உள்ளத்தின் முரண்பாடுகளைப் பேசும் ‘வெள்ளைத் தீ’!

கவிஞர் அறிவுமதி தமிழ்க் கவிதை உலகில் தீவிரமாக இயங்கி வருபவர். கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

நீலம் என்னும் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். திரைப்பாடல்களைத் தமிழ் மொழியிலேயே எழுதியுள்ளார். கவிஞர் அறிவுமதி ஒரு சிறுகதையாளராக ‘வெள்ளைத் தீ’ என்னுமொரு சிறுகதைத் தொகுப்பைத் தந்துள்ளார்.

மகாகவி பாரதிக்கு ஒரு கண்ணம்மா போல் கவிஞர் அறிவுமதிக்கு ஒரு கண்ணம்மா. சிறுகதையைக் கண்ணம்மாவில் தொடங்கி கண்ணம்மாவில் முடித்துள்ளார்.

ஆழ்ந்து உறங்கும் கண்ணம்மாவை உறக்கம் கலைய விட மாட்டேன் என்கிறார்.

ஓரிடத்தில் காட்டுமல்லியை வெள்ளைத் தீ என்கிறார். ஓரிடத்தில் நிலாவை வெள்ளைத் தீ என்கிறார்.

தீ என்பது அழிக்கும் சக்தி கொண்டது. ஆனால், வெள்ளைத் தீ என்பது தூய்மையான, அதே நேரம் மனதை சுட்டெரிக்கும் ஒரு தவிப்பைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

அறிவுமதி அடிப்படையில் ஒரு சிறந்த புதுக்கவிஞர் என்பதால் அவரது கவித்துவ ஆளுமை வெள்ளைத் தீயில் பரவிக் கிடக்கிறது. வெள்ளைத் தீ ஒரு முரணான தலைப்பு.

ஒரு மனிதனின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். வெள்ளைத் தீ வாசகரிடத்திலும் ஒரு தீயாக எளிதில் பற்றிக் கொள்கிறது.

களை என்பது பயிர்களுக்கு நடுவில் தேவையற்றதாக வளர்ந்து, அவற்றுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பறித்துக்கொள்ளும் தேவையற்ற செடிகளைக் குறிக்கும்.

சூழலுக்கு ஏற்ப அயர்வு, அழகு அல்லது நீக்குதல் போன்ற பிற பொருள்களிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

கவிஞர் இத்தலைப்பிலயே இரண்டாம் கதையை எழுதியுள்ளார். களை எடுக்கும் பெண்களைப் பற்றியதென்றாலும் வேண்டாதது களை எடுக்கும் பூவா கிழவி வேண்டாம் என்னும் கருவையும் களைப்பதில் தேர்ந்தவள்.

ஆனால், அதே சமயம் வெளியிலும் சொல்லமாட்டாள். இக்கதையில் பக்கத்து ஊர்காரர்கள் பெண் பார்க்க வருகிறார்கள். அதே நேரத்தில் களைக்கப்பட்ட ஒரு கருவை நாய் தூக்கிச் செல்கிறது.

இந்த கரு யாருடையது என்று பூவா கிழவி சொல்லவேயில்லை. வாசகர்களே பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும். இக்கதையை கிராம பின்னணியில் கிராமிய மொழியில் சொலவடைகளுடன் எழுதியுள்ளார்.

வானவில் பார்த்தல் என்ற தலைப்பே கதையின் குறியீட்டுத் தன்மையை உணர்த்துகிறது. வானவில் என்பது தற்காலிகமான, ஆனால் அழகான ஒரு நிகழ்வு.

மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களையும், உறவுகளின் மென்மையான பக்கங்களையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கிறது.

அன்றாட வாழ்க்கைப் போராட்டம், எளிய மனிதர்களின் மன ஓட்டங்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது.

வானவில் பார்த்தல் என்னும் இச்சிறுகதையில் ஒரு பெண்ணின் இரண்டு மனங்களைக் காட்டுகிறது. கணவன் உடலுறவு கொள்வதை மனம் விரும்பவில்லை. அதை பல்லி பட்டாம்பூச்சியைப் பிடிப்பதாக எண்ணுகிறார்.

