தலைவன் தலைவி – ஊடலும் கூடலும் தவிர்க்க முடியாதது!

ஒரு திரைப்படத்தில் யார் யார் பணிபுரிகின்றனர் என்பதைப் பொறுத்து ரசிகர்களிடத்தில் அது குறித்த எதிர்பார்ப்புகள் பீறிடும்.

அந்த வகையில் இயக்குனர் பாண்டியராஜ் உடன் நாயகனாக விஜய் சேதுபதியும் நாயகியாக நித்யா மேனனும் கைகோர்க்கின்றனர் என்பதே ‘தலைவன் தலைவி’ படத்தை ரசிகர்கள் ரசிக்கத் தயாராகக் காரணமாக இருந்தது.

படத்தின் ட்ரெய்லரும் ‘ராக்கெட்’ வீச்சு போல அமைந்து, அவர்களது எதிர்பார்ப்பினை இரட்டிப்பாக்கியது.

தற்போது ‘தலைவன் தலைவி’ தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

‘த.த.’ கதை!

’தலைவனும் தலைவியும் முதலில் ஊடல் கொண்டு பின்னர் கூடலைக் கண்டனர்’ என்பது சங்க காலம் தொட்டு ஆண், பெண் காதல் பற்றிச் சொல்கிற விஷயங்கள் தான். தற்போதைய மொபைல் போன் யுகத்தில் மதுரை வட்டாரக் கிராமமொன்றில் வாழ்கிற ஒரு இளம் தம்பதி எப்படி அந்த காதலைத் தமது வாழ்வில் கொண்டிருந்தது என்று சொல்கிறது ‘தலைவன் தலைவி’.

தூண்டி கருப்பசாமி கோயிலுக்குக் கைக்குழந்தையாக இருக்கும் மகள் மகிழினிக்கு முடி காணிக்கை செலுத்தத் தாய் அரசாங்கம் (செம்பன் வினோத் ஜோஸ்), தாய் ஆவர்ணம் (ஜானகி சுரேஷ்) உடன் வருகிறார் அரசி (நித்யா மேனன்).

ஆனால், அவரது கணவர் குடும்பத்தினர் யாரும் அங்கு வரவில்லை. காரணம், தம்பதிகளுக்குள் மூன்று மாத காலமாகத் தொடர்ந்து வரும் பிரிவு.

அரசியைப் பார்த்த முதல் கணம் முதல் பேரரசியாக எண்ணி வருகிறார் கணவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). அவரால் மனைவியை விட்டுப் பிரிவதை எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. அப்படிப்பட்டவர் அவரை விட்டு மூன்று மாத காலம் பிரிந்திருக்கக் காரணம் என்ன? அவருக்குள் எப்படிப்பட்ட கோபம் புதைந்திருக்கும்?

அதனைப் பேரரசியிடமோ, அவரது தாய் தந்தையிடமோ காட்டாமல், முடி இறக்க வந்த சவரக்காரரை (செண்ட்ராயன்) அடித்துவிடுகிறார் ஆகாசவீரன். அதனை அவர் தாம் சேர்ந்த தொழிலாளர் சங்கத்தை அழைத்துச் சொல்லிவிடுகிறார்.

கூடவே, தமது உறவினர் (பாபா பாஸ்கர்) ஒருவருக்கும் தகவல் சொல்கிறார். இரு தரப்பும் அக்கோயிலை நோக்கி வேகத்துடன் கிளம்பி வருகின்றனர்.

இன்னொரு புறம் பேரரசியின் சகோதரர் பொற்செல்வனிடம் (ஆர்.கே.சுரேஷ்), கோயிலில் மச்சான் ஆகாசவீரன் தகராறு செய்வதாகத் தகவல் சொல்லப்படுகிறது. அவர் சில அடியாட்களுடன் கோயிலுக்குக் கிளம்பி வருகிறார்.

இதற்கு நடுவே, கோயிலில் இருக்கும் திருடன் சித்திரை குமாரை (யோகிபாபு) தேடி போலீஸ் படை அங்கு வருகிறது.

இது போதாதென்று புதுக்கோட்டையில் கேபிள் டிவி நடத்தி வரும் அமரசிகாமணி (காளி வெங்கட்) வேறு தனது மனைவி (மைனா நந்தினி), குழந்தைகளுடன் அங்கு வந்திருக்கிறார். சாமி கும்பிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களோடு ஆகாசவீரனின் உறவினர்கள் வேறு கோயிலை நோக்கித் திரண்டு வருகின்றனர்.

கணவன் மனைவிக்குள் இருக்கிற குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க அரிவாள், கம்புகளுடன் பல படைகள் கோயிலை நோக்கி அணிவகுக்கின்றன. அதன்பிறகு என்னவானது? அந்த தம்பதிகள் ஏன் பிரிந்தார்கள் என்று தெரிய வந்ததா? அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்று சொல்கிறது ‘த.த.’ படத்தின் மீதி.

வாய்விட்டுச் சிரிக்கலாம்..!

