எழுத்தாளர்களை மதிக்கிறதா நம் சமூகம்?

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 26

வித்தியாசமான வழக்கு தான். கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் நீதிமன்றத்தில் உள் அரங்கில் நானும் நண்பர் வேணுகோபாலும் அமர்ந்திருந்தோம்.

நீதிபதி வருவதற்கு முன்பு சுற்றிலும் சில மலையாள உரையாடல்களைக் கவனிக்க முடிந்தது.

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையைச் சுட்டிகாட்டி வழக்கறிஞர்கள் சிலர் பேசிய பேச்சு முழுமையாக புரியாவிட்டாலும் கூட எங்கள் மீது கடுமை காட்டுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

வழக்கு இதுதான். அப்போது நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் மலையாள பிரபல எழுத்தாளரான ஓ.வி.விஜயனின் நாவல் தொடர்கதையாக வெளிவர ஆரம்பித்திருந்தது.

மலையாளத்திலும் தமிழிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற எழுத்தாள நண்பர்தான் அதை மொழிபெயர்த்திருந்தார். 

இது தொடர்பான தகவல் ஓ.வி.விஜயன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதில் நிகழ்ந்த ஏதோ ஒரு இடைவெளி ஓ.வி.விஜயனை கொதிப்படைய வைத்து அவரது நாவலை தொடர்கதையாக வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கு விசாரணை கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதுதான், கோட்டயம் நீதிமன்றத்தில் பதிலளிக்க என்னை தேர்ந்தெடுத்து அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள்.

நீதிமன்றத்திலிருந்த குற்றவாளி கூண்டில் நான் ஏறுவதற்கு முன்பே கோட்டயத்திலிருந்த எங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர், நீதிபதியின் கேள்விகளுக்கு கிளிப்பிள்ளை மாதிரி எப்படி பதில் சொல்வது என்று சின்னதாக டியூசன் எடுத்திருந்தார்.

நீதிபதி உள்ளே நுழைந்ததும், முதலில் நான் சார்ந்திருந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.

குற்றவாளிக் கூண்டுக்குள் போய் நான் நின்றபோது வழக்கறிஞர்கள் சிலர் சில வார்த்தைகளைச் சொல்லி கிசுகிசுத்து சிரிப்பது புரிந்தது.

நீதிபதி சில கேள்விகளைக் கேட்க நானும் வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்த மாதிரியே பதிலை அமைதியாகச் சொல்ல அடுத்த வாய்தாவுக்கான நாள் சொல்லப்பட்டு நான் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன்.

தங்களுடைய எழுத்தாளரை இப்படி கேவலப்படுத்தியிருக்கிறார்களே? என்கின்ற வசையை கேட்டபடியே நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியே வந்தபோது, ஒன்று மட்டும் புரிந்தது.

நீதிமன்றத்திலும் மலையாள எழுத்தாளர்களுக்கு எத்தகைய உயர்ந்த மதிப்பிருக்கிறது என்பதை நேரடி அனுபவமாக உணர முடிந்தது.

அன்று மதியத்திற்கு பிறகு அதே கோட்டயத்தில் உள்ள பிரபலமான மலையாள பதிப்பக நிறுவனத்திற்குச் சென்றிருந்தோம்.

பெரிய நிறுவனம்தான். உள்ளே நுழைந்ததும் முன்னிருந்த ஹாலில் பலருடைய நூல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

திட்டமிட்ட ஒழுங்கை எல்லாற்றிலும் பார்க்க முடிந்தது.

தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், கமலாதாஸ் என்று முறையாக இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் பல புத்தகங்களை மிகவும் அருமையான வடிவமைப்போடு அங்கே பார்க்க முடிந்தது.

தகழி போன்றவர்களின் முழு எழுத்தாளுமையை காட்டுகிற விதத்தில் அவர்களின் படைப்புகளிலிருந்து சில மாதிரிகளை மட்டும் ஒருங்கிணைத்து அவர்களைப் பற்றிய பிரத்யேக வாழ்வியல் குறிப்புகளோடு, மிகக் குறைந்த விலையில் புத்தகம் ஒன்றைப் பார்த்தேன்.

அப்போதுதான் அது மாதிரி பல எழுத்தாளர்களுக்கும் அதே மாதிரி புத்தகங்கள் மலையாளத்தில் வந்திருப்பது தெரிந்தது.

அதன் வடிவமைப்பு பிரமாதமாக இருந்தது. சில புத்தகங்களை நாங்கள் விலைக்கு வாங்கினோம். 

அங்கிருந்த நிறுவன ஊழியரிடம் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய போது, அருகிலிருந்த ஒரு பீரோவிலிருந்து சில ஃபைல்களை எடுத்து வந்தார்.

அவை ஒவ்வொன்றிலும் மலையாள எழுத்தாளருக்கும் அந்த பதிப்பகத்திற்குமான ஒப்பந்த பிரதிகள் இருந்தன.

