாரு…?”
 
“நான்தான் சார்…”
 
“யாரு… ‘சோ’வா?”
 
“ஆமா..”
 
“எதுக்காக இந்த மாதிரி பண்ணினீங்க”
 
“எனக்குப் பொழுது போகலை சார்”
 
“என்ன ராத்திரி 12 மணிக்கா… உங்களுக்குப் பொழுது போகலையா..?. என்ன சார் இது? என்னோட தூக்கத்தைக் கெடுத்து, எதுக்கு இந்த மாதிரி பண்ணீங்க…
 
சரி… இதுக்கு என்னை ஏன் சார் ‘செலக்ட்’ பண்ணீங்க?.
 
நீங்க ஜெய்சங்கருக்கோ, ஏ.வி.எம்.ராஜனுக்கோ, ரவிச்சந்திரனுக்கோ இப்படி இந்த நேரத்தில் போன் பண்ண வேண்டியதுதானே…” – என்று அடுக்கியவர் அடுத்து என்னிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
 
“நீங்க இதே மாதிரி, இதே நேரத்தில் அவர்களுக்கும் போன் பண்ணனும். அப்பத்தான் என் மனசு ஆறும்.”
 
“சரி சார்… பண்ணிறலாம்” – என்று அந்த நேரத்தில் ஆறுதலாகச் சொன்னேன்.
 
மறுநாள் நாங்கள் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டபோது முந்தின நாள் நடந்ததைப் பற்றி அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை.
 
மற்ற சிலருக்கும் போன் செய்ய வேண்டும் என்று அவர் சொல்லியிருந்ததால் இதை பப்ளிசிட்டி செய்யக்கூடாது என்று விட்டுவிட்டார்!
 
எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திய ‘சேவா ஸ்டேஜ்’ நாடகங்களில் நல்ல ரோல்கள் எல்லாம் பண்ணியிருக்கிறார் முத்துராமன்.
 
‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் துரியோதனனாக அவர் நடிப்பது அவ்வளவு அருமையாக இருக்கும்.
 
பழகுவதற்கு பிரமாதமான மனிதர்!
 
எஸ்.வி.ரங்காராவ் உருவத்திலும் சரி, நடிப்பிலும் சரி கம்பீரமான நடிகர். அவருடன் சில படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன்.
 
அவருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஜெய்சங்கர் என்னைக் கிண்டல் பண்ணிக் கொண்டே இருந்தான்.
 
அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரங்காராவ், “சோ கிட்ட இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க” என்றார்.
 
ஜெய்சங்கர் அதைப் பற்றிக் கவலைப்படாமல், “இது என்ன சார்.. இவன் கிட்ட பேசினா என்ன சார்…” என்று பேசிக் கொண்டிருந்தான்.
 
ரங்காராவ் பேச்சை இடைமறித்து “சோ ஒரு இன்டலக்சுவல்… அவர் கிட்ட நீங்க இது மாதிரி எல்லாம் பேசக்கூடாது” என்று சொன்னதும், ஜெய்சங்கர் சிரித்தபடி கிண்டல் செய்து கொண்டிருந்தான்.
 
“அவன் இன்டலக்சுவல் எல்லாம் கிடையாது. அவன் ஒரு சாதாரணமான ஆள். எல்லோரையும் ஏமாத்திட்டுருக்கான். என்ன இந்த இன்டலக்சுவல் வேண்டியிருக்கு!”
 
அந்தச் சமயத்தில் அங்கே இருந்த வி.கே.ராமசாமி, “சரி.. உங்க பேச்சை எல்லாம் நிறுத்துங்க” என்று சொல்லிவிட்டு, அவரும் ரங்காராவும் ரேஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
 
வி.கே.ஆர் ரேஸ் குதிரைகள் எல்லாம் சொந்தமாக வைத்திருந்தவர். பேச்சு முழுக்க ரேஸ் பக்கம் திரும்பியதும், ரேஸில் ஈடுபாடு இல்லாத எனக்கும் ஜெய்சங்கருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களைக் கேலி பண்ணிக் கொண்டிருந்தோம்.
 
“உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க எழுந்திருச்சுப் போங்க. எங்களுக்கு இன்னைக்கு ஜாக்பாட் இருக்கு… அதைக் கெடுக்காதீர்கள்..” – என்று வி.கே.ஆர் சொல்லி அன்றைக்கு ரேஸில் ஓடப்போகிற குதிரைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டேன்.
 
