வரலாற்றில் சோகம் நிறைந்த ஆச்சரியம்!

கலைவாணரின் கடைசி நாட்களில் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பேரறிஞர் அண்ணா கலைவாணரை நலம் விசாரிக்க வந்தார்.

அப்போது,

அண்ணா : டாக்டர் என்ன சொன்னார்?

கலைவாணர்: டாக்டர் வந்தார், கையைப் பிடித்துப் பார்த்தார். ‘கைவிட்டு விட்டார்’.

அண்ணா : என்ன?!

கலைவாணர்: பதட்டப்படாதீங்க… பிடித்த கையை விட்டுவிட்டார். அவ்வளவுதான். (என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்)

அந்தளவுக்கு பேரறிஞர் அண்ணாம், நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும்  நகைச்சுவை உணர்வுடன் இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

கலைவாணரும் அண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டவர்கள். சிரிக்க வைக்கும் கருத்துகள் மூலமாக சிந்தனையைத் தூண்டிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.

பொதுவுடைமை இயக்கத்தினருடன் தோழமை கொண்டவர். திராவிட இயக்கத் தலைவர்களின் அன்பிற்குரியவர்.

அண்ணா, கலைஞர் வசனங்களில் உருவான கலைவாணரின் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

1957 பொதுத் தேர்தலில் தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்டபோது, அண்ணாவை ஆதரித்துப் பரப்புரை செய்தார் கலைவாணர்.

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் கலைஞர், பேராசிரியர் உள்ளிட்ட 15 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றனர்.

சில மாதங்கள் கழித்து, சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில், 09.08.1957-ல் நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில், அண்ணா முன்னிலையில், அண்ணாவின் படத்தைக் கலைவாணர் திறந்து வைத்தார். அதுதான் கலைவாணர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பின் உடல்நலன் குன்றி, மறைந்தார்.

1969-ம் ஆண்டு சென்னை தியாகராய நகரில் கலைவாணர் என்.எஸ்.கே. சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் அண்ணா. அதுதான் அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. 1969 பிப்ரவரி 3-ம் நாள் அண்ணா மறைந்தார்.

வரலாற்றில் பல ஆச்சரியங்கள் உண்டு. இது சோகம் நிறைந்த ஆச்சரியம்.

****

பட்டத்தி மைந்தன் எழுதிய ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

#என்எஸ்கே #கலைவாணர் #அண்ணா #NSK_Nallathambi #kalaivanar #Anna #NSK #NSKrishnan #என்எஸ்_கிருஷ்ணன் #NSKkalaivanar #பேரறிஞர் அண்ணா

You might also like