கிரிக்கெட் வீரர்களை பயமுறுத்தும் ப்ரோன்கோ டெஸ்ட்!

இந்தியக் கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து நம்பர் 1 அணியாக வைத்திருக்க உடல்தகுதி சோதனையைக் கட்டாயமாக்கி வருகிறது பிசிசிஐ.

சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் வீரர்களுக்கு ‘யோயோ’ என்ற உடல்தகுதி சோதனையை கட்டாயமாக்கியது பிசிசிஐ.

இப்போது காலம் மாறிவிட்டதால், அதற்கேற்ற வகையில் யோயோ உடல்தகுதித் தேர்வை கைவிட்டுப் புதியதாக ‘ப்ரோன்கோ டெஸ்ட்’ (Bronco Test) என்ற புதிய உடல்தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் உடல்தகுதி பயிற்சியாளரான ஆட்ரியன் லே ரூக்ஸ் இந்த புதிய உடல்தகுதி தேர்வை அறிமுகப்படுத்தி உள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட அதிகம் ஓடவேண்டும்.

ஆனால், நமது வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஓடுவதற்கு கொடுப்பதில்லை. இதனால் மைதானத்தில் ஓடும்போது அதிகம் காயம் அடைகிறார்கள்.

அதைக் குறைக்க, வீரர்கள் ஓட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ’ப்ரோன்கோ டெஸ்ட்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய டி20 கோப்பை போட்டிக்கு முன்னதாக நேற்று இந்திய வீரர்கள் சிலர் ‘ப்ரோன்கோ டெஸ்ட்’ தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

ப்ரோன்கோ டெஸ்ட் என்றால் என்ன?

ப்ரோன்கோ டெஸ்ட் என்றால் என்ன என்பது பற்றி ஆட்ரியன் லே ரூக்ஸ் விளக்கும் வீடியோ ஒன்று பிசிசிஐயின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியானது.

இந்த வீடியோவில் பேசியிருக்கும் ஆட்ரியன் லே ரூக்ஸ், “இந்த உடல் தகுதி சோதனை விளையாட்டு வீரர்களுக்கு புதிதல்ல.

இது பல ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ப்ரோங்கோ சோதனை என்பது ஒரு வீரரின் சகிப்புத் தன்மை, வேகம், மற்றும் ஒட்டுமொத்த இதயத் தசை உடற்தகுதியை மதிப்பிடப் பயன்படும் ஒரு தீவிர ஏரோபிக் பயிற்சியாகும்.

இதில் 20, 40, மற்றும் 60 மீட்டர் தூர ஓட்டங்கள் இருக்கும் ஒரு வீரர் ஓய்வெடுக்காமல் இந்த 3 தூரங்களிலும் அடுத்தடுத்து 5 முறை ஓடவேண்டும். இதன்படி மொத்தம் 1,200 மீட்டர் தூரத்தை வீரர்கள் கடக்க வேண்டும்.

இந்த தூரத்தை கடக்க 6 நிமிட நேரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த தூரத்தை ஓடிக் கடக்கும் வீரர்கள் உடல்தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர்” என்று விளக்கியுள்ளார்.

ஜூன் 2025-ல் இந்திய அணியின் உடற்தகுதி பயிற்சியாளராக மீண்டும் பொறுப்பேற்ற ஆட்ரியன் லெ ரூக்ஸின் பரிந்துரையின் பேரில் இந்த உடற்தகுதி பயிற்சி இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

லெ ரூக்ஸ் இதற்கு முன்பு ஜனவரி 2002 முதல் மே 2003 வரை இதே பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

மேலும், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற ஐபிஎல் அணிகளுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.

எதற்காக இந்த தகுதித் தேர்வு?

பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி என்று சமீப காலமாக இந்திய வீரர்கள் பலரும் போட்டிகளின்போது காயமடைவது அதிகரித்து வருகிறது.

அதனால் அவர்கள் முழு உடல் தகுதி அடைவதற்காக இந்த முறையை கொண்டுவருவதாக பிசிசிஐ தெரிவிக்கிறது.

இந்தத் தேர்வில் வெற்றிபெற கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதால் இதை நினைத்து இந்திய வீரர்கள் பலரும் பயத்தில் இருக்கிறார்கள்.

விராட் கோலி லண்டன் நகரில் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக கூறியுள்ளார்.

ஆனால், மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தவிர்க்க, அவர்களுக்கு கடினமான முறையில் இந்த உடல் தகுதித் தேர்வு பயிற்சியை கொண்டுவந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு:

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த உடல்தகுதித் தேர்வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெறும் உடல்தகுதி மட்டுமே கிரிக்கெட் விளையாடுவதற்கான தகுதியாகி விடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒவ்வொருவருடைய உடலும் வேறுபட்டது, எனவே அணியில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான தரநிலை வைப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

வீரர்களின் கிரிக்கெட் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு தகுந்தாற்போல் சில விதிவிலக்குகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, நாள் முழுவதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு விக்கெட் கீப்பருக்கு மற்றவர்களை விட வேறுபட்ட உடற்தகுதி நிலை தேவைப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், யார் என்ன கூறினாலும் இந்த உடல் தகுதித் தேர்வை நடத்துவதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.

– பி.எம்.சுதிர்

You might also like