ஒரு பெரிய அரங்கத்தில் நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். சரியாக 11 மணிக்கு ஒருவர் வந்து மேடை ஏறினார். அரங்கம் நிசப்தமாக இருந்தது.
இங்கு யாரெல்லாம் அமைதியுடன் இருக்கிறீர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். நான்கு பேர் கை உயர்ந்தது. அந்த நான்கு பேரும் மாணவர்கள்.
மற்றவர்கள் அனைவரும் அமைதி இழந்து இருப்பது உண்மைதானே என்றார். அனைவரும் அமைதியாக இருந்தனர். உங்களுக்கு அமைதி வேண்டும்தானே என்றார். அதற்கு மட்டும் ‘ஆம்’ என்றனர்.
வாருங்கள் ஒரு நிமிடம் மௌனமாக இருப்போம் என்று கூறிவிட்டு, அந்த மௌனத்தை எப்படி தன் மூச்சினைக் கவனிப்பதன் மூலம் செய்ய வேண்டும் என்று சமச்சீர் பிராணயாமத்தை விளக்கினார்.
அனைவரும் அமைதி காத்தனர். அது முடிந்தவுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, ஒவ்வொரு நாளும் பதினொரு மணி பதினோறாவது நிமிடத்தில் ஒரு நிமிடம் அமைதி காத்து வருகின்றனர் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள்.
அதில் நீங்களும் விரும்பினால் பங்கேற்கலாம் என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினார். எப்படி இணைவது என்று கேட்டனர். ஒரு புலன இணைப்பைப் பகிர்ந்துவிட்டுச் சென்றார்.
உலகில் அமைதி வேண்டாதவர் எவரும் இல்லை. அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு உண்டு.
அதேபோல் அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
உலகில் மேம்பாடு அடைந்து செல்வ வளத்திலும், தரமான வாழ்க்கையை நடத்தும் நாடுகள் அத்தனையும் நமக்கு கூறும் செய்தி போரும் வன்முறையும் அழிவைக் கொண்டுவருமே தவிர மேம்பாட்டைக் கொண்டு வராது, அமைதியில்தான் அத்தனையும் நிகழும்.
அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.

அதுபோல் ஒரு நாட்டின் தலைவனின் அமைதியற்ற நிலை அந்த நாட்டையே அழித்துவிடும்.
மனிதரின் மனம் செம்மைப்படுத்தப்பட்டால் அது ஒருபோதும் வன்முறையை நாடாது.
அமைதியான மனம் ஒரு உற்பத்திக்கூடம். அது நற்செயல்களை உற்பத்தி செய்த வண்ணம் இருக்கும்.
புதுமைகளை புகுத்துவதற்கு மன அமைதி அடிப்படை. உள்ளூரில் கிராம சபையில் தொடங்கி உலகில் ஐக்கிய நாடுகள் சபைவரை செய்ய வேண்டிய முக்கியப் பணி அமைதி காக்க மக்களை, நாடுகளை நெறிப்படுத்துவதுதான்.
அமைதிக்கு யார் பொறுப்பு என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அமைதியை யாருக்கும் எவரும் வழங்க இயலாது. அதை அவரவர் உருவாக்கிக்கொள்ள வேண்டும். செயலில் தோய்ந்த மனிதர்களே அமைதியை உருவாக்குவார்கள்.
உலக அமைதிக்காகவே நம்மூரில் ஒரு நிறுவனம் தொடர்ந்து சமூகத்தில் செயல்பட்டு வருகிறது.
அதுதான் திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான நிறுவனம். பண்பட்ட மனிதர்களை உள்ளூரிலிருந்து உலக நிறுவனங்கள் வரை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.
உள்ளூரில் வசிக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பதிலிருந்து ஐ.நாவில் பணிபுரியும் தலைவர்களை ஆற்றுப்படுத்தும் செயல்களில் தன்னைக் கரைத்துக்கொண்டு செயல்படும் அமைப்பாக, ஆரவாரம் இன்றி செயலில் அர்ப்பணித்திருக்கும் அமைப்புத்தான் அது.
அது மதங்களைக் கடந்து ஆன்மீகத்தை அறிவியலாக்கி வாழ்க்கைக்கு வழிகாட்டும் நிலைக்கு வழிகாட்டும் தலைவர்களுக்கு கருணையும் அன்பும், கொண்ட உணர்வாளர்களாக உருவாக்கிக் கொண்டுள்ளது இதன் சிறந்த பணி.
இந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட உணர்வாளர்கள் ஆயிரம் பேர் கூடினாலும், பக்குவமாக, அமைதி காத்து முறைமையைக் கடைப்பிடித்து, ஒழுக்கமான நடத்தையைக் கொண்டிருப்பார்கள்.
இந்த அமைப்புத்தான் ஆண்டுதோறும் நவம்பர் 11ஆம் நாள் 11 மணிக்கு 11ஆவது நிமிடத்தில் லட்சக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்து உலகத்தின் அமைதிக்காக இந்திய நேரப்படி மௌனம் காக்க வைக்கிறது.