அதோடு ஓராண்டில் அந்த எழுத்தாளரின் எந்தெந்த நூல்களுக்கு எவ்வளவு ராயல்டி எப்போது வழங்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பிரதிகள் விற்றிருக்கின்றன என்பது உள்ளிட்ட அனைத்தும் அந்த ஃபைலில் இருந்தன.

அதை காண்பித்தபடி அந்த பதிப்பக நிர்வாகி எங்களிடம் வெளிப்படுத்திய வார்த்தைகளில், மலையாள எழுத்தாளர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அளவுகடந்த மதிப்பும் நேர்மையும் ஒருசேர வெளிப்பட்டது.

மிக எளிமையான மலையாளத்தில் அவர் சொன்னார். “இவர்கள் எங்கள் மலையாள மொழிக்கான பொக்கிஷங்கள் மாதிரி.

இவர்கள் அவர்களுடைய உழைப்பில் உருவான எழுத்துக்களை இம்மாதிரி நாங்கள் வெளியிடுவது எங்களுக்கு பெருமை.

அவர்களை ஏமாற்றி அவருடைய எழுத்தை நாங்கள் ஒரு போதும் விற்கமாட்டோம். இதுதான் எங்களுடைய இலக்கிய கருத்தாக்கலுக்கு நாங்கள் தரும் மரியாதை”

– என்று மிருதுவான குரலில் அவர் சொன்னபோது தங்களது மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் மீது அதை வெளியிடும் பதிப்பகத்தார் வைத்திருக்கும் நம்பிக்கையும் எழுத்தாளர்களிடமே மறைத்து அவருடைய புத்தகங்களை வணிகப் பொருளாக விற்கக்கூடாது என்ற அவர்களிடமிருந்த நேர்மையும் மிகவும் பிடித்திருந்தன.

“கடவுளின் தேசம்“ எப்படியெல்லாம் எழுத்தாளர்களை கௌரவிக்கிறது!

இந்தியாவிலேயே அச்சு வடிவத்தில் முதலில் வெளிவந்த மொழி தமிழ்தான்.

1587-லேயே தரங்கம்பாடி பகுதியில் இருந்த முதல் அச்சுக் கூடத்தில் இருந்து தமிழில் வெளிவந்த முதல் நூல் ‘தம்பிரான் வணக்கம்’.

இதைக் கேட்பது நமக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால், அரிய சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, உ.வே.சாமிநாதய்யர் துவங்கி பல்வேறு தமிழறிஞர்கள் அதை அச்சு நூல் வடிவத்தில் கொண்டுவர படாதபாடுபட்டிருக்கிறார்கள். 

1901-ல் பாண்டித்துரை தேவரால் மதுரையில் துவக்கப்பட்ட மதுரை தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் நூலுக்கான உரை தவறான அச்சுப்பிழைகளுடன் வெளியானதால், அந்த நூல்கள் அனைத்தையுமே அவர் வெளியிட சம்மதிக்கவில்லை என்கிற அளவுக்கு தமிழ் மொழியின் மீது பிடிப்பு கொண்டவர்கள் அப்போது இருந்திருக்கிறார்கள்.

மகாகவி பாரதி பரந்துபட்ட மக்களுக்கு தனது நூல்கள் போய்ச் சேர வேண்டும் என பெரிய விருப்பம் கொண்டிருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் பொருளாதார கஷ்டங்களையே அவர் இறுதிக் காலம் வரை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

‘எழுத்து’ பிரசுரம் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்ட சி.சு.செல்லப்பா ‘வாடிவாசல்’ என்கின்ற ஜல்லிக்கட்டை மையமாக வைத்த நூலை எழுதியும் கூட அவர் வாழ்ந்த காலம் வரை அவருக்கு அந்த நூல்கள் பொருளாதார பலத்தைக் கொடுக்கவில்லை. 

சோமலே, பிலோ இருதயநாத் போன்ற பலர் தான் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ நூல்களை சிரமத்துடன் கொண்டுவந்தபோதும் கூட, அதனுடைய மதிப்பு அவர்கள் வாழ்ந்த காலத்தில் உணரப்படவில்லை.

எழுத்தாளர்களில் ஜெயகாந்தனைப் போன்ற சிலர் மட்டுமே தங்களது நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தார் தங்களுக்கு உரிய ராயல்டி தந்து பெருமைப்படுத்தி இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

தற்போதும், எழுத்தையும் எழுதுகிறவர்களையும் மதித்து ராயல்டி தொகை உள்ளிட்டவற்றை அளித்து பெருமைப்படுத்தும் நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. 

அதேநேரத்தில் தமிழில் பதிப்பகங்களின் எண்ணிக்கை பெருமளவில் பரவி, பதிப்பாளர் சங்கம் எல்லாம் வலுப்பட்டு புத்தகத் திருவிழாவும் ஒருபுறம் சிறப்பாகவே நடக்கிறது. புத்தக விற்பனையும் நடக்கிறது.

