பாஜக ஆதரவு கோரும் மேகாலயா முதல்வர்!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.

அதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கக் கூடிய பாரதிய ஜனதா கூட்டணியே வெற்றிபெற்று தற்போது மீண்டும் அங்கு ஆட்சியை அமைக்கின்றது.

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 25 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதால் அந்த கட்சியுடன் கூட்டணிவைக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.

இதனால் மேகாலயாவிலும் பாஜக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like