ஒரு திரைப்படத்திற்கான பூஜை நடக்கும்போதோ அல்லது அதற்கு முன்னரோ வெளியீட்டுத் தேதியை அறிவிக்கிற வழக்கம் தமிழ் திரையுலகில் நிலவி வந்திருக்கிறது.
சுமார் நான்கு முதல் ஆறு மாதங்களில் அந்த செயல்முறை நிலவும். அதாகப்பட்டது, பெரும்பாலும் ஆறு மாதங்கள் கழித்து ஒரு படத்தை ‘ரிலீஸ்’ செய்வதாக முடிவெடுக்கப்பட்டது குறிப்பிட்ட காலகட்டம் வரை.
இப்போதோ, ஒரு திரைப்படம் முழுதாக நிறைவடைந்தபிறகும் சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
தொடர்ந்தாற்போல விடுமுறை நாட்கள் இருக்கிற தேதிகளை முடிவு செய்யும்போது, ஒரு மாதத்தின் முதலிரண்டு வெள்ளிக்கிழமைகளைத் தேர்வு செய்யும்போது, ஒரு திரைப்படம் ஓரிரு வாரங்கள் தியேட்டர்களில் இருக்குமென்ற உத்தரவாதம் ஓரளவுக்குக் கிடைப்பதே அதற்குக் காரணம்.
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகிற நட்சத்திர நடிகர் நடிகையரின் படங்கள் முன்பதிவில் ‘கல்லா’ கட்ட இது உதவுகிறது.
இந்த திட்டமிடல் அளவுக்கு மீறி நீண்டு, இப்போதெல்லாம் 12 முதல் 20 மாதங்கள் கழித்து ‘ரிலீஸ்’ தேதியை அறிவிக்கிற வழக்கம் பெருகியிருக்கிறது.
படப்பிடிப்பிலோ, பின்தயாரிப்பு பணிகளிலோ, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதிலோ அல்லது இயற்கைப் பேரிடர் சூழல் உள்ளிட்ட இத்யாதி காரணங்களாலோ, அந்தத் தேதியை மாற்ற வேண்டிய கட்டாயமும் சில படங்களுக்கு நேர்கிறது.
அது படத்தின் லாபம் குறித்த திட்டமிடல் உத்திகளைத் தலைகீழாக்கி விடுகிறது. சமீப ஆண்டுகளில் இதற்கான உதாரணங்கள் கணிசம்.
பெரிய படங்களுக்கே இந்த நிலைமை எனும்போது, முழுமையாகத் தயாராகி வெளியீட்டுக்காகத் தலைநீட்டிக் காத்திருக்கிற ‘சின்ன’ படங்களின் நிலையைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
ஒருகட்டத்தில் அந்த ‘காத்திருப்பு’ மிகப்பெரியதாக மாறி, ‘எப்படியாவது படம் தியேட்டருக்கு வந்திருக்குன்னு ரசிகர்களுக்குத் தெரிந்தால் போதும்..’ என்ற முடிவுக்குத் தயாரிப்பாளர்கள் சிலர் வந்துவிடுகிற நிலைமையே பெரிதும் நிகழ்கிறது.
அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து, ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை நடத்தி ‘கவன ஈர்ப்பு’க்கான வழிகளைத் தேர்ந்தெடுத்தாலும், தியேட்டர்கள் கிடைப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருக்கிறது.
ஒரு வாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறபோது, ஓரளவுக்குப் பெயர் தெரிந்த நடிகர் நடிகையர், தயாரிப்பாளர், இயக்குநர் அல்லது பரபரப்பு செய்திகளால் அறியப்படுகிற படைப்புகளுக்குக் கூடுதல் காட்சிகள், திரைகள் கிடைக்கின்றன.
பல வாரங்களாக வெற்றிகரமாக ஓடுகிற திரைப்படங்களுக்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையாத பட்சத்தில், ’அதிலும் மண் விழுந்துவிடுமோ’ என்று தயாரிப்பாளர்கள் கவலையுறுகிற சூழலே இருக்கிறது.
’குறிப்பிட்ட நேரத்தில் காட்சிகள் கிடைக்கவில்லை; போதுமான தியேட்டர்கள், திரைகள் கிடைப்பதில்லை; இரவுக் காட்சிகள் மட்டுமே கிடைக்கின்றன; நகரங்களின் மத்தியிலுள்ள தியேட்டர்களில் காட்சிகள் ஒதுக்கப்படுவதில்லை’ என விதவிதமான குற்றச்சாட்டுகள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் நிலவுகின்றன.
சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் ’பெங்காலி மொழிப் படங்களுக்கு பிரைம் டைமில் குறைந்தபட்சம் ஒரு காட்சியாவது ஒரு திரையில் ஒதுக்க வேண்டும்’ என்ற உத்தரவினை அனைத்து தியேட்டர்களுக்கும் பொருந்தும் வகையில் பிறப்பித்தது அம்மாநில அரசு.
