இந்த உலகிலேயே எதற்கும் பயன்படாது என்று நாம் ஒதுக்கும் பொருள் மனிதக் கழிவுகள். ஆனால், அந்த மனிதக் கழிவுகளையும் விலை கொடுத்து வாங்கத் திட்டமிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
மனிதக் கழிவுகள் மட்டுமல்ல… உணவுக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், காகிதக் குப்பைகள் என எல்லா விதமான கழிவுகளையும் சேர்த்து மொத்தம் 49 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை வாங்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.
இவற்றை வாங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாயை மைக்ரோசாஃப்ட் செலவு செய்யவுள்ளது.

பூமிக்கு அடியில் மிக ஆழமாக ஒரு பள்ளத்தை தோண்டி அதற்குள் ஒரு ராட்சத ஊசி மூலம் இந்த மொத்த குப்பைகளையும் போட்டு மூட மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.
2026-ம் ஆண்டுமுதல் அடுத்த 12 ஆண்டுகளுக்கு இதுபோல் குப்பைகளை வாங்கி, பூமிக்குள் உருவாக்கும் பள்ளத்தில் போட்டு மூட மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.
இதற்காக டீப் வால்ட் என்ற நிறுவனத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் குப்பை மற்றும் கழிவுகளில் நகர்ப்புறங்களில் உள்ள கழிவுநீர்கூட அடங்கும்.
இந்தக் குப்பைகளை வாங்கி பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அதில் மூடும் முறைக்கு ‘பயோஸ்லரி’ (bioslurry) என்று பெயரிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட்.
இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு என்ன லாபம்? என்று கேட்கிறீர்களா…
இந்த உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடும் நிறுவனங்களில் ஒன்றாக மைக்ரோசாஃப்ட் உள்ளது. இந்நிறுவனம் 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் 75.5 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கு அதிக மின் சக்தியும் நீரும் தேவைப்படுகின்றன. இவை அதிக ஆளவில் கரியமில வாயுவை உமிழ்கின்றன.

தனது கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்குகளை அடைய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலிகைக் கழிவுகளை நிலத்தடியில் ஆழமாகப் புதைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும்.
அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.
இதுபற்றி கூறும் டீப் வால்ட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜூலியா ரிச்செல்ஸ்டீன், “குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் அவற்றை பூமிக்கு கீழே மிக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்கிறோம்” என்றார்.
– பி.எம்.சுதிர்