சமீபத்தில் சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடமான விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும் இடையில் இருக்கும் இந்தக் கட்டடம் இப்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
- வரலாறு என்ன?
இப்போது இந்தக் கட்டடம் அமைந்துள்ள இடம் அப்போது பீப்பிள்ஸ் பார்க் எனும் மக்கள் பூங்காவின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த மக்கள் பூங்காவில் 1878-ம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கான கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள் எனக் குடிமக்களை ஒன்றிணைத்து ஆண்டு நிகழ்வாக நடத்தப்பட்டது.
இந்நிலையில்தான் சென்னை நகரின் முக்கிய பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். இதற்காக பீப்பிள்ஸ் பார்க்கில் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்திற்கு 1883-ம் ஆண்டு விஜயநகர மகாராஜா சர் மூன்றாம் ஸ்ரீபூசபதி ஆனந்த கஜபதி ராஜு அடிக்கல் நாட்டினார்.
கட்டடத்திற்கான வடிவமைப்பை முன்னணி கட்டடக்கலை நிபுணரான ராபர்ட் சிஸ்ஹோல்ம் இந்தோ சாராசெனிக் முறையில் வடிவமைத்தார்.
தொடர்ந்து முன்னணி கான்டிராக்டராக விளங்கிய நம்பெருமாள் செட்டி இக்கட்டடத்தைக் கட்டினார். 1887-ம் ஆண்டு கட்டி முடித்துத் திறப்பு விழா கண்டது.
இந்நிலையில் 1837-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் மகாராணியாக விக்டோரியா பதவியேற்று 50-வது ஆண்டு பொன்விழாவை நினைவுகூரும் வகையில் இந்தக் கட்டடத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
அப்போது இந்தக் கட்டடம் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயில் உருவாக்கப்பட்டது.
இதற்கு விஜயநகர மகாராஜா உள்ளிட்ட அன்றைய சென்னை மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் நன்கொடை வழங்கினர். இதற்கு பொதுமக்களும் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.
இரண்டு தளங்கள் கொண்டதாக இந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இரண்டு தளங்களிலும் நிகழ்வுகள் நடந்தன.
கீழ்த்தளத்தில் 600 பேரும், மேல்தளத்தில் 600 பேரும், மேல்தளத்தில் உள்ள கேலரியில் 200 பேரும் அமர்ந்து நிகழ்வுகளை ரசிக்க முடியும்.
இதற்கு தனித்தனியாகக் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன. அதாவது மேல்தளத்தில் புரொஃபஷனல் நாடகக் குழுவிற்கு ஒரு நாள் இரவுக்கு 50 ரூபாய் கட்டணமும், அமெச்சூர் நாடகக் குழுவிற்கு அதில் பாதியும் வசூலித்துள்ளனர்.
தனியார் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வுகளுக்கு 80 ரூபாய் போடப்பட்டுள்ளது. இதுவே தொண்டு நிறுவன அறக்கட்டளை நிகழ்வுகளுக்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
சொற்பொழிவுகள் உள்ளிட்ட மக்கள் இலவசமாக காணவரும் கூட்டங்களுக்கு 15 ரூபாய் என விதித்துள்ளனர்.
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்ட தமிழ் நாடக முன்னோடிகள் தங்களது நாடகங்களை இங்கே அரகேற்றினர்.
குறிப்பாக பம்மல் சம்பந்த முதலியார் 1891-ம் ஆண்டு, ‘சுகுண விலாச சபா’ நாடக சபையை ஆரம்பிக்கக் காரணமே விக்டோரியா ஹாலில் நடந்த ஒரு நாடகம்தான் எனத் தன்னுடைய ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தக் கட்டடத்தில் பல்வேறு இசைக் கச்சேரிகளும், விளையாட்டுப் போட்டிகளும், சொற்பொழிவுகளும் நடந்துள்ளன.
விவேகானந்தர் 1897-ல் மெட்ராஸ் வந்தபோது இந்த விக்டோரியா அரங்கில் உரையாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் ஆகியோரும் இந்த அரங்கில் உரையாற்றி உள்ளனர்.
20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பரபரப்பாக இருந்தது இந்த அரங்கம். பின்னர் காலநிலை மாற்றங்கள், பராமரிப்பு குறைபாடு ஆகியவற்றால் சிதைவைச் சந்தித்தது.