அதாகப்பட்டது, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திரையிடுகிற காட்சிகளில் ஒன்று நிச்சயமாக பெங்காலி மொழிப் படமாக இருக்க வேண்டும்.
அம்மாநில திரைத்துறையினரின் கவலையைப் போக்கும் வகையில் வெளியானது அந்த அறிவிப்பு.
அதுமாதிரியான அறிவிப்பு மட்டுமே, தற்போது தமிழ்நாட்டில் திரைத்துறையைச் சார்ந்த பெரும்பாலான உழைப்பாளர்களின் கவலையைப் போக்குவதாக இருக்கும்.
ஏனென்றால், தற்போது ஓடிடி உரிமை விற்பனையான படங்களே தியேட்டர்களில் அதிகமும் வெளியாகின்றன.
குறைந்தபட்சமாக ஒரு தொகை கிடைக்குமென்ற உத்தரவாதத்தோடு, அப்படங்கள் தியேட்டர்களுக்கு வருகின்றன.
சிறிய திரைப்படங்கள் தயாரிப்புச் செலவும் மற்றும் வெளியீட்டு முன்னேற்பாட்டுச் செலவு எனப் பல செலவுகளோடு ‘வரவை’ எதிர்பார்த்து வெளியாகின்றன.
அங்கும் திரையிடுவதில், ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதில் சிக்கல் எனும்போது நொந்துவிடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.
அதனால், பட வெளியீட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது.
அதற்கொரு உதாரணம், இந்த வாரம் வெளியாகிற படங்களின் எண்ணிக்கை. பிளாக்மெயில், தணல், குமார சம்பவம், பாம், உருட்டு உருட்டு, யோலோ, காயல், மதுரை 16, தாவுத் ஆகிய படங்களோடு மிராய் எனும் தெலுங்கு பட டப்பிங் பதிப்பும் நேற்று (செப்டம்பர் 13) வெளியாகின.
இது போக இந்தியில் ’ஏக் சதுர் நார்’, ’ஹீர் எக்ஸ்பிரஸ்’, ’ஜுக்னுமா’, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் ‘டெமன் ஸ்லேயர்: கிமெட்சு நோ யாய்பா இன்பினிட்டி கேஸில்’,
‘தி லாங் வாக்’, ’டௌண்டன் அப்பே: தி கிராண்ட் பினாலே’, ’டைரி ஆஃப் எ வுமன்’ மற்றும் வேறு மொழித் திரைப்படங்கள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெளியாகின்றன.
மதராஸி, கூலி, காந்தி கண்ணாடி, பேட் கேர்ள் எனக் கடந்த சில வாரங்களில் வெளியான படங்களும் தியேட்டர்களில் ஓடி வருகின்றன என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
மேற்சொன்னதில் இருந்தே, இந்த வாரம் வெளியாகிற படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள், திரைகள், காட்சிகள் கிடைக்கும் என்பது ஓரளவுக்கு விளங்கும்.
என்னதான் நல்ல, சிறந்த, மிக அரிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் கவனத்தைப் பெறாமல் விடுபட்டுப் போகிற அபாயம் கணிசமாக இதில் இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஒரு வாரம் என்றில்லை, ஒரு ஆண்டில் பல வாரங்கள் இப்படித்தான் நெருக்கியடித்துக் கொண்டு படங்கள் வெளியாகின்றன.
தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு எனப் பண்டிகை நாட்களில் இப்படிப் படங்கள் வெளியானால், பொழுதுபோக்காக தியேட்டருக்கு வருகிற மக்களின் பார்வையில் விழ ஓரளவுக்கு வாய்ப்புண்டு. ஆனால், அந்த நாட்களில் வசூலை வாரிக் குவிக்கப் பெரிய படங்கள் முண்டியடிக்கின்றன.
மாதத்தின் முதல் வார தேதிகளையோ, இரண்டாம் வாரத்தையோ விட்டுக் கொடுக்கக் கூட பெரிய படங்கள் தயாராக இல்லை. அதனால், சிறிய படங்கள் இப்படித்தான் முண்டியடிக்க வேண்டியிருக்கிறது.
இதனை ஒழுங்குபடுத்த ஒரு வழிமுறையைக் கண்டறியாத வரை, அதனைச் சீரிய முறையில் செயல்படுத்தாத வரை, சிறிய படங்கள் மீது ரசிகர்களின் பெருங்கவனம் பதிய வேண்டுமென்பது நிறைவேறவே முடியாத ‘பேராசை’தான்.
என்ன செய்யப் போகிறது தமிழ்த் திரையுலகம்..?!
- டாம்க்ரூஸ்