கலவரச் சூழலுக்கு இடையே கச்சேரி நடத்தினோம்!

விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்

‘நாட்டுப்புறப் பாடல் பாடுபவர்’ என்பது மட்டுமின்றி, விஜயலட்சுமிக்கு வேறு பல முகங்களும் இருக்கின்றன.

கணவரைப் போலவே, இவரும் பல்கலைக்கழகப் பேராசிரியை. சிறந்த பேச்சாளர்.

ஒருமுறை, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவில், ‘சங்க இலக்கியமும் நாட்டுப்புறப் பாடல்களும்’ என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருக்கையில்…

விழாவுக்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் மேடையேறியதும் உடனடியாகச் சுருக்கமாகப் பேசி முடிக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

ஆனால், இவரது பேச்சிலும் நாட்டுப்புறப்பாட்டிலும் லயித்துப்போன எம்.ஜி.ஆர், இவரைத் தொடர்ந்து பேசச்சொல்ல… விடாமல் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் விஜயலட்சுமி.

இன்னொரு முறை மேடையில் கலைஞர் அமர்ந்திருக்க, இவரது நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.

பாண்டியன் எக்ஸ்பிரஸைப் பிடிக்கவேண்டிய அவசரத்தில், முதல்வரின் உதவியாளர் இவரிடம் வந்து பத்து நிமிடத்தில் நிகழ்ச்சியை முடிக்குமாறு அவசரப்படுத்தியிருக்கிறார்.

இதைக் கவனித்துவிட்ட கலைஞர், ‘நிகழ்ச்சி முழுவதும் நடந்து முடிந்த பின்னர் எந்த ரயில் இருக்கிறதோ, அதில் போகலாம். அவசரம் வேண்டாம்’ என்று சொல்லி, ரயிலுக்குக் கிளம்பாமல் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் முடிந்து சில நாட்களிலேயே கலைஞர் கையால் கலைமாமணி விருதும் வாங்கியிருக்கிறார்.

உளுந்தூர்பேட்டை பக்கத்துல ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்தோம். எந்த ஊர்ல நிகழ்ச்சி நடத்த இருந்தோமோ, அந்த ஊருக்கும் அடுத்த ஊருக்கும் சாதிக் கலவரம்னு போலீஸ் தடுத்தும் கேட்காம ஊருக்குள்ள போயிட்டோம்.

ஊருக்குள்ள அரிவாளும் கையுமா ஜனங்க ஓடிக்கிட்டு இருக்காங்க.

தைரியமா மேடையேறி நிகழ்ச்சியை ஆரம்பிச்சோம். கொஞ்ச நேரத்துல, ஜனங்க அமைதியா மேடை முன்னாடி வந்து நின்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஆனா, அத்தனை பேர் கையிலும் ஆயுதங்கள். நிகழ்ச்சி முடியற வரை எந்த அசம்பாவிதமும் நடக்கலை.

நிகழ்ச்சி முடிச்சுட்டுத் திரும்ப வர்றப்ப போலீஸ் எங்ககிட்ட “இனி கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு உங்களை அனுப்பினால் போதும்மா” என்று பாராட்டி அனுப்பிவைத்தார்கள்!

“சிறு வயதில் சின்ன சுரைக்காப்பட்டி கிராமத்தில் இருக்கும் போது, புளியம்பூ திருநாளுக்கு ஆடிப்பாடியது, கண்மாயில் நீச்சல் அடித்தது, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி ஆடியது என்று அத்தனையும் பசுமையான நினைவுகள்.

சிறுவயதில் இப்படி ஆட்டமும் பாட்டமுமாக இருந்த என் வாழ்க்கையைப் பார்த்து பயந்துபோன என் பெற்றோர் ‘ஒழுங்கா படிக்கிற வழியைப் பார்’ என்று பலமுறை எச்சரித்தார்கள்.

‘இப்படி விளையாட்டுத்தனமா இருந்தா படிப்பு எப்படி ஏறும்’ என்று திட்டித்தீர்க்க, விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், பி.ஏ-வில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்தேன்.

அதன் பின், தமிழ் படித்த, தமிழை மதிக்கத் தெரிந்தவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருந்தேன்.

ஏன்னா, அப்ப தமிழ் இலக்கியம் படிக்கிறவரைக் கேலியாகப் பார்க்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.

எனது இந்த கண்டிஷனை ஏற்றுக்கொண்ட என் பெற்றோர் தேடிப் பிடித்து, தூரத்துச் சொந்தமான இவரை எனக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

ஜாதகம் கூடப் பார்க்காமல் வெறும் மனப் பொருத்தத்தைப் பார்த்து நடந்த திருமணம் எங்களுடையது” என்று தனது கடந்த கால நினைவுகளைச் சந்தோஷமாக அசை போடுகிறார் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்.

  • நன்றி : விகடன் பொக்கிஷம்
You might also like