தமிழக அரசின் ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கும் (SIRD) ஊரக வளர்ச்சி மற்றும் நீராதாரத் துறை அமைச்சருக்கும் மதிப்புறு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பழனித்துரை அவர்கள் ‘தாய்’ இணைய இதழின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
கடந்த ஆறு வருடங்களாகவே தொடர்ந்து பல்வேறு அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து பல விரிவான கட்டுரைகளை ‘தாய்’ இணைய இதழில் எழுதி வருகிறார்.
அவை தொகுக்கப்பட்டு புத்தகங்களாகவும் வெளிவந்து உரிய கவனம் பெற்றிருக்கின்றன.
காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகி, அதைத் தொடர்ந்து பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
அதோடு, உள்ளாட்சி அதிகாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்கள் செயல்படும் விதத்தைப் பற்றி மிக விரிவாக எழுதியும் பேசியும் வந்தவர்.
பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி உள்ளாட்சித் துறைக்குக் கூடுதல் பொறுப்பளித்து, அதன் செயல்பாட்டை முக்கியத்துவப்படுத்தியதில் டாக்டர் க.பழனித்துரைக்கு முக்கியப் பங்குண்டு.
அதோடு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைமைக்கும் நெருக்கமான இவர், பல கட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மக்கள் பிரதிநிதிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது பற்றிய பயிற்சி வகுப்புகளையும் நடத்தி இருக்கிறார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் எழுதிய பல நூல்கள் தேசம் கடந்தும் பாராட்டப்பட்டிருக்கின்றன.
காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி உட்பட பலருடனும் நெருக்கமான பழக்கம் கொண்டவரான டாக்டர் பழனித்துரை, தற்போது தவெக அரசின் ஆலோசகராக முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இவருடைய வழிகாட்டுதலின் கீழ் தவெக அரசு உள்ளாட்சி மற்றும் பல்வேறு நிலைகளில் முக்கியச் செயல்பாடுகள் எடுப்பதற்கு பேராசிரியர் உறுதுணையாக இருப்பார்.
‘தாய்’ இணைய இதழின் வாசகர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக நன்கு தெரிந்த முகமான பேராசிரியர் டாக்டர் க. பழனித்துரை அவர்கள் அரசின் உயர்மட்ட ஆலோசகராகப் பொறுப்பேற்றுருப்பதற்கு ‘தாய்’ இணைய இதழின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