ஆனால், அதே வேளை அவளுக்கு பிடித்தமான ஒருவனை சந்திக்கிறாள். அச்சந்திப்பு தொடர்வண்டியுடன் முடிவடைந்து விடுகிறது. பெண்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை அமைவதில்லை என்கிறது கதை.

இரவு நேரத்தில் பேருந்து இல்லாமல் தடுமாறும் ஒருவனைப் பற்றிய கதை தார் குளிர்ந்த ஆற்றங்கரையில். இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்குவது குறைந்து விடும். அல்லது நிறுத்தப்படும்.

சரி நடந்தே போகலாம் என்று நடந்து போகும் மிதிவண்டியில் செல்லும் ஒருவர் மிதிவண்டியில் செல்ல அழைக்கிறார். மிதிவண்டியின் முன் டயர் வெடித்துவிட இருவருமே மிதிவண்டியைத் தள்ளிச் செல்கிறார்கள்.

இறுதியாக ஒரு பேருந்து வருகிறது. அதில் ஏற முயற்சிக்கும் போது கம்பங்களில் கட்சிக்காரர்கள் கொடி கட்டும் கயிறு குறுக்கிட்டு ஏற முடியாமல் போகிறது. மீண்டும் இருவரும் மிதிவண்டியைத் தள்ளியபடியே செல்கின்றனர்.

இறுதிவரை பேருந்தில் செல்லும் வாய்ப்பே இல்லாமல் போகிறது. இக்கதையை இயல்பாகவே எழுதியுள்ளார்.

நீந்தும் பாறைகள் என்பது ஒரு சோகக் கதை. சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு படைப்பு.

உழைக்கும் வர்க்கத்தின் வலியைப் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல் மனிதநேயமே வாழ்வின் இறுதிப் பிடிமானம் என்ற நம்பிக்கையையும் இக்கதை விதைக்கிறது.

வர்க்கப் போராட்டத்தையும் மனித உணர்வுகளையும் நுட்பமாகப் பேசும் தமிழ் சிறுகதைகளில் இது ஒரு முக்கியமான வரவு.

இதன் மொழிநடையே வித்தியாசமானது. தந்தி போல் உரைநடை. ஒற்றை வார்த்தையிலும் ஒரு வரி. இரட்டை வார்த்தையிலும் ஒரு வரி. உடனே உடனே முடிந்து வேகத்தை அதிகப்படுத்துகிறது.

அடமானம் ஒரு வித்தியாசமான, விவாதத்திற்குரிய சிறுகதை. மனைவியை அடமானம் மீட்க முடியாமல் தடுமாறுகிறான் கணவன்.

மனைவியோ கணவனை மறக்க முடியாமல் தடுமாறுகிறாள். அடமானம் பிடித்தவனும் அடிக்கிறான். காலம் ஆக ஆக அடமானம் பிடித்தவனையே பிடித்துவிடுகிறது.

கணவன் மீட்டும் மனைவியின் மனத்தை மீட்க முடியவில்லை. இக்கதை நடைமுறையில் சாத்தியமா என்னும் கேள்வி எழுகிறது.

மகாபாரதக் கதையில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் தனது மனைவி திரௌபதியை சூதாட்டப் பந்தயத்தில் அடகு வைத்த கதை நினைவிற்கு வருகிறது.

பெண் குழந்தைகள் என கருவிலேயே கண்டறிந்தால் கலைத்து விடுவது குறித்து எழுதிய கதை உயிர் விடும் மூச்சு. கருவிலிருக்கும் பெண் குழந்தை பேசுவதாகவே எழுதப்பட்டுள்ளது.

கருவிலிருக்கும் பெண் குழந்தைக்கு அம்மாவை, அப்பாவை, அக்காக்களை பார்க்க ஆசை. ஆனால், கருவிலேயே கலைக்கப்பட்டு விடுகிறது.

அப்போதும் அதனுடைய கோரிக்கை அம்மாவிற்கு வலிக்காமல் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதேயாகும்.

தொழில்நுட்ப பிரச்சனையைச் சாடுகிறது உயிர்ப் பேசி என்னும் சிறுகதை. உணர்வுகளைவிட உபகரணங்களுக்கு முக்கியத்துவம் தரும் தற்கால மனோபாவத்தை மிக நுட்பமாக விமர்சிக்கிறது.

