“அக்லிபர்ட்டே: அடுத்த தலைமுறை விவசாயத்தை விடுதலை செய்வோம்” என்ற அமைப்பு “பங்கேற்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி: சூழலியலுக்கான கூட்டணி” என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்தியது.
ஒரு நாள் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்திலும் இரண்டாம் நாள் ஒரு நட்சத்திர விடுதியிலும் இந்த நிகழ்வை நடத்தினர்.
உள்நாட்டைச் சேர்ந்த பல அமைப்புக்களும் சில வெளிநாட்டு அமைப்புக்களும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின.
இந்த அமைப்புக்கள் அத்தனையும் விவசாயத்தையும், சூழலியலையும், மண்வளத்தையும், உடல் நலத்தையும் மையப்படுத்தி ஆய்வுகள் நடத்தி, அதன் அடிப்படையில் செயல்திட்டங்களை வடிவமைத்து மாற்றுமுறை விவசாயத்தை முன்னெடுக்க முனைப்பாகச் செயல்படுகின்றன.
இதில் அறிவியலாளர்களும் விவசாயிகளும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க அறிவியல்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்கள் பணிகளிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.
இவர்கள் செய்யும் அனைத்தும் காத்திரமான செயல்கள் என்பதையும் உணர முடிந்தது. இதில் பன்னாட்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன என்பது இதன் தனிச் சிறப்பு. இந்தக் கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிலர் பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுப்பவர்கள்.

அதேபோல் விதைகளைத் தேடிக் கண்டுபிடித்து, பாதுகாத்து சமூகத்திற்குத் தந்து விவசாயிகளை மாற்றுமுறை விவசாயத்திற்கு மாற்றி, அவர்களுக்கு உதவிடும் மாமனிதர்கள்.
முதல்நாள் முழுவதுமாக, தாங்கள் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துகொள்ள, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் கருத்துத்தாள்களாக வாசிக்கப்பட்டு விரிவான விவாதங்களை நடத்தினர்.
இந்த ஆய்வுகள் அனைத்தும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து இந்த இரண்டையும் மறுத்து, பாரம்பரிய விவசாயத்தில் நடத்திய ஆய்வுகளாகவே இருந்தது.
இந்த மாற்றுமுறை அல்லது பாரம்பரிய விவசாயமுறை என்பதும் அறிவியல் அடிப்படையிலானது என்பதை நிரூபித்து மாற்றுமுறை விவசாயத்தை மாபெரும் விவசாயிகளின் மக்கள் இயக்கமாக மாற்ற முனைகின்ற கூட்டமாகவே பார்க்க முடிந்தது.
இதில் இணைந்து கொண்ட அமைப்புக்களை உருவாக்கி நடத்தி வருபவர்கள் அனைவரும் விவசாயத்துறை விஞ்ஞானிகள்.
அடுத்து இவர்களுடன் இணைந்து செயல்படும் விவசாயிகளும் விஞ்ஞான அடிப்படையில் செயல்படும் மனிதர்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மாழ்வாரால் தூண்டப்பட்டவர்கள் என்பதை அறிய முடிந்தது. இவர்கள் அனைவருடைய அடிப்படை நோக்கம் என்பது பூமிப்பந்தை பாதுகாத்து உயிர்க்குலம் காப்பதுதான்.
இது ஆரம்பித்த இடம் நம் இன்றைய அறிவியல் பூர்வ விஞ்ஞானம் என்று கூறி, உற்பத்திப் பெருக்கம் என்று கூறி நம் மண்ணை மலடாக்கி, பாலைவனமாக்கிக் கொண்டுள்ளோம் என்பதை முன்னிறுத்தி, இதற்கு மாற்றுத் தேடுவது ஒன்றே தீர்வாகும் என்பதை அடிப்படையாக்கிக் கொண்டதுதான்.

ஒரு அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதுதான் எங்களின் தலையாய நோக்கம் என்று அறிவித்தது.
ஆனால், அதற்கு மாறாக விவசாயிகளின் கடன் இரட்டிப்பானது.
அதே நேரத்தில் பூச்சி மருந்து, இரசாயண உரம் விற்ற கம்பெனிகளின் லாபம் இரட்டிப்பானது, மூன்று மடங்கானது.
இதன் விளைவு இலட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் மாண்டனர். அது மட்டுமல்ல ஆண்டுதோறும் மலடாக்கப்பட்ட நிலங்களின் பரப்பளவு கூடிக்கொண்டே வருகின்றது என்பது ஒரு சோக நிகழ்வு.
இதை எப்படி எதிர்க்கொள்வது, என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படத்தான் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த இரண்டு நாள் நிகழ்வு நமக்கு உணர்த்தியது.
பாரம்பரிய விவசாயம் என்றாலே அது அறிவியல்பூர்வமானது அல்ல என்று எடுத்த எடுப்பிலேயே உரச் சந்தை, பூச்சிமருந்துச் சந்தைக்கான ஆய்வறிஞர்கள் கூறிவிடுவார்கள் என்பதால் அதை எதிர்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு ஆய்வறிக்கைகள் தேவை என்பதால் அந்த ஆய்வை முன்னெடுத்து அந்த அறிக்கைகளை பார்த்து விவசாயக் கொள்கைகள் உருவாக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்ல அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதையும் உணர முடிந்தது.
மாநிலத் திட்டக் குழுவிலிருந்து சூழலியலாளர் ஒருவர் வந்து கருத்துரை வழங்கி இந்த ஆய்வுகள் கொள்கை உருவாக்கப் பயன்படும் என்று விளக்கியது ஓர் ஆதரவுச்சூழல் பெருகி வருவதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

