350 ஆண்டுகளைக் கடந்தாலும் நிமிர்ந்த கம்பீரத்துடன் இருக்கிறது மதுரையில் இருக்கிற அந்தக் கட்டடம். 1670 வாக்கில் ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.
இதைச் சுற்றிலும் நீர் நிறைந்த 5 கண்மாய்கள் குளிர்ச்சியுடன் சின்னத் தீவு மாதிரி இருந்த அந்த சரித்திரம் புரளும் அரண்மனை, பின்பு பிரிட்டிஷ் கலெக்டர் பங்களாவாக மாறியது.
தற்போது அந்த இடத்தில் மகாத்மா காந்தி நினைவகம் உள்ளது. இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப் பிறகு உருவான முதல் மியூசியம் இதுதான்.
1948 ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவருக்கான நினைவாலயம் அமைப்பது குறித்து பேச்சு எழுந்தது.
நேரு, ராஜேந்திரப் பிரசாத், அபுல் கலாம் ஆசாத், டாக்டர் திவாகர் போன்றவர்களெல்லாம் கூடிப்பேசி காந்திக்கு நினைவகத்தை உருவாக்க நிதி திரட்ட முடிவானது.
பொதுமக்களிடமிருந்து நிதி குவிந்து 10 கோடி ரூபாயைத் தொட்டது. எங்கு நினைவகம் அமைக்கலாம் என்கிற பரிசீலனையில் 7 இடங்கள் தேர்வாகின.
தமிழகத்தில் பல இடங்கள் பரிசீலிக்கப்பட்ட போது மதுரையிலிருந்த என்.எம்.ஆர், சுப்பராமன் போன்ற தேசியத் தலைவர்களின் குரலுக்குப் பலனாய் மதுரை தேர்வானது.
காந்தி தன் வாழ்நாளில் ஐந்துமுறை மட்டுமே மதுரைக்கு வந்திருந்தாலும் கூட, காந்தியின் தோற்றத்தையே மாற்றி அமைத்ததில் மதுரைக்கு முக்கிய இடமுண்டு.
1921 செப்டம்பர் மாதம் 20-ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் மதுரை மேலமாசி வீதியில் உள்ள காங்கிரஸ் அபிமானி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது, வெறும் வேட்டி மட்டுமே உடுத்தியபடி நடமாடிய மதுரைவாசிகளைப் பார்த்ததும், தான் உடுத்தியிருந்த உடையே ஆடம்பரமாகப் பட்டிருக்கிறது காந்திக்கு.
நாமும் அவர்களை மாதிரி எளிய உடையை ஏன் உடுத்தக் கூடாது என்ற சூழலில் அவரிடம் உருவாக்கிய கேள்வி காந்தியின் யூனிபார்மையே மாற்றி அமைத்துவிட்டது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிமதிக்கப் படாததைக் கண்டித்து கோயிலுக்குள் நுழைய மறுத்தவர், திரும்பவும் அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்த பிறகு 1946 பிப்ரவரி 23-ம் தேதிதான் அந்தக் கோவிலுக்குள் நுழைந்தார்.
இப்படி காந்தியின் நினைவில் பதிந்த மதுரையில் நினைவகம் அமைக்க முடிவானதும், தமுக்கம் அரண்மனை என்று அழைக்கப்பட்ட அபூர்வமான இந்த அரண்மனை தேர்ந்தெடுக்கப்பட்டது.
காந்தியின் வாழ்க்கையோடு இணைந்த பல அம்சங்கள் காட்சி ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் சேகரிக்கப்பட்டு 1959 ஏப்ரல் 15-ல் இருந்து காந்தி நினைவாக அமைக்கப்பட்ட முதல் நினைவகம் செயல்படத் துவங்கியது.
இதற்குப் பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி என்றுஆறு இடங்களில் காந்தி நினைவகங்கள் உருவாக்கப்பட்டன.
மதுரை காந்தி மியூசியத்தில் மூன்று பிரிவுகள். முதலில் இந்திய விடுதலை வரலாற்றின் சித்தரிப்புகள். அதில் மட்டும் 265 அரிய புகைப்படங்கள்.
அதில் ‘நாய்களும் இந்தியர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்கிற போர்டு பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, அழுது வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் மியூசியத்தைப் பார்வையிட வந்த சில ஈரமான பிரிட்டிஸ் குடிமகன்கள்.
அடுத்து 124 படங்களுடன் காந்தியின் வாழ்க்கை வரலாறு. இதை அடுத்து மூன்றாவது பிரிவாக காந்தி உபயோகப்படுத்திய ஒரிஜினலான சில பொருட்கள்.
சுடப்பட்டு இறந்த போது காந்தி அணிந்திருந்த வேஷ்டி, ரத்தக் கறைகளுடன் கண்ணாடிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டிருப்பது பார்வையாளர்கள் பலரை நெகிழ வைத்திருக்கிறது.
1946-ல் அவர் பயன்படுத்திய ராட்டை, நூல் சட்டம், கண்ணாடி, வட்டமேஜை மாநாட்டின் போது அவர் உடுத்தியிருந்த சால்வை, தோல் செருப்புகள், தலையணை எல்லாம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதத்தின் நகல், காந்தியின் தமிழ் கையெழுத்து வடிவம்-இப்படிப் பல அம்சங்கள். இதுதவிர காந்தியின் அஸ்தி இங்கு பாதுகாக்கப்படுகிறது.
இங்கு பார்வையாளராக நுழைகிற எவருக்கும் காந்தியின் வாழ்க்கைக்குள் ஊடுருவுகிற உணர்வு தவிர்க்க முடியாமல் ஏற்படுகிறது. பக்கத்திலேயே 36 ஆயிரம் புத்தகங்களுடன் மியூசியத்தின் நுரையீரல் மாதிரி முதிர்ந்த ஒரு நூலகம்.
காந்தியச் சிந்தனை ஆய்வுக்காக வளாகத்திற்குள்ளேயே ஒரு கல்லூரி என்றிருக்கிற இந்த மையத்தை நிர்வகிக்கிறது டாக்டர்.ச.பாண்டியன் தலைமையிலான குழு.
ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் வரை பார்வையாளர்கள் அங்கு வருவதாகச் சொல்கிறார் மியூசியப் பொறுப்பாளரான ரவிச்சந்திரன்.
இந்த மியூசியத்திற்கு வந்த மார்டின் லூதர்கிங் உணர்வு வேகத்துடன் குறிப்பு எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
தலாய்லாமா, நேரு உட்பட பல்வேறு தலைவர்கள் பார்வையிட்டுச் சென்றிருக்கிற இந்த மியூசியத்தின் அழகே, ஏதோ தியானக் கூடத்தில் விரவியிருக்கிற மாதிரி இங்கு உறைந்திருக்கும் அமைதிதான்.
உலக அரங்கில் உள்ள அமைதி அருங்காட்சியகங்கள் என்று ஐ.நா சபை 64-ஐ பட்டியலிட்டிருக்கிறது.
அந்த பட்டியலில் தன்னுடைய மகத்தான அமைதி மூலம் சர்வதேச அளவில் இணைந்திருக்கிறது மதுரை காந்தி மியூசியம்.
அமைதிக்குண்டோ அடைக்குந் தாழ்?
– ‘அந்திமழை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள மணா-வின் ‘தமிழகத் தடங்கள்’ நூலில் இருந்து ஒரு பகுதி.