ஆணாதிக்க சமூகத்தை சவுக்கால் அடித்த The Girl Friend!

ராகுல் ரவீந்திரன் இயக்கிய ‘The Girl Friend’ படம் திரையரங்குகளில் நவம்பர் 7, 2025-ம் ஆண்டு வெளிவந்தது. இது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் டிசம்பர் 5-ம் தேதி வெளியானது.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த இப்படம், ஜனநாயகமற்ற காதல் எப்படி பெண்களின் வாழ்வை பாதிக்கிறது என்பதை தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது.

சிறுவயதில் தாய் இறந்ததால் தந்தையால் தனியாக வளர்க்கப்பட்ட பூமா தேவி, தன்னுடைய விருப்பங்கள் எதற்குமே இடமில்லாத வாழ்க்கையே வாழ்ந்திருக்கிறார்.

கல்லூரியில் இணைந்த பிறகும் கூட தந்தைக்கு பயந்து மற்ற பெண்களுக்கு கிடைக்கும் எந்த மகிழ்ச்சியான தருணங்களும் அவளுக்கு கிடைக்கவில்லை.

பூமாதேவி, பெண்மைக்கு இலக்கணமாக இச்சமூகம் வரையறுக்கும் பொறுமை, தியாகம், சுய விருப்பங்களை அன்பானவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை ஆகிய குணங்களுக்கு சொந்தக்காரி.

தன்னுடன் பேச விரும்பும் ஆணிடம் சாதாரணமாக பழகக் கூடிய நட்பு, காதலா என்று உணர்வதற்கு கூட இச்சமூகம் அவளுக்கு அவகாசம் தரவில்லை.

அதற்குள் நண்பனும் உடன் படித்தவர்களும் காதல் என்று முத்திரைக் குத்திவிட்டனர்.

சாதாரண நட்பை காதல் என நம்பவைக்கப்பட்டாள், அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அவளுக்கு இல்லை.

பொதுவாக இளம் ஆண்களுக்கு, தன் அம்மாவை போலவே மனைவியும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல்தான் படத்தின் கதாநாயகனுக்கும் தன் அம்மாவின் மறு உருவமான பூமா தேவியைப் பிடித்தது.

இது மேம்போக்காகப் பார்த்தால் பேரன்பு, தியாகம் என்று வடை சுடலாம். ஆனால், இது அப்பட்டமான அடிமைத்தனம் என்பதை இப்படம் தோலுரித்து காட்டியிருக்கிறது.

எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய, தன் கனவை காதலிற்காக, கணவனுக்காக, குடும்பத்திற்காக மறக்கக்கூடிய அடிமைகளே பல ஆண்களுக்கு தேவைப்படுகிறது.

அவ்வடிமைக் குணத்திற்கு தியாகம், தாய்ப்பாசம், என்று அவர்கள் வசதிக்கு ஏற்ப பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து கதாநாயகனுக்கு உணவு பரிமாறுவது, அவன் அறையை சுத்தம் செய்வது, அவனுக்கு தேவையான அனைத்தையும் கவனிப்பதென பூமாதேவியின் உலகம், காதலனிடம் தொடங்கி அவனுடனே சுருங்கிவிட்டது.

காதலைக் காப்பாற்றிக் கொள்ளும் ஓட்டத்தில் அவள் தன் அடையாளத்தையே இழந்துவிட்டாள்.

நம்மூர் பெண்களின் பாதிப்பேர் வாழ்க்கை பூமாதேவி வாழ்க்கையை போன்றதே.

பெண்ணின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது காதல், திருமணம், தாய்மை என்று நான் கருதவில்லை.

ஆனால், அவள் அப்படித்தான் கேட்டு, வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறாள்.

கனவு, சுயமரியாதை, அவளுக்கான அடையாளம் போன்றவையே அவள் வாழ்க்கையின் உயிர்நாடி.

தன்னுடைய அடையாளத்தையே தொலைத்துவிட்டு “The girl friend” படத்தில் வரும் பூமாதேவி போல் வாழும் பெண்கள் இங்கு ஏராளம்.

நம்மூர் பசங்களிடம் ஒரு வசனம் அதிகமாக புலங்குவதைப் நாம் பார்க்க முடியும்,

”பல வருஷமா காதலிச்சோம், அவளுக்காக அவ்ளோ செலவழிச்சேன், கடைசியில கழட்டிவிட்டுடா மச்சா” என்று புலம்பக் கூடிய இளைஞர்கள் தெருவுக்கு நாலு பேர் இருப்பார்கள். இவ்வசனமெல்லாம் ஆணாதிக்கத்தின் விளைந்த அவதூறுகள்.

இச்சமூகத்தில் பெண்கள் தன் காதலைத் தேர்ந்தெடுப்பதற்கும் சுதந்திரம் இல்லை, நிராகரிப்பதற்கும் சுதந்திரம் இல்லை.

காதலன் தன்னை கட்டுப்படுத்துவதை உணர்ந்த பூமாதேவி அக்காதலையே நிராகரித்தாள். காதலை நிராகரித்த காரணத்தால் பூமாதேவியின் ஒழுக்கம் விமர்சனத்திற்குள்ளானது.

மனமுடைந்தவள் ஆதரவுக்காக அப்பாவைத் தேடும்போது, அவளுக்கு அப்பாவிடமிருந்து கிடைத்தது வசவுகளும், கெட்ட வார்த்தைகளும் தான்.

இதுவரை பொறுமையாக இருந்த பூமாதேவி தான் கடைபிடித்த பொறுமையை விடுத்து முதன் முதலில் தனக்காக துணிச்சலாக எதிர்த்து நின்றாள்.

காதல் தூக்கி எறியப்பட்டது, கனவு பூமாதேவி வசமானது. ஆணாதிக்க சமூகத்தை சவுக்கால் அடித்த “The Girl Friend“ ஆகச்சிறந்த திரைப்படம்.

ஒரே ஒரு நெருடல் மட்டும் தான், நச்சுத் தன்மையுடைய காதலிலிருந்து வெளி வந்த பூமா தேவியால் நச்சுத் தன்மையுடைய அப்பாவை விட முடியவில்லை. இக்கருத்தே சமூக எதார்த்தம்.

காதலால், திருமணத்தால் ஏற்படும் வன்முறையிலிருந்து கூட பெண்களால் வெளி வர முடியும், ஆனால், பெற்றோரால் நிகழ்த்தப்படும் வன்முறையிலிருந்து பெண்கள் தப்பிப் பிழைப்பது அவ்வளவு எளிதல்ல.

– கு. சௌமியா

You might also like