கல்லூரி விழா ஒன்றில் மாணவர்களது கேள்விக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் அளித்த பதில்கள்.
*வீட்டுக்கு வந்து அதிக நாட்கள் தங்கிவிடும் விருந்தாளியை விரட்ட என்ன வழி?
மூன்று நாட்கள் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போல அவரையும் நடத்த ஆரம்பியுங்கள். மறுநாளே அவர் மூட்டைக் கட்டி விடுவார்.
*நான் விஐபி ஆக என்ன செய்ய வேண்டும்?
இப்போது விஐபி ஆக இருப்பவர்கள் எதை எதையெல்லாம் செய்தார்களோ அதைச் செய்தாலே போதும்.
*ராத்திரி 12 மணிக்கு நீங்கள் க்ரைம் கதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கொலுசு சத்தம் கேட்டால் என்ன செய்வீர்கள்?
எழுந்து போய் “இப்படியெல்லாம் எழுதும்போது டிஸ்டர்ப் பண்ணக் கூடாது கொலுசுகளை கழற்றி வைத்துவிட்டு வேண்டுமானால் நட” என்று சொல்லிவிட்டு வந்து என் எழுத்து வேலையைத் தொடர்வேன்.
*காதலர்கள் எவ்வளவு ரகசியமாக காதலித்தாலும், கடைசியில் வெளியே தெரிந்து விடுகிறதே, எப்படி?
அடிமேல் அடிவைத்து மெல்ல மெல்ல வரும் காதல், போகும்போது கதவை பலமாக சாத்திவிட்டு போவதால்.
* ஒரு கணவனிடம் இருந்து மனைவி மறைக்கும் தப்புகள் என்னென்ன?
தன் பிறந்த வீட்டுக்கு செய்யும் உதவிகள்.
தவணை முறையில் வாங்கி சாயம் போய்விட்ட புடவை.
தொலைத்து விட்ட கொலுசு.
முன்பின் தெரியாத நபரிடம் சீட்டுப் பணம் கட்டி ஏமாந்து போனது.
இப்படிச் சில…
* இந்தியாவைக் காக்க வீட்டுக்கு ஒருவர் போருக்கு வர வேண்டுமென்றால் உங்கள் வீட்டின் சார்பாக யாரை அனுப்புவீர்கள்?
ஏன்… நானே போகக் கூடாதா?
*ஒரு மனைவி தன் கணவன் மீது செலுத்துவது பக்தியாக இருக்க வேண்டுமா, பாசமாக இருக்க வேண்டுமா?
அம்பாக இல்லாதவரை சரி.
*கிரைம் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு மனசு கெட்டுப் போகாதா?
தண்ணீரிலேயே இருக்கும் மீனுக்கு ஜலதோஷம் பிடிக்குமா என்ன?
*நடிகைகளில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?
எனக்கு பிடித்த நடிகை பண்டரிபாய் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
*எழுத்தாளராவது கஷ்டமா, சுலபமா?
புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்டீபன் லீகாக்கிடம் (Steaphen leacock) ஒரு வளரும் எழுத்தாளர் கேட்டார்.
“சார் நீங்கள் இவ்வளவு அருமையாக எழுதுவதற்கு என்ன செய்கிறீர்கள்?”
அதற்கு அவர் “அது ஒன்றும் பிரமாதம் இல்லை. ஒரு பேனா, கொஞ்சம் மை, சில தாள்களை எடுத்துக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து மனதில் தோன்றுவதைல்லாம் எழுதிக்கொண்டே இருந்தால் போதும்.”
“அவ்வளவுதானா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அந்த வளரும் எழுத்தாளர்.
“அவ்வளவுதான். ஆனால் மனதில் தோன்றுவது தான் கஷ்டம்” என்றாராம் ஸ்டீபன் லீகாக்.
என்னுடைய பதிலும் இது தான்.
நன்றி: முகநூல் பதிவு