ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’ பலவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அளவில் கணிப்பொறியை பயன்படுத்தும் ஓவியர்களுக்கு இவர்தான் முன்னோடி. கடந்த 15 வருடங்களாக சினிமாத் துறையில் கலை இயக்குநராகவும், அனிமேக்கராகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழ் வணிகப் பத்திரிகைகளிலும், சிறுபத்திரிகைகளிலும் தொடர்ந்து வரைந்து வருகிறார்.
கீற்று இதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.
உங்களுக்கு கலையில் ஈடுபாடு வந்தது எப்படி?
நான் வளர்ந்த சூழலே அற்புதமானது. நாங்க இருந்த ஏரியாவுலே தான் அய்யனார் சிலை மாதிரியான டெரகோட்டா சிற்பங்கள் செய்யிற கலைஞர்கள் இருந்தாங்க.
அவங்க மண்ணைக் குழைச்சு சிற்பமா மாத்துறதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன்.
பிறகு மதுரை அழகர் கோயில், மீனாட்சி கோயில் மற்றும் நாயக்கர் மகால் ஆகிய இடங்களில் இருக்கிற சிற்பங்களை அடிக்கடி பார்க்க முடியும்.
மதுரை அழகர் கோயில் திருவிழாவும் ஒரு முக்கியமான இன்ஸ்பிரேஷன்.
மதுரையைச் சுத்தி 50, 60 கிலோமீட்டர் தூரத்திலே இருக்கிற எல்லா நாட்டுப்புற கலைஞர்களும் திருவிழாவுக்கு வருவாங்க. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டமா இருந்துச்சி.
அப்ப காந்தி மியூசியத்துலே வாரம் ஒரு இலவச சினிமா போடுவாங்க. அதனால் ரொம்ப சின்ன வயசிலேயே வேர்ல்டு கிளாசிக்ஸ் எல்லாம் பார்க்க வாய்ப்பு கிடைச்சது.
பிறகு எங்க அப்பா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டது. அப்ப மதுரையிலே பெரிய புத்தகக் கடை பாரதி புத்தகாலயம்.
அதை நடத்திக்கிட்டு இருந்த சுவாமிநாதன் அப்பாவோட பால்ய நண்பர். அப்பா என்னை வாரத்துக்கு மூணு தடவையாவது அங்க கூட்டிக்கிட்டு போவாரு.
அந்தக் கடைக்கு கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா மாதிரியான ஆட்கள் எல்லாம் வருவாங்க.
ஒரு தடவை போனா, குறைஞ்சது மூணு மணி நேரமாவது இருப்போம். ரொம்ப சின்ன வயசிலேயே உலக இலக்கியங்களோட அறிமுகம் கிடைச்சது.
ரீகல் தியேட்டர்லே நல்ல இங்கிலீஸ் படம் வந்தா, பரீட்சை இருந்தாக் கூட, அப்பா அதைப் பார்க்கச் சொல்வாரு.
‘Bridge on the river Kiwai-னு ஒரு படம் வந்திருக்கு. புஸ்தகத்துலே படிச்ச பாலைவனத்தை அதிலே பார்க்கலாம்’ன்னு சொல்லிக் கூட்டிட்டுப் போவாரு.
டாலி, பிக்காஸோ, டிராட்ஸ்கி இவங்களோட ஓவியங்கள் அப்பா மூலம்தான் எனக்கு அறிமுகமாச்சு.
இதெல்லாம் நான் எட்டாம் வகுப்பு படிச்சபோதே கிடைச்சதுங்கிறதுதான் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் தான் என் கலைப்பாதையின் படிக்கட்டுகள்.
நீங்க ஓவியத்துறைக்கு வருவதற்கு மதுரையில் பார்த்த சிற்பங்கள் ஒரு முக்கிய காரணம்னு சொல்றீங்க.
ஆனால், தமிழக மரபில் சிற்பங்களுக்கும், கட்டடக் கலைக்கும் இருக்கிற முக்கியத்துவம் ஓவியங்களுக்கு இல்லையே, ஏன்?
தமிழகத்தில் ஓவியம் என்பது சிற்பத்தோடு இணைந்தேதான் இருந்தது. தனி ஓவியம்னு இல்லை. கி.பி. 4ம் நூற்றாண்டில் அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மீது ஓவியங்கள் வரையப்பட்டிருக்கு.
காலப்போக்குல ஓவியங்கள் நிறமிழந்து போனது. இப்பயும் வெயில் படாம, கோயிலுக்குள் இருக்கிற சிற்பங்கள் மீது ஓவியப் பூச்சு இருப்பதைப் பார்க்க முடியும்.
இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க? இலக்கியத்துக்கு வரையும்போது, நீங்க எந்த மாதிரியான அணுகுமுறையை வைச்சிருக்கீங்க?
எழுத்துக்கு வரையும்போது வார்த்தைகள்தான் தூரிகையை நகர்த்துதுன்னு சொல்வாங்க. ஆனா நான் கொஞ்சம் வேற மாதிரிதான் இயங்கியிருக்கிறேன். கடந்த 20 வருஷமா பத்திரிகைகளில் வரைஞ்சிட்டு வர்றேன்.
எப்போதும் எழுத்தாளர்களோட வார்த்தைகளை நான் தேவவாக்காக எடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா மற்ற ஓவியர்கள் பத்திரிகைகளுக்கு வரையும்போது, அந்த எழுத்திலே இருக்கிற சம்பவங்களை வரைவாங்க.
