450 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழும் புதைப்படிவம்!

கடற்கரையின் அலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது நண்டு போல தோற்றமளிக்கும் நீண்ட வால் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினம் மணலுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தால் எப்படி இருக்கும்?

டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றி பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உயிரினம் இன்று வரை மிகக் குறைந்த பரிணாம மாற்றங்களுடன் உயிர் பிழைத்துள்ளது.

இதனால் விஞ்ஞானிகள் இதை உயிருடன் வாழும் புதைப்படிவம் என்று அழைக்கின்றனர். அதன் பெயர்தான் குதிரை லாட நண்டு.

இந்த குதிரை லாட நண்டுகள் சுமார் 445 முதல் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை தேள் மற்றும் சிலந்தி வகைகளுக்கு நெருங்கிய உறவினர்கள். இவற்றின் உடலில் சுமார் 10 கண்கள் மற்றும் ஒளி உணரும் உறுப்புகள் காணப்படுகின்றன.

அவற்றில் சில கண்கள் இணையைத் தேட உதவினாலும் மற்றவை நிலவொளி மற்றும் சுற்றுப்புற மாற்றங்களை உணர உதவுகின்றன.

இந்த உயிரினம் வெளிப்புற தோற்றத்தில் மட்டும் தனித்தன்மையை வெளிப்படுத்தவில்லை. இவற்றின் நீல நிற ரத்தமும் தனித்தன்மை உடையதே.

மனிதனின் ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு இரும்பு காரணமாக இருப்பது போல இவற்றின் ரத்தம் நீலமாக இருப்பதற்கு தாமிரம் காரணமாக உள்ளது.

இவற்றின் இரத்த அணுக்களில் இருந்து தயாரிக்கப்படும் Limulus Amebocyte Lysate (LAL) என்ற பொருள் பாக்டீரியாக்களில் உள்ள நச்சுப் பொருட்களைக் கண்டறியும் திறன் கொண்டது.

இதனால் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பை சோதிக்க இது மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் Tachypleus gigas மற்றும் Carcinoscorpius rotundicauda என்ற இரண்டு இனங்கள் காணப்படுகின்றன.

அவை பெரும்பாலும் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மற்றும் பிதர்கனிகா பகுதிகளிலும், மேற்கு வங்காளத்தின் சுந்தரவனப் பகுதிகளிலும் வாழ்கின்றன.

ஆனால், சமீபத்திய ஆய்வுகள் ஒடிசா கடற்கரைகளில் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாக எச்சரிக்கின்றன.

கோடைக் காலங்களில் அதிக அலைகள் ஏற்படும் இரவுகளில், குதிரைலாட நண்டுகள் கடற்கரைக்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

பெண் நண்டுகள் மணலில் குழி தோண்டி ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகின்றன.

ஒரு பெண் நண்டு 60,000 முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் வரை இடக்கூடும். இருப்பினும் அவற்றில் மிகக் குறைந்த குஞ்சுகளே உயிர் பிழைக்கின்றன.

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பல முறை தங்களது வெளிப்புற உறையை கழற்றி வளர்கின்றன.

சுமார் 9 முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகே அவை முழு வளர்ச்சி அடைகின்றன.

அவற்றின் ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்த இந்த உயிரினம் இன்று ஆபத்தில் உள்ளது.

மீன்பிடி வலைகளில் சிக்குதல், கடற்கரை கட்டுமானங்கள், சுற்றுலா வளர்ச்சி, வாழிட அழிவு மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் போன்றவை இவற்றின் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்து வருகின்றன.

ஒடிசா கடற்கரையில் ஆயிரக்கணக்கான குதிரை லாட நண்டுகள் வலைகளில் சிக்கி இறந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலத்தின் மாற்றத்தால் டைனோசர்கள் அழிந்துவிட்டன.

ஆனால், 450 மில்லியன் ஆண்டுகளாக உயிர் பிழைத்து மருத்துவ உலகிற்கும் இயற்கைக்கும் முக்கியமான இந்த கடல்வாழ் உயிரினமான குதிரை லாட நண்டுகள் (horseshoe crabs) இன்று மனிதர்களின் அலட்சியத்தால் அழிவின் விளிம்பில் நிற்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

– சங்கீதா

You might also like