கேள்வி :
உங்க தந்தைக்கு நடிப்பின் மீது ஏன் இவ்வளவு காதல் இருந்தது?
நாசர் :
இது ஒரு வினோதமான எண்ணம்தான். அந்தக் காலத்துல தம் பிள்ளைகள் படிச்சு கலெக்டர் ஆகணும், டாக்டராகணும், எஞ்ஜினீயர் ஆகணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், எங்கப்பா தன் மகன் நடிகனாக ஆகணும்னு ஆசைப்பட்டார். இது இன்ட்ரஸ்டிங்கான விஷயந்தான்.
சினிமாவுல பிரச்சனைகள் வரும்போது என் அப்பாவிடம் நான் சண்டையே போடுவதுண்டு. “என்னை ஏன் நடிகனாக்குனீங்க. மாதச் சம்பளக்காரனாகவே நான் நிம்மதியா வாழ்ந்திருப்பேனே”ன்னு சொல்லுவேன்.
ஏர்போர்ஸில் எனக்குக் கிடைத்த வேலைய விட்டுட்டுத்தான் நடிக்க வந்தேன். தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வேலை கிடைத்தது. அத விட்டுட்டேன். அதனால ‘நான் நடிகனாகி எனக்கென்ன கிடைச்சுது’ அப்படீன்னு அப்பாகிட்ட சொல்லுவேன்.
ஆனா முழு மனதோட வெறுக்கல. நான் சொல்கிற கருத்துகள் பரவலாகப் போய்ச் சேருது. என்னுடைய பேரு, சம்பளம் மட்டுமே அடையாளமில்லாமல் எனக்கென்று கலாரீதியான அடையாளம் இருக்கு. அதெல்லாம் எனக்கு மகிழ்ச்சிதான்.
பிரச்சனைன்னு வரும்போது, அது குடும்பத்துக்குள்ள திரும்பும்போது அதுமாதிரி சொல்றதுண்டு. மொத்தத்துல என் அப்பாவோட கனவுதான் நான் பெரிய நடிகனாகணும்ங்கிறது.
நான் சின்னப்பையனாக இருக்கும்போது ஷகிலாங்கற குழந்தை நட்சத்திரம் பிரபலமாக இருந்தார். அவர் நடித்த எந்தப் படமாக இருந்தாலும் அப்பா என்னை அழைத்துச் சென்று காட்டுவார்.
அதேபோல மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் நடித்த படங்களைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைப்பார். அப்பல்லாம் அவர் கனவு என்னன்னு எனக்குத் தெரியாது.
ஆனால், நான் ஏர்போர்ஸில் சேரணும்னு முடிவு எடுத்த பிறகுதான் நீ நடிகனாகணும்னு சொன்னாரு. அதுவரை நான் ஏன் நாடகத்தில் நடிக்க வைக்கப்பட்டேன். ஏன் ஷகிலா போன்ற குழந்தை நட்சத்திரங்களின் படங்களைப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்ங்கறது தெரியாது.
ஷகிலா சோகக் காட்சிகளில் அழுது நடிப்பதில் பிரபலமானவர். படம் பார்த்து வந்த பிறகு, ஷகிலா மாதிரி என்னை நடித்துக் காட்டச் சொல்லுவார்.
என் எதிர்காலம் தொடர்பாகத் தனக்குள் ஒரு கனவை வளர்த்துக்கொண்டு வந்துள்ளார் என்பது நான் வேலைக்குச் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்த பின்னர்தான் தெரிந்தது.
இதை ஒரு மரபார்ந்த ஈடுபாடாகக் கொள்ளலாம். ஆனால், எந்த அளவுக்கு அது கலாரீதியானதுன்னு சொல்ல முடியாது.
ஒருவேளை அவர் நல்லாப் படித்திருந்தால் நடிகனாகணும்னு நினைக்கும்போது நவீன நாடகங்களில் விட்டிருக்கலாம்.
நாங்க லோயர் மிடில் கிளாஸ்தான், இருந்தாலும் அவங்க வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய பொருளாதாரச் சுமைகள் கிடையாது. அதனால இந்த மாதிரி சிந்தனைகள் வந்திருக்கலாம்.
எங்க அப்பா தங்க நகைகளுக்கு கில்ட் போடுகிற தொழில் செய்து வந்தார். மார்க்கெட் பக்கத்தில் ஒரு மேசை அளவு இடம்தான் கடை.
குடும்பத்துல உள்ளவங்க, சொந்தக்காரங்க எல்லாம் என்னையத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. குடும்பத்துல உள்ள முக்கியமான உறுப்பினர் என் மீது கடுமையான குற்றச்சாட்டு வைத்தார்.
“நீ இவ்வளவு பெரிய நடிகனாயிட்ட. இன்னும் அப்பாவை கில்ட் போட்டு சம்பாதிக்க வைச்சிக்கிட்டு இருக்க”ன்னு சத்தம் போட்டார்.
அதுவரைக்கும் அதை நான் உணரவேயில்லை. நானும் ஒரு பெரிய நடிகன் அப்படின்னு உணர்ந்ததேயில்லை. அவரும் யதார்த்தமாக இருந்தார்.
ஒரு நாள் இது பிரச்சனையாகி “சரிப்பா இனிமே சம்பாதித்து என்ன செய்யப் போறீங்க. எனக்கு மானம் போகுது”ன்னேன். அவருக்கு அது அதிர்ச்சியா இருந்தது.
இருந்தாலும் சரிப்பா இனிமே வீட்டிலேயே இருக்கேன்னு சொல்லிட்டார். அப்புறம் ஒரு மாதத்துக்குப் பிறகு வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பா என்னைவிட இளமையா இருப்பார். ஆனால் அன்னக்கி ரொம்ப வாடிப் போயிருந்தார்.
“ஏன்டா என்னய வீட்டுல உட்கார வைச்ச. எல்லாமே போச்சேடா’ன்னார். (தொடர்ந்து பேச முடியாமல் நாசர் குரல் தழுதழுத்தது.) “என்னப்பா என்னாச்சு”ன்னேன்.
“கடையில் இருக்கும்போது ஒருத்தன் வருவான். என்ன பாய், உன் பையன் கமல்கூட நடிக்கிறானாமேன்னு சொல்லுவான். அப்புறம் இன்னொருத்தன் வந்து உன் பையன் நடித்த இன்ன படம் 100 நாள் ஓடுதாமேம்பான்.
இல்லன்னா பாய் உன் பையன் நடித்த படம் ஓடலயாமுல்லம்பான். இப்படி ஏதாவது ஒண்ணு சொல்லிக்கிட்டே இருப்பாங்கடா. இப்ப ஒண்ணுமே இல்ல. வாழ்க்கையே இல்லாத மாதிரி இருக்கு”ன்னு சொன்னாரு.
அவர் எனக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடைத்தெருதான் அவர் என்னைப் பார்ப்பதற்கான சாளரமாக இருந்துள்ளது. அது அடைபட்டதும் அவரால் தாங்க முடியவில்லை. அவர் கனவில் அவர் வாழ முடியவில்லை.
நன்றி: தீராநதி