“சார் நீங்க சொல்ற குதிரைகள் எல்லாம் ஜெயிக்காது. ஜெயிக்கப் போவது 3, 7, 8, 11, 12 நம்பர் உள்ள குதிரைகள் தான்”
 
வி.கே.ஆரும், ரங்காராவும் நான் சொன்ன நம்பர்களைப் பார்த்துவிட்டு “அதெல்லாம் வராது. அதெல்லாம் தண்டக் குதிரைகள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் ரேஸுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
 
மறுநாள் அதே படத்தின் ஷூட்டிங்.
 
நானும் ஜெய்சங்கரும் போனதும் வி.கே.ஆரும், ரங்காராவும் எங்களைப் பிடித்துக் கொண்டார்கள்.
 
“மரியாதையா உண்மையை ஒத்துக்கங்க. உங்களுக்கு ரேஸ் கிளப்பில் யாரையோ தெரிஞ்சிருக்கு.. நேத்து நீங்க சொன்ன குதிரைகள் தான் கரெக்டா ஜெயிச்சிருக்கு.. நாங்க கோட்டை விட்டுவிட்டோம்.. இன்னைக்கு எந்தக் குதிரைகள் ஜெயிக்கும் டிப்ஸ் கொடு”
 
“சார் நிஜமாகவே எனக்கு ரேஸ் பற்றி ஒன்றும் தெரியாது. நீங்க என்னமோ ரேஸ் பத்திப் பேசிட்டிருந்தீங்க. எனக்கும், சங்கருக்கும் ஒண்ணும் புரியல. நான் வாயில் வந்த நம்பரைச் சொன்னேன். அது பலிச்சிடுத்து. அதுக்கு நான் என்ன பண்றது சார்”
 
“அப்படி இல்லை. ஒண்ணா, ரெண்டா.. அஞ்சு குதிரைகளைச் சரியா சொல்லியிருக்கீங்க. இது எப்படி நடக்கும்? நிஜத்தைச் சொல்லுங்க.” என்று என்னை உலுக்கி எடுத்ததும், ஜெய்சங்கர் வந்து தடுத்தான்.
 
“சார் நிஜமாவே இவன் ரேஸ் நடக்கிற இடத்துப் பக்கம் கூடப் போனதில்லை. இவனுக்கு அதிலே இன்ட்ரஸ்ட்டும் இல்லை. ரேஸ் பற்றி நீங்க தொடர்ந்து பேசிட்டு இருந்ததால், இவன் தன் பங்குக்கு…” – இப்படிச் சொன்னதும் அதோடு முடிந்தது சர்ச்சை.
 
வி.கே.ஆர் சம்பந்தப்பட்ட இன்னொரு சம்பவம்.
 
ஒரு முறை ரேஸில் அவருடைய குதிரை ஜெயித்து விட்டது. அதற்காக ‘கப்’ வாங்கப் போயிருக்கிறார். ‘கப்’பை வழங்கியவர் ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
 
‘கப்’பைக் கொடுத்துவிட்டு, “நீங்க தானே ராமசாமி.. நாளைக்கு வந்து என்னை ஸ்டூடியோவில் பாரு” என்று சொல்லி இருக்கிறார்.
 
வி.கே.ஆர் மறுநாள் போனபோது வாசன் சொல்லியிருக்கிறார்.
 
“இந்தக் குதிரையை வித்திடு. இனி ரேஸ் பக்கம் போகாதே. நான் ரேஸில் நிறையப் பணம் சம்பாதித்து படம் எடுத்திருக்கேன்.
 
அதுக்குப் பிறகு போவதில்லை.. அது எங்கோ உன்னை இழுத்து விட்டுடும். இதை இன்னைக்கோட நிறுத்திடு…” அதைக் கேட்டதும் அன்றுடன் ரேசுக்குப் போவதே நிறுத்திவிட்டார் வி.கே.ஆர். அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
 
தன்னிடம் உள்ள தவறான பழக்கத்தை ஒருவர் உரிமையுடன் கண்டித்துச் சொல்கிற போது, அதை ஏற்று நடக்கிற பெருந்தன்மை வி.கே.ஆரிடம் இருந்தது.
 
அவரைப் போல நல்ல எதிர்காலம் கொண்ட ஒரு நடிகர் பாழாகிவிடக் கூடாது என்ற நல்ல எண்ணம் எஸ்.எஸ்.வாசனுக்கு இருந்தது.
 
எவ்வளவு அற்புதமான மனிதர்கள்!
***
 
சோ-வின் ‘ஒசாமஅசா’ நூலிலிருந்து…
 
எழுத்தும், தொகுப்பும்: மணா
You might also like