இந்தக் கண்ணாடிப் பந்து நமக்கு என்ன சொல்கிறது?

இந்த ஆழிசூழ் உலகில் 71 விழுக்காடு பகுதி கடலால் மூடப்பட்டிருப்பது நமக்குத் தெரியும்.

விண்வெளியில் இருந்து பார்த்தால் நமது புவிக்கோளத்துக்கு நீலநிறத்தைக் கொடுப்பது கடல்கள்தான்.

நமது புவி உருண்டையில் இருக்கிற மொத்த நீரில் 97 விழுக்காடு நீர் கடல்களிலும், காஸ்பியன் கடல் மாதிரியான உள்நாட்டுக் கடல்கள், உப்பு ஏரிகளில் இருக்கிறது.

ஆனால் வாயில் வைக்க முடியாத அளவுக்கு உவர்ப்புத்தன்மை கொண்ட நீர் அது.

அப்படியானால் மிச்ச 3 விழுக்காடு?

அந்த 3 விழுக்காடுதான் நாம் குடிக்கக்கூடிய, நமது தாகத்தைத் தணிக்கக் கூடிய நன்னீர்.

அந்த நன்னீரில் 2 விழுக்காடு துருவங்களிலும், பனிமலைகளிலும் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

ஆக இருக்கிற ஒரேயொரு விழுக்காடுதான் நமக்கு நேரடியாகக் கிடைக்கக்கூடிய நன்னீர்.

அந்த நன்னீர் ஆறுகள், ஏரிகளிலும் நிலத்தடியிலும் இருக்கிறது.

அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணைத்தான் நாம் குடிக்கப் பயன்படுத்துகிறோம். கூடவே வேளாண்மை, தொழில்துறை போல பலவித வேலைகளுக்கும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஒரு விழுக்காடு நீரை ஓர் உருண்டையாக உருட்டி, உலகத்தின் ஒரு பகுதியில் வைத்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

12 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள நமது பூவுலக உருண்டையில் அந்த நீர்ப்பந்து வெறும் 1,400 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள ஒரு குட்டி கண்ணாடிப் பந்து மாதிரிதான் இருக்கும்.

அதைத்தான் இந்தப் படம் விளக்குகிறது.

எவ்வளவு சின்ன குட்டியூண்டு பந்து பாருங்கள்.

இந்த கோலிக்குண்டைதான் உலகத்தின் ஒட்டுமொத்த மக்களும் எனக்கு உனக்கு பங்கு போட வேண்டியிருக்கிறது.

அந்த கண்ணாடிப்பந்து நமக்கு என்ன சொல்கிறது?

‘அறிவார்ந்த முறையில் நீரைப் பயன்படுத்துங்கள்’ என்று நமக்கு அது சுட்டிக் காட்டுகிறது. இல்லையா?
 
– மோகன ரூபன் 

You might also like