தொல்லியல் கற்பதால் என்ன பயன்?

தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன்

தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன்.

தொல்லியல் – இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறிதலில் பங்கேற்றது, 14 ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்தது என்பன போன்ற சிறப்புகளைக் கொண்டவர்.

பணி ஓய்வுக்குப் பிறகும் தொல்லியல் சார்ந்த கற்பித்தல், ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் பூங்குன்றனுடன் உரையாடியதிலிருந்து…

தமிழ் மாணவராக இருந்த நீங்கள் தொல்லியல் துறை நோக்கித் திரும்பியது எப்படி?

எனது ஊர் போளூர் அருகே திருமலை. அங்கு குந்தவை அம்மையார் கட்டிய சமணக் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

அது பற்றிய கல்வெட்டுகளைச் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறேன். சிறப்பாகப் பாடம் நடத்திய எங்கள் ஆசிரியர் மூலமாகத் தமிழ் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது.

வாணியம்பாடியில் பியூசி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ, எம்.ஏ., படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன்.

அப்போது, தொல்லியல் துறையில் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. அந்தப் படிப்பை முடித்ததும், அங்கேயே வேலை கிடைத்தது.

தொல்லியல் துறையில் பணிகள் எவ்வாறு இருந்தன?

பெரும்பாலும் கல்வெட்டுகளைத் தேடி ஊர் ஊராகச் சென்று, அவற்றைக் கண்டறிந்து படித்துப் புத்தகங்களாக வெளியிடுகிற வேலை.

பிறகு, சிலைகளைப் பதிவு செய்கிற அலுவலராகப் பணியாற்றினேன்.

1975, நவம்பரில் மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் பதவி உயர்வுடன் கோவைக்கு மாற்றலாகிச் சென்றேன்.

அங்கு நிறைய தொல்லியல் சார்ந்தவற்றைக் கண்டறிந்தேன்.

தொல்லியல் துறைப் பணி எந்த அளவுக்கு வரலாற்றை மறுஆய்வு செய்ய உதவியது?

முதலாம் மகேந்திரவர்மன் 40 ஆண்டுகளும், இரண்டாம் மகேந்திரவர்மன் 9 ஆண்டுகளும், குலோத்துங்கன் 54 ஆண்டுகளும் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.

அது மட்டுமல்லாமல் கல்வெட்டுகளில் இருக்கும் செய்திகளைச் சமுதாயப் பின்னணியில் பார்க்க வேண்டும்.

சோழர் காலத்திலிருந்து கொலைக் குற்றத்துக்கு எங்குமே உயிரை வாங்கியதாகத் தகவல் இல்லை.

கோயிலுக்கு விளக்கு வைத்தால் போதும் என்பது தண்டனையாகக் கூறப்பட்டிருக்கிறது.

அப்படியானால் மரண தண்டனைக் கூடாது என்பது அன்றே வழக்கத்தில் இருந்ததாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பஞ்சம் வந்தபோது கோயில் நகைகளை விற்றுச் சாப்பிட்டிருக்கின்றனர். பஞ்சம் தீர்ந்தபோது நகைகளைச் செய்துவைத்திருக்கின்றனர்.

இவற்றைப் பற்றிக் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தோடு இணைந்ததாகவும் ஈர்ப்பு மிக்கதாகவும் கோயில்கள் இருந்திருக்கின்றன. அதனால்தான் அவை இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

ஈமச்சின்னங்கள், தொல்பொருள்கள் மக்களின் வாழ்க்கையை எந்தெந்த வகையில் உணர்த்துகின்றன?

மக்களுக்கு ஈமச்சின்னங்கள் வைத்ததாகவே தகவல் இல்லை. நடுகல்கூட மன்னருக்குத்தான் வைக்கப்பட்டது.

வன்னி மரத்தடியில் தாழியில் புதைக்கப்பட்ட மன்னர்கள் என்று ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாழ்விடங்களில் கிடைக்கும் பொருள்கள், அவற்றை யார் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிற அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை அறியலாம்.

சங்க இலக்கியங்களைக் காலவரிசை (chronology) அடிப்படையில் வரிசைப்படுத்துவது அவசியமா?

வேதங்களைக் கால அடிப்படையில் வரிசைப்படுத்தி இருக்கின்றனர்.

‘ஈஸ்வரா’ என்கிற சொல் தொடக்கக் காலத்தில் சிறந்த மனிதரைக் குறித்தது; காலப்போக்கில் அது கடவுள் என்கிற பொருளில் வருகிறது;

அது மாதிரி வரிசைப்படுத்தினால் சொல், பொருள் எப்படி வந்தது, மாற்றம் எப்போது, எப்படி நிகழ்ந்தது என்கிற வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.