வாசகர்களைக் கதையை வாசித்து முடித்த பின்பும் சிந்திக்க வைக்கும் ஒரு கண்ணாடியாகும்.

நவீனத் தொழில்நுட்பத்தின் தேவையைக் கடந்து அது நம் ஆன்மாவை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதை மிக ஆழமாக அதே சமயம் எளிமையாக உணர்த்தியதில் இச்சிறுகதை பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், கதையில் வெளிப்படையாக தொழில் நுட்பத்தைப் பற்றி பேசாமல் கதையின் போக்கிலேயே புரிதல் ஏற்படுத்தியுள்ளார். இலையைக் காதலனாகவும் எறும்பைக் காலியாகவும் கற்பனித்து எழுதியுள்ளார்.

இலையில் எறும்பு நாம் என்று முடித்து தொழில்நுட்ப அலையில் சிக்கிக் கொண்டவர்கள் நாம் என்கிறார். உயிருடன் இருப்பவர்கள் உயிரற்றதன் மூலம் பேசி உறவாடுவதைக் குறிக்கிறது உயிர்ப் பேசி என்னும் கதை.

பெண்களை வைத்து எழுதப்பட்ட கதை கிணறு. கிணற்றில் குளிக்கும் போது எவனோ ஒருவன் பார்த்துவிட்டான் என்பதற்காக அவன் இறந்தும்கூட வேறு ஒருவரையும் திருமணம் செய்யாமலே கிணற்றில் வளையல்களை உடைத்து போட்டுவிட்டு வாழ்கிறாள் ஒரு கிழவி.

உறவுக்கார பையனாக இருந்து நன்றாக பழகி ஒரு பணக்கார பெண் கிடைத்தவுடன் அவளை மறந்து கல்யாணம் செய்து கொண்டதனால் கிழவியைப் போல் அல்லாமல் வாழ்ந்து காட்டுவேன் என வன்மத்துடன் வருகிறாள் ஓரிளம்பெண்.

இரண்டுவிதமான பெண்களை கிணறுவில் படைத்து பெண்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

காதல் படிக்கட்டுகள் என்பது ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த காதல் குறித்த ஒரு கட்டுரையாகும்.

இக்கட்டுரை இச்சிறுகதைத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. காதல் என்றால் என்னவென்று கவித்துவமான உரைநடையில் எழுதியுள்ளார்.

காதல் என்னும் பெயரில் பெண் மீதான ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்கிறார்.

“உரிமை கொண்டாடுதல் அன்று… உரிமை தருதலே காதல். தருதல் என்கிற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே!

தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல். முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.

எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு… கட்டுப்பட்டு இருக்க உடன்படாது அது” என காதல் குறித்து எழுதி எது காதல் என புரிதல் ஏற்படுத்தியுள்ளார்.

கவிஞர் அறிவுமதி ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு தளத்தில் ஒவ்வொரு மாதிரி எழுதியுள்ளார்.

கவிஞராக மக்களுக்கான மொழியில் கவிதை எழுதியவர் சிறுகதையில் ஒவ்வொரு நடையில் எழுதியுள்ளார். கவித்துவமாகவும் உள்ளது. உரைநடையாகவும் உள்ளது.

கிராமம் சார்ந்த கதைகளும் உண்டு. நகரம் தொடர்பான கதைகளும் உண்டு. புரியும் வகையிலும் எழுதியுள்ளார். புரியாத வகையிலும் எழுதியுள்ளார். காதலையும் பேசியுள்ளார். பெண்ணியத்தையும் பேசியுள்ளார்.

களை, கிணறு போன்ற சிறுகதைகள் குறிப்பிடும்படியுள்ளன. கவிஞர் அறிவுமதி வெள்ளைத் தீ என்னும் தொகுப்பு மூலம் ஒரு சிறுகதையாளராகியுள்ளார்.

தொடரும்பட்சத்திலேயே அவரின் சிறுகதையின் போக்கு புரியும். தொடர வாழ்த்துகள்.

வெளியீடு
நாதன் பதிப்பகம் சென்னை
கவிஞர் அறிவுமதி

  • பொன். குமார் 9003344742
You might also like