பதிப்பாளர்களுக்கு இருக்கிற மாதிரி, எழுத்தாளர்களுக்கு உரிய முறையில் ராயல்டி பெற்றுத் தருகிற எந்த ஒரு சங்கமும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ் எழுத்தாளர் சங்கம் என்கின்ற ஒன்று பெயரளவில்தான் இருக்கிறது.

நெல்லை விளைவித்து அதைப் பயிராக்கினாலும் அதன் பலனை அனுபவிக்காத விவசாயிகளைப் போலவே தமிழ் எழுத்தாளர்களும் இருக்க வேண்டிய சூழல்தான் இன்றும் இருக்கிறது. 

கரிசல் எழுத்தாளரும் மிகவும் கொண்டாடப்பட்டவருமான கி.ராஜநாராயணன் மிகவும் மனம் நொந்துபோய் தன்னுடைய நூல் விற்பனையில் நடந்த முறைகேட்டைப் பற்றி கடுமையான சொற்களில் தபால் கார்டில் எழுதி அனுப்பியதை என்னிடம் நேரில் காட்டி வருத்தப்பட்டிருக்கிறார்.

தமிழின் மிகவும் பாப்புலராகக் கருதப்படக் கூடிய எழுத்தாளர் ஒருவரை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தபோது, வெளியிடும் நூல்களின் எண்ணிக்கையும் தன்னிடம் கணக்குக் காட்டும் எண்ணிக்கையும் வேறுபட்டிருப்பதாகச் சொல்லி மிகவும் ஆதங்கப்பட்டார்.

தமிழின் மிகவும் பிரபலமான நூல்களை எழுதிய ஒரு எழுத்தாளர் தன்னுடைய நாவலின் பிரதியை பதிப்பாளர் தன் இஷ்டபட்டபடி வெளியிட்டதாகச் சொல்லி கொதிப்படைந்து பேசினார்.

சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற எழுத்தாளரும் நண்பருமான பிரபஞ்சனுடன் சென்னையில் உள்ள அவரது நூல்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்திற்கு சென்றோம்.

அப்போது, “தன்னுடைய ஊருக்குப் போக பணம் இல்லை என்று சொல்லி ராயல்டியில் கழித்துக் கொள்ளுங்கள்” என்று மிகவும் மென்மையாக அவர் சொன்னபோது, மிகக் குறைவான தொகைக்காக நீண்ட நேரம் அவர் காக்க வைக்கப்பட்டபோது அவருடன் கூடவே நானும் மவுனமாய் அமர வேண்டிருந்தது.

இதுவரை மொழி, பண்பாடு, சமுகவியல் சார்ந்த சுமார் 50 நூல்கள் வரை நான் எழுதி இருந்தாலும், மிகச் சிலரே ராயல்டி விஷயத்தில் நேர்மையாக இருந்திருக்கிறார்கள்.

ஓவியர் ஆதிமூலத்தைப் பற்றி நான் தொகுத்து எழுதிய ‘ஆதிமூலம் – அழியாக் கோடுகள்’ என்கிற நூலை வெளியிட்டபோது, அந்த விழா மேடையிலே அதற்கான நல்ல தொகையை ‘உயிர் எழுத்து’ பதிப்பக உரிமையாளரும் நண்பருமான சுதிர் செந்தில் கொடுத்தார்.

அப்போது மேடையில் இருந்த ஜெயகாந்தன் “என்னப்பா.. புத்தகம் வெளியிடரப்பவே ராயல்டி வாங்கிறியே” என்று கிண்டலுடன் கேட்டது நினைவில் தங்கியிருக்கிறது.

அதேசமயம் இன்னொரு அனுபவம்.

எனது நூல்களை வெளியிட்ட நிறுவனத்தில் இருந்து ராயல்டியாக வந்த காசோலையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த மிகமிகக் குறைந்த தொகையும் பார்த்ததுமே கொந்தளிக்க வைத்தது.

இவ்வளவுக்கும் அதிக அளவில் விற்பனையான எனது நூல்களில் அதுவும் ஒன்று.

நேரே அந்த காசோலைக் கொடுத்த பெண்மணியிடம் அதற்கான விவரங்களைக் கேட்டபோது, அந்த நூலுக்கு அவர்கள் தந்த மதிப்பு உணர்வுவயப்பட வைத்தது.

அந்தக் காசோலையை அவருடைய டேபிலுக்கு முன்பு சட்டென்று வைத்தேன்.

“உங்கள் வீட்டில் எதாவது இறப்பு நடந்தால் நெற்றியில் காசை ஒட்டுகிற வழக்கம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“ஆம்” என்றபடி தலையசைத்தார் அந்தப் பெண்மணி.

“அப்படின்னா இந்தக் காசோலையை மாற்றி உங்கள் வீட்டில் எதாவது இறப்பு நடந்தால், அந்த சடங்குகளூக்குப் பயன்படுத்திக்கோங்க…” என்று கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினேன்.

எரியும் நெருப்பை மனதில் நுழைக்கிறபோது வெளிவரும் வார்த்தைகளும் அதற்கான கொதிப்புடன் தானே இருக்கும்!

– மணா

You might also like