இரண்டாவது நாளில் நான்கு அமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல் அமர்வில் நாம் கூட்டாக விவசாயிகளைத் தோல்வி அடைய வைக்கிறோமா? என்று விவாதித்தனர்.
அந்த அமர்வில் எடுத்த எடுப்பிலேயே மாநில திட்டக்குழு உறுப்பினர் ஒருவர் நாம் அவர்களை தோற்கடித்து விட்டோம் என்று பிரகடனப்படுத்தினார்.
அதில் கருத்துப் பரிமாறிக்கொண்ட வல்லுனர்கள் கொள்கைகளின் மூலமாக நாம் எப்படி விவசாயிகளை தோற்கடித்தோம் என்பதனையும், நிதி நல்கை மூலம், அவர்களை மீண்டும் மீண்டும் எப்படித் தோற்கடித்தோம் என்பதையும், சந்தைகள் மூலம் அவர்களை எப்படித் தோற்கடித்தோம் என்பதையும் விளக்கினர்.
ஒட்டுமொத்தமாக கூட்டாக விவசாயிகளை மட்டுமல்ல, நம் மண்ணையும் எப்படி மலடாக்கி நம் நிலத்தை பாலைவனமாக்கிக் கொண்டுள்ளோம் என்பதனை ஆதாரங்களுடன் விளக்கினர்.
அடுத்த அமர்வில் “குடிமக்கள் பங்கேற்பில் நடக்கும் ஆளுகையின் மூலம் பங்கேற்பு வளர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை முன்னெடுத்தனர்.
இந்த அமர்வில் நம் மக்காளட்சியில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது விவாதிக்கப்பட்டது. பொதுவாக ஒரு நாட்டில் வாழும் குடிமக்கள் இரண்டு தளங்களில் செயல்பட வேண்டும்.
ஒன்று அரசியல் மற்றும் ஆளுகை இரண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாடுகள். இந்த இரண்டு தளங்களிலும் அறிவுடன் தெளிவு பெற்று செயல்படுவதில்தான் பங்கேற்பு வளர்ச்சி நடைபெறும்.
அப்போதுதான் விவசாயிகளைச் சுரண்ட முடியாது என்று விவாதித்தனர். இன்று நாம் பார்க்கும் ஊழல் மலிந்த அரசியலுக்கும், ஆளுகைக்கும், நிர்வாகத்திற்கும் காரணம் மக்கள் அந்நியப்பட்டு அரசாங்கத்திடமிருந்து வெகுதூரத்தில் நிற்பதால்தான் என்பதையும் விளக்கினர்.

“சூழலியல் மூலதனத்தைக் கட்டுதல்” என்ற தலைப்பில் களச் செயல்பாட்டாளர்கள் தாங்கள் எப்படி சாதாரண மக்களுடன் பணி செய்து அவர்களின் திறன்கள் மூலம் உலகத்தரப் பொருள்களை உருவாக்கி
உலகப்பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்தனர் என்பதை வரலாற்றுக் கதைகளாக்கி விவரித்தது சுவாரசியமாக இருந்தது.
ஒவ்வொன்றும் ஒரு சாகசம், சாதனை, அர்ப்பணிப்புச் செயலாகப் பார்க்க முடிந்தது.
அடுத்த அமர்வில் மானுடம் மேம்பட மாற்றுப்பாதை தேடும் மாமனிதர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஒரு பகுதியைச் சூழலியல் உணர்வுமிக்க செயல்பாடு நிறைந்ததாக மாற்றிய அமைப்புக்கும் அதன் வழிகாட்டிக்கும் விருது வழங்கப்பட்டது.
அடுத்து அதேபோல் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் செயல்படும் ஓர் விவசாய இளைஞருக்கு ஒரு விருது வழங்கப்பட்டது.
காலநிலை மாற்றத்திற்கு களத்தில் நின்று செயல்படும் ஒரு களப் போராளிக்கு ஒரு விருது வழங்கப்பட்டது.
கூட்டுறவு விவசாயப்பணிகளை வெற்றிகரமாக நடத்திடும் ஒரு அமைப்புக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. பயோ டைனமிக் விவசாயம் செய்துவரும் விவசாயிக்கும் ஒரு விருது வழங்கப்பட்டது.
விதைப் பாதுகாப்புக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் தியாகம் செய்த மனிதருக்கு ஒரு விருது வழங்கி கௌரவித்தனர்.

மக்கள் பங்கேற்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்ட ஒரு முதியவருக்கு ஒரு விருது வழங்கி சிறப்புச் செய்தனர்.
பல்லுயிர் பெருக்கத்திற்குச் செயலாற்றியவருக்கு ஒரு விருது என எட்டு விருதுகளை தக்கவருக்கு அளித்து அந்த அமர்வை நிறைவு செய்தனர்.
ஒட்டுமொத்த நிகழ்வும் ஒரு செய்தியை ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
மாற்றுப் பாதை அறிவியல்பூர்வமானது, அதற்கு வழிகாட்டும் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள், அதற்கு உறுதுணையாய் அறிவியலாளர்கள் தயாராகிறார்கள் என்பதும்,
இவை ஒரு இயக்கமாக உருவாவதற்கான விதைகளை விதைத்தார்கள் என்ற உணர்வினை பார்ப்பவர் கேட்பவர் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியது.