மிகவும் அபூர்வமாக சின்னத்திரையில் சிலர் மனம் திறந்து பேசுவதைக் கேட்க முடிகிறது. அப்படி ஒரு அனுபவத்தை புதுயுகம் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.
அதில், தன்னுடைய பல்வேறுபட்ட அனுபவங்களை மிகவும் ரசனையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் பேசிக்கொண்டு போனார் திரையிசைப் பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன்.
அவரோடு சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகியான அவரது மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன்.
“சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு தன்னுடைய வீட்டில் தமிழ் மற்றும் மலையாளப் பாடல்கள் கேட்டபடியே இருக்கும்” என்றவர், இளம் வயதிலேயே பல இன்னிசைக் கச்சேரிகளில் பங்கேற்ற அனுபவம் தனக்கு இருந்ததைப் பற்றியும் ரசனையுடன் குறிப்பிட்டார்.
உங்களுடைய குரு யார்? என்று கேட்கப்பட்டபோது, நான் மிகவும் மதிக்கும் மூத்த பின்னணிப் பாடகரும் கர்நாடக இசைப் பாடகருமான ஜேசுதாஸ் தான் என்றும் அவருடைய பாடல்களை மிகவும் ரசிப்பேன் என்றார்.
கர்நாடக இசையில் அவர் காட்டும் கமகங்களைப் பற்றிக் குறிப்பிட்டவர் ஏறத்தாழ ஜேசுதாஸ் குரலிலேயே அந்த ஸ்வரங்களை மிக நேர்த்தியாக பாடியும் காண்பித்தார்.
இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானை முதலில் சந்தித்ததைப் பற்றி நெகிழ்வாகக் குறிப்பிட்டவர், ‘காதலன்’ படத்தில் இடம்பெற்ற “என்னவளே… அடி என்னவளே“ பாடல் பாட தான் எடுத்துக்கொண்ட சிரத்தையும் அதற்கு கிடைத்த வெகுவான பாராட்டையும் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
தன்னுடைய மகள் உத்ராவுடன் இணைந்து அந்தப் பாடலையும் இனிமையாகப் பாடிக் காண்பித்தார்.
தன்னுடைய பாடலுக்கு தேசிய விருது கிடைத்தபோது தனக்குள் இருந்த மன நெகிழ்ச்சியை இப்படிக் குறிப்பிட்டார்.
“எனக்கு முன்னால் ஜேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி அம்மா, சுசிலா அம்மா என எவ்வளோ பேர் வாங்கி இருக்காங்க. அந்த வரிசையில் எனக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
அப்போது இறை அருளைப் பற்றியும் குறிப்பிட்டார்.
‘ஜீன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலையும் கூடவே இணைந்து பாடினார் அவரது மகள் உத்ரா.
இன்னொரு தேசிய விருது பெற்ற பாடலான, அஜித்தின் ‘பவித்ரா’ படத்தில் இடம்பெற்ற “உயிரும் நீயே” பாடலை பல்வேறு ராகங்களில் பாடிக் காண்பித்தவர்,
நடிகர் அஜித்தின் குரலுக்கு தன்னுடைய குரல் பொருந்திப் போவதாகவும் தற்போதைய முதலமைச்சரான விஜய்க்காக பாடியபோதும் அப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன என்பதையும் பகிர்ந்தார்.
‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற “நறுமுகையே…” பாடலை திரையில் தான் பாடிய அதே ராகத்திலும், பிறகு அதே பாடலை வேறு ஒரு ராகத்திலும் வித்தியாசமாக பாடிக் காண்பித்தார்.

இசைஞானி இளையராஜாவைப் பற்றி புகழந்து பேசியவர், அவர் இசையமைக்கும்போது பாடிக் காண்பிப்பதில் 50 சதவிகிதம் பாடினாலே போதும் என்றும் அந்தளவுக்கு மிகவும் ஈடுபாட்டுடன் அந்தப் பாடலை எங்களுக்கு முன் பாடிக்காட்டுவார் இளையராஜா என்றும் அவர் பாடியதில் 50 சதவிகிதம் தான் எங்களால் பாட முடியும் என்று கலகலப்பாகக் கூறினார்.
அடுத்து தேனிசைத் தென்றல் தேவா பற்றிக் குறிப்பிட்ட உன்னிகிருஷ்ணன், ‘நேருக்கு நேர்’ படத்தில் பாடலைப் பாடிக் காண்பித்தார்.
மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவுக்கு இருந்த வளமையான குரலைப் பற்றியும் பாடும் திறமை பற்றியும் குறிப்பிட்ட பிறகு, அவருடைய மகள் உத்ரா அவருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த அந்தப் பாடலைப் பாடிக் காண்பிக்க, குதூகலமான இசை அனுபவத்துடன் நிறைவடைந்தது அந்த இசைமயமான சந்திப்பு.
தொலைக்காட்சியில் எப்போதாவது அபூர்வமாக கோடையில் மழை பெய்வதுபோல, இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன.
– அகிலன்