’த.த.’ படத்தின் மிகப்பெரிய பலம், அதன் காஸ்ட்டிங். விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் சத்தமாகப் படம் முழுக்கப் பேசிக் கொண்டே இருக்கின்றனர்; ஆனாலும், அவர்களது நடிப்பு ‘சூப்பர்’ என்று சொல்லாத ரசிகர்களே இருக்க முடியாது. அப்படியொரு நடிப்பை இருவரும் தந்திருக்கின்றனர்.

இவர்களோடு போட்டி போடும் வகையில் நாயகனின் தாயாக வரும் தீபா சங்கர், தங்கையாக வரும் ரோஷினி, அவரது கணவராக வரும் வினோத் சாகர், நாயகியின் பெற்றோராக வரும் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஜானகி சுரேஷ், மகனாக வரும் ஆர்.கே.சுரேஷ் தொடங்கி சரவணன், காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், முத்துக்குமார், செண்ட்ராயன், பாபா பாஸ்கர் என்று பெரும்கூட்டமே இதில் நடித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் தந்தையாக வரும் சரவணன் அளவாகத் திரையில் தோன்றியிருக்கிறார். அவரது தம்பியாக வருபவருக்கு ‘ஸ்கோர்’ செய்ய வழியில்லை. ஆனாலும் சில ஷாட்களில் இருக்கிறார். அவரது ஜோடியாக ஒரு பெண் வந்து போயிருக்கிறார்.

அவ்வப்போது யோகிபாபு வேறு நம்மை கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டே இருக்கிறார். இப்படிப் பல பாத்திரங்கள் இதில் வந்து போயிருக்கின்றன.

இத்தனை முகங்களைக் காட்டியபோதும், எவரையும் சரிவரத் திரையில் காட்டவில்லை என்ற புகாரே எழாத அளவுக்குத் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இதில் லாஜிக் மீறல்களைக் கொஞ்சமாய் உற்றுக் கவனித்தாலே நிச்சயம் கண்டுபிடிக்கலாம். ஆனாலும், ‘தியேட்டர் மொமண்ட்’டுக்காக அதனைப் புகுத்தியிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பல இடங்களில் ‘வாய் விட்டுச் சிரிக்கலாம்’ எனும் உத்தரவாதத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

எந்நேரமும் சண்டையிடுகிற கணவன் மனைவி தான் இக்கதையின் பிரதானம். காரண காரியங்கள் இல்லாமல் அச்சண்டை அமைந்திருப்பதாகப் பிறர் சொன்னாலும், அதன்பின்னே நுணுக்கமாகச் சில விஷயங்கள் இருக்குமென்று உணர்த்துகின்றன காட்சிகள். அந்தக் காட்சி அமைப்புக்கும் அதனைச் சரிவர ஆக்கியதற்கும் பாராட்டத்தான் வேண்டும்.

‘இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்’ என்று சொல்கிற வகையில் இதன் காட்சியாக்கத்திற்கு உதவியிருக்கிறது ஒளிப்பதிவாளர் சுகுமார், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், கலை இயக்குனர் வீரசமர் மற்றும் இதர தொழில்நுட்பக் குழுவினர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பொட்டல முட்டாயி’, ’செல்லக் கோளாறே’, ‘பேரரசி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன.

அவற்றைத் தாண்டி ரசிகர்கள் ‘கூஸ்பம்ஸ்’ ஆகிற வகையில் பின்னணி இசையில் தாளங்களைத் தட்டி இறைத்திருக்கிறார் ச.நா.

‘நாங்க மதுரக்காரய்ங்க சத்தமாத்தான் சிரிப்போம், அழுவோம், சண்டை போடுவோம்.. சந்தோஷமாகவும் இருப்போம்’ என்று கதை மாந்தர்களைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

அந்த சித்தரிப்பில் சினிமாத்தனம் இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் சீரியல்களை மிஞ்சும் வகையில் இருந்தாலும், யூடியூப் வீடியோக்களில் இது போன்ற உள்ளடக்கத்தைக் காண நேர்ந்தாலும், அவற்றில் இருந்து விலகி நேர்த்தியான ‘குடும்பச் சித்திரம்’ பார்த்த திருப்தியைத் தருகிறது ‘தலைவன் தலைவி’.

இது எல்லா தம்பதியருக்கும் பொருந்தாது என்பதைத் திரையில் லேசாகச் சொல்லிவிட்டு, சில ஜோடிகளின் இல்வாழ்வில் இறுதிவரை கூடலும் ஊடலும் தவிர்க்க முடியாதது என்று சொன்ன வகையில் ஈர்க்கிறது இப்படம்.

நாயகன் நாயகியின் வடிவத்தை ‘க்ளே அனிமேஷனில்’ ஆங்காங்கே உலா வர வைத்தது, பிளாஷ்பேக் பாணியில் அடுத்தடுத்து கதாபாத்திரங்களுக்கு இடையே பிரச்சனையின் பெருக்கத்தைச் சொன்னது என்று கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷான திரையனுபவத்தைத் தந்திருக்கிறார் பாண்டிராஜ்.

நட்சத்திர இயக்குனர், நாயகன், நாயகி சேரும்போது எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரிக்கும். அதனை எப்படி எதிர்கொள்வது என்பதைத் திட்டமிட்டுக் கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் இயக்குனர்.

அதனால், இந்த ‘தலைவன் தலைவி’ இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் பெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தக்கூடும்.

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
You might also like