உலகத்தில் பல்வேறு நாடுகளில் இந்திய நேரத்தில் மௌனம் கடைப்பிடிக்கின்றனர். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் ஒரு இடத்தில் ஆயிரக்கணக்கான உணவாளர்களை ஒருங்கிணைத்து நடைபெறுகிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்வுடன் அது நின்று விடுவதல்ல. நவம்பர் மாதம் 11ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் உலகெங்கும் இந்த உணவாளர்கள் ஆங்காங்கே மக்களை ஒருங்கிணைத்து அந்த நிகழ்வினை நடத்துகின்றார்கள்.
அதேபோல் தமிழகத்திலும் பல்வேறு அமைப்புக்கள், நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அதில் பங்கெடுக்கின்றன.
இதை எந்த ஒரு அரசையும் நிர்பந்திக்காமல் தன்னார்வத்துடன் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு இந்த மௌனத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பதைக் கற்றுத் தந்து நடத்த வைக்கின்றது இந்த நிறுவனம்.
இந்த ஒரு நிமிட அமைதியை அன்று மட்டுமல்லாமல் தினம்தோறும் 11 மணிக்கு 11ஆவது நிமிடத்தில் இதைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள், அமைப்புக்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
இதை தனிமனிதராக, குழுவாக, குடும்பமாக, நிறுவனமாக, அமைப்பாக, கடைப்பிடிக்க முயலும்போது மனிதர்களின் உட்கட்டமைப்பு வலுவடையும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதை விவேகாநந்தர் மிகத் தெளிவாக விளக்குவார்.
எப்படி ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிக்கட்டமைப்புக்கள் அவசியமோ அதேபோல் படைப்புத்திறனை செயலில் கொண்டுவர மனிதர்களுக்கு உட்கட்டமைப்பு (இன்னர் பௌண்டேஷன்) மிக முக்கியமானதாகும்.
அந்த உட்கட்டமைப்பு வலுப்படுத்துவதற்கு, அமைதி ஒரு முக்கியக் காரணி.
அதை வளர்த்தெடுக்கும்போதுதான் புதுமைகள் புகுத்துவதற்கான சக்தி எழுகிறது, உயர்கிறது, உந்து சக்தியாக விளங்குகிறது.
இந்தச் சூழலை நோக்கி மக்களை நகர்த்துவதற்கு மக்களின் சிந்தனைப் போக்கை மாற்ற வேண்டும்.
அது ஒரு தலையாய பணி. எப்பொழுது மனிதன் தன்நிலை உணர்ந்து, தன் வலியுணர்ந்து தன்னம்பிக்கை கொண்டு செயலுக்கு முயற்சிக்கின்றானோ அந்த நிலையில்தான் அனைத்துச் செயல்களும் அதன் முழுமையை நோக்கிச் செல்லும்.
எனவே அமைதியின்மை என்பது நாடுகளுக்கிடையில் நடக்கும் போரினால் மட்டும் ஏற்படுவதல்ல.

மனிதர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் அமைதியின்மையைப் பார்க்க முடியும்.
அது தனிமனிதராகட்டும், வீடாகட்டும், நிறுவனமாகட்டும், அமைப்பாகட்டும் எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைந்திருக்கிறது.
அமைதியின்மையைப் போக்கி, எல்லா இடங்களிலும் அமைதியாக வாழும் கலையை கற்றுக் கொடுத்துவிட்டால் மனிதர்கள் பூலோகத்தில் சொர்க்கத்தை உருவாக்கும் வல்லமை பெற்றுவிடுவார்கள்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் இணக்கம் காட்டி குடும்பத்தில், நிறுவனத்தில், அமைப்பில், சமூகத்தில், நாட்டில், உலகில் அமைதியை உருவாக்க வேண்டும்.
மனித குலத்துடன் மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுடன் அன்பு பாராட்டி பிரபஞ்ச லயத்தில் லயித்திருக்கும் ஓர் உணர்வு உருவாக்கப்பட்டு விட்டால் மனிதர்களுக்கு தெய்வாம்சம் வந்துவிடுமே.
இதைத்தான் நம் மகான்கள் அனைவரும் இந்த மண்ணில் செய்தார்கள். ஆகையால்தான் நம் நாட்டிற்குப் புண்ணிய பூமி என்றும் யோக பூமி என்றும் அழைக்கின்றனர்.
அந்த மகான்கள் விட்டுச் சென்ற பணியினைத்தான் உலக சமாதான நிறுவனம் ஒற்றைப் பணியாக எடுத்து மதங்களைக் கடந்து சாதிகளைக் கடந்து, பிராந்தியங்களைக் கடந்து ஓர் உலகம், சமூகமாக மக்கள் வாழ ஒரு சிந்தனை வேண்டும் என்பதற்காக தவமாக இதனைச் செய்து வருகிறது.
