சாப்பிடக்கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டேன்!

எமனிடம் இருந்து மீண்ட பொன்னம்பலம் உருக்கம்

எண்பதுகளில் ஒரு படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் வைப்பது, கோடம்பாக்கத்தில் ஒரு சடங்காகவே இருந்தது. அதற்கான ஒரே தேர்வாக இருந்தார் சில்க் ஸ்மிதா.

சண்டைக் காட்சி தேவைப்படாத காதல் படங்களில், ஹீரோவின் ரசிகர்களை திருப்தி செய்ய ஒரு சண்டைக் காட்சியை நுழைப்பது, இயக்குநர்களின் வாடிக்கையானது. அந்த ஸ்டண்ட் காட்சிக்கு, ஹீரோக்களின் ஒரே சாய்ஸ் – பொன்னம்பலம்.

’துள்ளாத மனமும் துள்ளும்‘ ஆகச் சிறந்த உதாரணம்.

முத்து, நாட்டாமை உள்ளிட்ட பல படங்களின் வெற்றியில் பொன்னம்பலத்துக்கு பங்கு உண்டு. உடல்நிலை சரியில்லாமல் இருந்து, எமனிடம் இருந்து மீண்டு வந்துள்ள அவர், தனக்கு உதவியவர்கள் குறித்து அளித்துள்ள உருக்கமான நேர்காணல் இது;

“ஸ்டண்ட் கலைஞராக மட்டுமல்லாமல், மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞராகவும் இருந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என்னை சிலர் ஏமாற்றி இருக்கிறார்கள். சிலரை நம்பி பணத்தை இழந்திருக்கிறேன். அவற்றை எல்லாம் கடந்து வந்துவிட்டேன்.

என் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்று நான் சொல்லிக் காட்ட விரும்பவில்லை.

உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன். டையாலிசஸ் செய்யும் நிலைமை, என்னுடைய எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இதனை உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனையாகக் கருதுகிறேன்.

இப்போது மட்டும் சுமார் ரூ.35 லட்சத்திற்கும் மேல் சிகிச்சைக்காக செலவானது. எனக்கு கடவுள் மாதிரி இருந்து உதவி செய்தது சிரஞ்சீவி சார் தான்.

என்னுடைய சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தார். ஏறத்தாழ ரூ.1 கோடியே 15 லட்சம் வரை அவர் செலவு செய்திருக்கக் கூடும்.

நடிகர் அர்ஜூன் வீட்டில் ஒருவர் மறைந்த சூழலில் கூட, எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார்.

தனுஷ் வீட்டில் பிரச்சனைகள் இருந்த போதும், எனக்காக அவர் பல உதவிகளைச் செய்தார். இவற்றை ஒரு நாளும் மறக்க மாட்டேன்” என்று நெகிழ்கிறார் கபாலி என்கிற பொன்னம்பலம்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like