குறிப்பாக சுவர்களில் பிளவு, கூரைகளில் நீர்க்கசிவு, மரக் கட்டமைப்புகளில் குறைபாடு எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில் 1967-ம் ஆண்டு இந்த அரங்கம் புனரமைப்பு செய்யப்பட்டு அன்றைய தமிழ்நாடு முதல்வர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. பிறகு, மீண்டும் பராமரிப்பு இல்லாமல் போனது.
இதனால் கட்டடத்தின் வரலாற்றினைக் காக்கும் விதமாகவும், அதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தமிழக அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து மறுசீரமைப்பு முயற்சியைத் தொடங்கின.
அதன்படி 2023-ம் ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.32.62 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது மீண்டும் திறப்புவிழாவைக் கண்டுள்ளது.
• இப்போது அரங்கம்…
இரண்டு தளங்கள் கொண்ட அரங்கத்தின் கீழ்த்தளம் முழுவதும் அரங்கம் குறித்தான வரலாற்றையும், நினைவுகளையும் கண்காட்சிப்படுத்தி உள்ளனர். கூடவே அரங்கத்தின் புனரமைப்பு பணிகளும் தகவல்களுடன்கூடிய புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் விக்டோரியா பொது அரங்கம் கட்டுவதற்கு நிதியளித்த புரவலர்கள், இசை கச்சேரிகள் குறித்த விஷயங்கள், நீதிக்கட்சியின் தோற்றம் பற்றித் தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள், மக்களின் வாத்திய கருவிகள், சினிமா சார்ந்த விஷயங்கள், விளையாட்டு வீரர்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுடன் ஒலி, ஒளி காட்சிக்கூடம் ஒன்றும் உள்ளது.
இந்தக் காட்சிக்கூடத்தில் அன்றைய சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.
இதன்பிறகு மேல்தளம் முழுவதும் நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 250 பேர் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டுகளிக்கலாம்.
இதனையடுத்து அரங்கிலிருந்து வெளியேறும் வழியில் சென்னையின் பழமையை பறைசாற்றும் விஷயங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இதில் டிராம் வண்டி, பக்கிங்ஹாம் கால்வாயில் நடந்த படகு போக்குவரத்தை விளக்கும்பொருட்டு படகு ஒன்று, கை ரிக்ஷா, ஸ்கூட்டர் என அன்றைய சென்னையின் போக்குவரத்து வரலாறு இருக்கிறது.
பிறகு, பல்லாவரம் முதல் கீழடி வரை எனத் தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் அகழாய்வு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறிய திறந்தவௌி அரங்கம் ஒன்றும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக அன்றைய சென்னையை நம் கண்முன் நிறுத்துகிறது விக்டோரியா பொது அரங்கம். தவிர, சென்னை மக்கள் சுற்றிப் பார்க்க நல்ல ஸ்பாட்டாகவும் இருக்கிறது.
• பார்வையிட என்ன செய்ய வேண்டும்.
விக்டோரியா பொது அரங்கத்தைப் பார்வையிட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
இதில் பொதுமக்களுக்கு 25 ரூபாயும், மாணவர்கள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 50 ரூபாயும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது.
இதேபோல பள்ளி மூலம் முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது. இலவசமாகவே பார்வையிடலாம்.
இந்த அரங்கம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு 360 பேர் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மொத்தம் ஆறு ஸ்லாட்கள் உள்ளன. ஒரு ஸ்லாட்டிற்கு 60 பேர் என ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
இதில் கீழ்த்தளத்தில் உள்ள ஒலி, ஒளிக்காட்சி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் போடப்படுகிறது. இதில் 20 பேருக்கு அனுமதி.
மேல்தளத்தில் அரசு, கல்வி சார்ந்த நிகழ்வு, புத்தக வெளியீடு, பாரம்பரிய நிகழ்வுகள், பட்டிமன்றம், கலந்துரையாடல் உள்ளிட்டவற்றுக்கு 50 ஆயிரம் ரூபாயும், சினிமா சார்ந்த மற்றும் வர்த்தகம், பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி அரங்கிற்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், மத நிகழ்வுகள், தனிநபர் குடும்ப நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதியில்லை.
செவ்வாய்க்கிழமை தோறும் பராமரிப்பிற்காக விடுமுறை விடப்படுகிறது.
– கவின்