அந்த தவச் செயல்பாடுகளில் ஒன்றுதான் ஆண்டுதோறும் நடத்தும் உலக அமைதிக்கான ஆண்டு தினம் நவம்பர் 11.
இந்த ஆண்டு அந்த நிகழ்வு பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. அதில் பதிவு செய்யப்பட்ட 1111 பேர்கள் பங்கேற்கின்றார்கள்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இதில் கலந்து கொள்ளும் அனைவரும் இதில் எப்படி அந்த அமைதியைக் கடைப்பிடிப்பது என்பதனை அறிந்தவர்கள்.
இது பொதுக்கூட்டமல்ல. இது ஒரு கூட்டுத் தவம். எனவே இதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
பாண்டிச்சேரியில் நடைபெறும் இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், மற்றும் மூன்று அமைச்சர்கள், ஓய்வுபெற்ற மத்திய மாநில அரசுத்துறை செயலர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், ஆன்மீக நிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் மிகப் பெரிய உரையாற்றுவதோ கருத்துப் பகிர்வோ இல்லாமல் அமைதி காத்து கலைந்து செல்லும் ஓர் நிகழ்வாகவேதான் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை ஏன் நவம்பர் 11ஆம் தேதி பதினொரு மணிக்கு 11வது நிமிடத்தில் நடத்துகின்றது இந்த நிறுவனம்.
முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஆன 1918 நவம்பர் 11ஆம் தேதியைக் குறிக்கும் வகையில்தான் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது ஆண்டுதோறும்.
போரில்லா உலகமாக, வன்முறையில்லா உலகமாக, சாந்தி நிலவிடும் உலகமாக மாற்ற தமிழகத்திலிருந்து ஒரு முன்னெடுப்பு நடைபெறுவது பெருமைமிகு நிகழ்வாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணில் இந்த உலக சமாதானத்திற்காக முன்னெடுப்பு என்பது ஓர் உலகுக்கு வழிகாட்டும் செயலாகும்.
உலக நாகரீகங்களை ஆய்வு செய்த அர்னால்டு டாயின்பி என்ற வரலாற்று ஆசிரியர் இந்தியாவைப் பற்றி,
“உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பல்வேறு சமயங்கள் தோன்றி வளர்ந்து ஒற்றுமையான சமூகமாக மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூழல் கொண்ட நாடு இந்தியா, அதுதான் உலக நாடுகளுக்கு வழிகாட்டும்” என்று குறிப்பிட்டார்.
இவ்வளவு வித்தியாசங்கள், வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், நிலவிடும் நாட்டில் சமூக நல்லிணக்கம் என்பது மக்களின் நல்லுணர்வால் அமைவது. அது இந்த நாட்டின் பண்பாட்டில் ஒரு சிறப்பம்சம். இந்த நாட்டில் சமூகமாக மக்கள் வாழ பழக்கப்பட்டவர்கள்.
அந்த நல்லுணர்வு இன்றை கட்டுப்பாடற்ற புலன்கள் துண்டப்பட்ட நவீன வாழ்வு முறையில் மக்கள் அமைதியை இழந்து, அமைதிக்கு வழி தேடும்போது இதுபோன்ற இந்திய நிகழ்வுகள் மக்களுக்கு வழிகாட்டுகின்றன. இதில் இன்னொரு சிறப்பு இருக்கின்றது.
ஆன்ம விழிப்பும், ஆன்ம சக்தி கூடுவதும் மனம் அமைதியில் நிலைத்திருக்கும்போதுதான் என்பதை ஒரு ஆங்கில அறிஞன் சோல் போர்ஸ் Soul Force என்ற ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்தப் பின்னணியில்தான் இந்த நிகழ்வினைப் பார்க்க வேண்டும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்து கொள்வது என்பது அமைதிக்கான தன்னெழுச்சியான, தேடுதலாக இருந்தாலும் இது ஒரு அமைதிக்காக கூப்பாடு அதை மக்கள் முன்னெடுக்கின்றார்கள்.
அதற்கு வழிகாட்டுகிறது உலக சமாதான நிறுவனம். இது மக்களின் தேடுதல் மற்றும் கூப்பாடு மட்டுமல்ல, மக்களின் எண்ணங்களை ஒருங்கிணைந்து வெளிப்படுத்துகின்றார்கள்.
இது நாட்டில், சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட அமைக்கப்பட்டுள்ள அமைப்புக்களுக்கு ஒரு செய்தியைத் தருகிறது.
மக்கள் விரும்புவது அமைதி, வன்முறை அல்ல. நற்செயல்களுக்காக மக்கள் நம்பிக்கையுடன் இணைவது என்பதே ஒரு நம்பிக்கை தரும் செயலாக நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த நிகழ்வு அடுத்த (2026) ஆண்டு ஜெனிவாவில் நவம்பர் 11ஆம் தேதி (நாளை) நடக்க இருக்கின்றது என்பது மற்றொரு சிறப்புத் தகவல்.