நான் அப்படி வரைஞ்சது கிடையாது. தேவைப்பட்டபோது எடுத்திருக்கேனேயொழிய அதை மட்டுமே வரைஞ்சதில்லை.
எழுத்து ஒரு விஷயத்தைச் சொல்லும். அது என்ன சொல்லுதோ, அதை நோக்கிய விஷயத்தை என் படமும் சொல்லும். அதுக்கு மேலே என் படம் எதுவும் சொல்லலைன்னும் கிடையாது.
எழுத்திலிருந்து படத்தைப் பிரிச்சிட்டாக்கூட, என் படம் அதே விஷயத்தை சொல்றதை நீங்க பார்க்கலாம்.
ஓவியர் என்பவர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஓவியங்கள்தான் எழுத்தை மக்கள் மனசுலே நிறுத்தி வைக்குது.
இராமாயணம், மகாபாரதம் எல்லாம் வெறும் வார்த்தைகளால மக்கள் மனசுலே இத்தனை வருஷமா நிக்கலை. அதுக்கு இணையா கடந்த இரண்டாயிரம் வருஷமா இருக்கிற ஓவியங்கள், சிற்பங்கள், கூத்துக்கள் மூலம்தான் நிக்குது.
ராமா ராமான்னு என்னதான் எழுதுனாலும், ராமாவோட இமேஜ் கிடைக்கலைன்னா அது இந்தளவுக்குப் போய் சேர்ந்திருக்காது.
வெறும் வார்த்தைகள் அனுமானிக்கதான் வைக்கும், கோடுகள்தான் மனசுலே கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப்போனா, வார்த்தைகள் பொய் சொல்லும், கோடுகள் பொய்யே சொல்லாது.
கடந்த இருபது வருஷமா தமிழ் இலக்கியத்தோட இயங்கிட்டு வர்றீங்க. அது எந்தளவுக்கு உங்களை பாதிச்சிருக்கு?
சிலரோட எழுத்துக்கள் என்னைப் பாதிச்சிருக்கு. பெயர் குறிப்பிட்டு சொல்ல விரும்பலை. சிலரோட வடிவம் நல்லா இருக்கும், சிலரோட உள்ளடக்கம் நல்லா இருக்கும்.
பொதுவா எழுத்து மட்டுமில்லை, எல்லா விஷயங்களும் என்னை பாதிக்குது. எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறேன்.
பத்திரிகைச் செய்திகள், டிவியிலே வர்ற விளம்பரங்கள், கிராமத்துலே இருந்து வர்ற உறவினர்கள், நாடங்கள் எல்லாம் என்னை influence பண்ணுது.
ஓவியத்துறையில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு என்ன காரணம்?
உலக அளவிலேயே இந்தத் துறையில் பெண்களோட எண்ணிக்கை ஆண்களோட ஒப்பிடும்போது மிகக் குறைவுதான். அதிலும் இந்தியாவிலே மிக மிகக் குறைவு.
இதற்குக் காரணம் இங்க பெண்கள் படிக்க வந்ததே கடந்த 50, 60 வருஷமாத்தான். இங்க சமூகத் தடைகள் ஏராளமா இருக்கு.
ஒரு கலைஞராக இருப்பது என்பது lifetime commitment. ஆனா இங்க கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுறாங்க. அதனாலே பிரகாசிக்க முடியாம போயிடுது.
ஆனா இந்தியாவிலே நவீன ஓவியங்கள்லே முக்கியமான பாதையைத் தொடங்கி வைத்த அமிர்தா சர்கில் ஒரு பெண்தான்.
ஒரு ஹங்கேரியனுக்கும், இந்திய பெண்ணுக்கும் பிறந்தவர். இவர்கிட்ட இருந்துதான் இந்திய நவீன ஓவியங்கள் தொடங்குதுன்னு சொல்லலாம்.
ஓவியர்களைக் கொண்டாடுற தேசங்களுக்குப் போயிட்டு வந்த பிறகு, ஓவியங்களுக்கு பெரிய மரியாதை இல்லாத நம்ம நாட்டு சூழலை எப்படிப் பார்க்கிறீங்க?
கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நம் நாட்டுலே நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருந்தது. சென்னையிலே மிஞ்சிப் போனா ரெண்டு அல்லது மூணு கேலரிதான் இருக்கும்.
ரொம்பவும் கஷ்டப்பட்டாதான் கூட்டம் சேர்க்க முடியும். ஆனா இப்ப நிலைமை மாறியிருக்கு. நல்ல தரத்தோட 30 கேலரிகள் இருக்கு. கண்காட்சி நடத்துனா கூட்டம் வருது. ரசிக்கிறாங்க.
ஓவியம் ஒரு தொழிலா வளர்ந்துட்டு இருக்கு. ஓவியம் சார்ந்த அறிவு எல்லோருக்கும் தேவைப்படுது. ஒரு Web designerக்கு டிசைனிங் பண்ணும்போது கலர் சென்ஸ் தேவைப்படுது.
முன்னே நான் காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தபோது அனிமேஷன் பத்தி பேசறதுக்கு எனக்குத் துணையா யாருமே இல்லை.
இப்ப நிறைய பேருக்கு அனிமேஷன் பத்தி நல்ல ஐடியா இருக்குது. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்னு தோணுது.
நன்றி – கீற்று இதழ்