தொண்டர்களைக் காக்க வைக்கலாமா?

சிவாஜியின் தேர்தல் பிரச்சார அனுபவம்.

அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்கள் தமிழகத்தில் ஒரு வினோதம் என்றால், அவர்களுடன் பத்திரிகைக் காரனாகப் போவது வித்தியாசமான அனுபவம்.

சிவாஜி கணேசனுடன் தேர்தல் சுற்றுப்பயணம் போனபோதும் இதேவிதமான அனுபவம். தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற கட்சியை அவர் அப்போது துவக்கியிருந்தார்.

அப்போது பிரச்சாரத்திற்கு நேரக்கட்டுப்பாடு இல்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வேனில் ஏறி, பளிச்சென்று ஃபோகஸ் லைட் எல்லாம் போட்டுப் பிரகாசமாகிக் கிளம்புகிற பிரச்சாரம் விடிய விடிய நடக்கும்.

‘துக்ளக்’ பத்திரிகை சார்பில் அவருடன் தமிழ்நாடு முழுக்கப் பல நகரங்களுக்கு அவர் பயணப்பட்டபோது அவருடன் மூன்று நாட்கள் கூடவே போனேன்.

முன் சீட்டில் சிவாஜி. பின் சீட்டில் அவருடைய உதவியாளர், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரான ராஜசேகரன், அடுத்து நான்.

காரில் ஏறுவதற்கு முன் “என்னப்பா… அந்தப் பய அனுப்பிச்சானா?” என்றார் ஆசிரியர் சோ-வைக் குறிப்பிட்டு. கதர் வேட்டி, கதர்ச் சட்டை. கழுத்தில் தங்கம் இழையோடும் ருத்திராட்சக் கொட்டை. தோளில் வெள்ளைத் துண்டு.

திருச்சி, மதுரை என்ற போகிற இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம். ரசிகர்களை “நம்ம பிள்ளைகள்” என்று பிரியத்துடன் கூப்பிட்டார்.

பல இடங்களில் மிக எளிமையாக நேரடியாக சகஜமாக உரையாடுகிற மாதிரி தான் மேடைகளிலும் பேசினார். மேடைக்கென்று தனியாக ஒரு மொழியை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை.

போகும்போது சொன்னார். “நேரில் ஒண்ணு.. மேடையில் ஒண்ணுன்னு பேசுறதில்லைப்பா.. நமக்கு அப்படி இருக்க முடியலை..”

தூத்துக்குடியில் மாலை ஆறு மணிக்குக் கூட்டம். ஐந்தரை மணிக்கே தங்கியிருந்த ஹோட்டலில் பரபரக்க ஆரம்பித்து விட்டார்.

படப்பிடிப்பில் சரியான நேரத்திற்குப் போவது மாதிரி கூட்டத்திற்கும் சரியான நேரத்துக்குப் போக வேண்டும் என்கிற துடிப்பில் இருந்தார்.

“அண்ணே… இப்போ போனா நல்லாருக்காதுண்ணே… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போனாத் தான் நல்லாயிருக்கும்ண்ணே”

-கட்சிக்காரர்கள் அவரிடம் சொன்னபோது, சத்தம் போட்டார் சிவாஜி.

“நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்திற்கு வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே.. நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க.. இல்லே.. எதுக்கு அவங்களை வீணாக் காக்க வைக்கணும்?” என்று எந்த விதமான பகட்டும் இல்லாமல் சொன்னவர் சரியான நேரத்திற்குக் கூட்டத்திற்குக் கிளம்பி விட்டார்.

மாலை ஆறு மணி என்று சொல்லிவிட்டு அப்போது இரவு ஒரு மணி வரை மக்களைக் காக்க வைத்து அதன் பிறகே பல தலைவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், சிவாஜியின் இந்த இயல்பு, கூடச் சென்றிருந்த எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

– மணா

You might also like