தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் தன்னைத் தானே தாய் மாமனாக உரிமை கொண்டாடிக் கொள்கிறார், முதலமைச்சர் விஜய்!
இன்றைக்கு (28.09.2026) தடபுடலாக நடந்துள்ளது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!
ஒரு தங்க மோதிரத்தின் விலை 17,000.
ஆண்டுக்கு 4,20,000 குழந்தைகளுக்கு தரப்போவதாக அரசு சொல்லியுள்ளது.
இந்த எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.
அடுத்த ஆண்டு, இதே தினத்தில் கணக்கிட்டுப் பார்க்கும் போது குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சமாகவோ, ஐந்தரை இலட்சமாகவோ அதிகரித்திருக்கும்.
அரசு மருத்துவமனை பிரசவ வார்டுகளில் இனி கூட்டம் அலைமோதும்…!
எனக்கென்ன கவலை என்றால், ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாகுறையால் திணறுகிறது, அரசு மருத்துவமனை. மேலும் மருந்து, மாத்திரை உள்ளிட்ட பல போதாமைகள்..!
இன்றைய நிலவரப்படி மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை அப்படியே இன்னும் ஒரு மடங்கு அதிகப்படுத்தினால் தான் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.
எப்படி சமாளிக்கப் போகிறதோ அரசு?
தனியார் மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்திற்கே ரூ.50,000 தொடங்கி ஒரு லட்சம் வாங்குகிறார்கள்! ஆபரேஷன் செய்து பிரசவம் என்றால், 1,50,000 தொடங்கி 3 லட்சம் வரை செலவாகிறது.!
இந்தச் சூழலில் அரசு மருத்துவமனையில் எந்தச் செலவுமின்றி பிரசவம் பார்க்க முடிவதே பெரிய ஆறுதல் தான் எளியோருக்கு!
அட, தங்க மோதிரமெல்லாம் இருக்கட்டும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் சிக்கலின்றி, சிரமின்றி நடந்தேற வேண்டுமே.. என்ற தவிப்பு தான் அங்கு செல்லும் மக்களுக்கு ஏற்படுகிறது.
எத்தனையோ குளறுபடிகள், அலட்சியங்கள், மரியாதைக் குறைவான அணுகுமுறைகளைக் கடந்து தான் அங்கு பிரசவம் பார்த்து திரும்ப முடியும் என்ற நிலை உள்ளதா? இல்லையா?
பிரசவம் நல்லபடியாக நடந்தேறாவிட்டால் தாயோ, சேயோ சவம் தான்!
பிரசவம் நல்லபடியாக நடந்தேறி ‘தாயும், சேயும் நலமாக உள்ளார்கள்’ என்ற ஒற்றை வரிச் செய்தி தரும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுமில்லை.
அப்படி சுகமான பிரசவத்திற்கான போதிய படுக்கைகள், போதிய தொட்டில்கள், சுகாதாரமான சூழல்களை உறுதிபடுத்த முடியாத நிலையில் தான் பல அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன….!
இன்றைய சூழலில் மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் தனியார் மருத்துவமனைகளின் தரத்திற்கு நிகராக அரசு மருத்துவமனைகளும் செயல்பட வேண்டும் என்பதும், இங்கு தாங்கள் கண்ணியமாக, அக்கறையாக கவனிக்கப்பட வேண்டும் என்பது தான்.
தங்க மோதிரத்திற்காக செலவிடும் ரூ.755.83 கோடியை இந்த வகையில் செலவழித்திருந்தால் பல பேருக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
கண்ணியமான, பாதுகாப்பான சுகப் பிரசவத்திற்கு உத்திரவாதமும் கிடைத்திருக்கும்.
சாவித்திரி கண்ணன்