அருகமை ஊர்கள் குறித்த தொல்லியல் தகவல்களைத் தெரிந்துகொள்வது எந்த அளவுக்கு முக்கியமானது?

குடிமராமத்து என்ற பெயரில் மக்களே கால்வாயை, ஏரியைத் தூர்வாருகிற பழக்கம் தற்போது வழக்கொழிந்துவிட்டது.

நீர் இல்லாதபோது எப்படிச் சமாளித்தார்கள் என்பது பற்றிய தகவல் கல்வெட்டுகளில் கிடைக்கிறது; இன்றும் அதைப் பயன்படுத்த முடியும்.

பெரு நாட்டின் கிளிமஞ்சாரோவில் அகழாய்வு மேற்கொண்டபோது, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருளைக்கிழங்கு பயிரிட்டது குறித்த தகவல்கள் கிடைத்தன.

அதைப் பயன்படுத்தி, இரண்டு மடங்காக உருளைக்கிழங்கு விளைச்சல் கண்டனர். இப்படியாக, நாட்டின் வளர்ச்சிக்கும் தொல்லியல் பயன்படும்.

தொல்லியல் சான்றுகள் அழிவுக்குள்ளாகி வருவது குறித்து…

கோயம்புத்தூரில் நான் கண்ட தொல்லியல் சான்றுகளில் 30 சதவீதத்தை விவசாயத்துக்காக அழித்துவிட்டனர். எல்லாமே பெருங்கற்காலத் தளங்கள்.

என்ன செய்ய முடியும்? மக்களுக்குத் தொல்லியல் பற்றிக் கற்றுத் தர வேண்டும். தொல்லியல் எவ்வளவு முக்கியம் என்று இஸ்ரேலில் குழந்தைகளுக்கும் கற்றுத் தருகின்றனர்.

பொ.ஆ.(கி.பி.) 78இல் இஸ்ரேலில் எலுசா (Eleazar) என்கிற பழங்குடித் தலைவன் அங்கு ஆட்சி செய்தார்.

இரண்டு குழுவினருடன் மசாடா மலையில் இருந்துகொண்டு, ரோமானியப் படையினருடன் கெரில்லா முறையில் தாக்குதல் நடத்தினார்.

ஏழு ஆண்டுகள் கழித்து, அந்த இடத்துக்குள் ரோமானியர்கள் நுழைகிற நிலைமை ஏற்பட்டது.

அதற்கு முந்தைய நாள் இரவு, ‘ரோம் வீரர்களிடம் அடிமைகளாகச் சிக்குவதைவிட, உங்கள் மனைவி, குழந்தைகளைக் கொன்றுவிட்டு, நீங்களும் இறந்துவிடுங்கள்’ என்று எலுசா வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்தத் தகவல், ஒரு புராணக் குறிப்பில் இருந்திருக்கிறது.

இதைத் தொல்லியலாளர்களிடம் சிலர் சொல்லியிருக்கின்றனர். பலர் அதைத் தட்டிக் கழிக்க, ஒரு தொல்லியலாளர் மட்டும் அவர்கள் சொன்ன இடத்தில் அகழாய்வு செய்தார்.

அப்போது 965 எலும்புக்கூடுகள் கிடைத்தன; அந்தக் கண்டறிதல், அங்கிருந்த மக்களின் சுதந்திர தாகத்தைக் காட்டியது.

இன்றும் இஸ்ரேலில் ராணுவ அதிகாரிகள் பொறுப்பேற்கும்போது, அங்கு சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கம்.

உறுதிமொழிகளைச் சொன்னபிறகு, ‘மசாடா இனி வீழாது’ என்று சொல்கிற வழக்கமும் உள்ளது.

அப்படியானால், அந்த மக்களுக்குத் தொல்லியல் மீது எவ்வளவு பற்று என்பது பிடிபடும். நமக்கும் அது ஒரு பாடம்!

கல்வெட்டுகள் பற்றிய தகவல்களைப் பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் புகுத்துவது நன்மை பயக்குமா?

அவ்வாறு கற்றுக்கொடுத்தால் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வம் பரவலாகும்;

குறைந்தபட்சம் கல்லூரி அளவில் முக்கியமான கல்வெட்டுகள் பற்றிய தகவல்களை மாணவர்களிடத்தில் கொண்டு சென்றாக வேண்டும்.

கல்லூரிகளில் கண்காட்சிகள் நடத்தி அந்த வட்டாரத்தின், தமிழின் சிறப்புகளைத் தெரியவைத்தால் உணர்வு அதிகமாகும்.

குழந்தைகளுக்கு அவ்வாறு உணர்வூட்டினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்!

நன்றி: தி இந்து தமிழ் திசை

You might also like