சிவகுமாரை சினிமாவுக்குள் வரவேண்டாம் என்றவர்!

எம்.ஆர்.ராதா அவர்களின் அசாத்திய நடிப்புத் திறமையையும் அவரின் இயல்பான சுபாவத்தையும் புரிந்துகொள்ள ‘ரத்தக் கண்ணீர்’ ஒரு படம் பார்த்தால் போதும்.

தொழுநோயாளி வேடத்தில் அவரை மிஞ்ச இந்தியாவில் எந்த நடிகனாலும் முடியாது.

ராதாவின் நாடகக் குழுவில் சிவாஜியும் நடித்திருக்கிறார். நாடக மேடையில் புராணக் கதைகளை நையாண்டி செய்வதிலாகட்டும், மூடப்பழக்கங்களை தோலுரித்துக் கிண்டல் செய்வதிலாகட்டும் அவருக்கு இணையான நடிகர் யாருமே இல்லை.

நடிகர்களைக் கடவுளாகக் கொண்டாடும் ரசிகர்களைக் கடுமையாகச் சாடினார். மண்ணில் ராமன், அரிச்சந்திரன் என்று எவனும் இல்லை என்பார்.

பொள்ளாச்சியில் ராதா நாடகக் குழு முகாமிட்டு ஒரு வாரம் நாடகம் போட்டபோது நூற்றுக்கணக்கான நடிகர்களுக்கு வாரம் முழுக்க தன் ஓட்டலிலிருந்து இலவச அசைவ உணவு வழங்கியவர் என் மாமா.

1959-ன் துவக்கத்தில் மாமாவின் நண்பரான ராதாவை சென்னையில் – இப்போதைய சிவாஜி வீட்டுக்கு எதிரில் சந்தித்து, ‘நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தில் – டை, கோட்டுடனிருந்த அவர் உருவத்தை வரைந்து எடுத்துப்போய் காட்டினேன்.

‘பிரமாதம்’ என்றவர் வந்த விஷயத்தைக் கேட்டார். சினிமாவில் நடிக்க சான்ஸ் என்றேன்.

“அட, பைத்தியக்காரா, இவ்வளவு பெரிய (ஓவியக்) கலையை கையில வச்சிகிட்டு நடிக்க வர்றியா!…

இதப் பார், அரிதாரம் பூசினவன் எல்லாம் நடிகன்னு சொல்லிக்கலாம். ஆனா, இந்த மாதிரி ஆர்ட் வரையறவன் அபூர்வம். ஒழுங்கா போய் ஏதோ பொம்மை காலேஜ்னு சொன்னியே அதில சேர்ந்து படி. அதையும் மீறி தலையெழுத்து இதில இருந்தா அப்ப வா” என்று விரட்டி விட்டார்.

1970 – நவம்பர்- 1-ம் தேதி தீபாவளியன்று கைதிகளை மகிழ்விக்க சிறை சென்றபோது அங்கு ராதாவைச் சந்தித்தேன். பொள்ளாச்சி மாமாவை நினைவில் வைத்திருந்தார்.

“10 வருஷங்களுக்கு முந்தி, அவர் உங்களைப் பார்க்க ஒரு பையனை அனுப்பினாரே நினைவிருக்கிறதா” என்றேன்.

”ஆமா ஒரு பொடியன். நல்லா படம் வரைவான். பொம்மை காலேஜ்ல சேரச்சொன்னேன்” என்றார்.

“அந்தப் பொடியன் நாந்தாண்ணே”…..

“அடப்பாவி அங்க சுத்தி, இங்க சுத்தி நடிக்கவே வந்திட்டியா” – என்று ஒரு அதிரடிச் சிரிப்பு சிரிக்க, சிறைச்சாலையே அதிர்ந்தது!

***

– திரைக்கலைஞர் சிவகுமார் பதிவிலிருந்து..

You might also like