எப்போது நாம் இப்படி மாறினோம்?

உலக சுற்றுலா தினம் : செப்டம்பர் – 27

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வது மனிதர்களுக்கு புதிதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு சுவாரஸ்யமான கேள்வி இருக்கிறது – மனிதர்கள் எப்போது வெறும் பயணிகளாக இல்லாமல் சுற்றுலாப் பயணிகளாக மாறினார்கள்?

ஆரம்ப காலங்களில் மனிதர்களின் பயணம் பெரும்பாலும் தேவைக்காகத்தான் இருந்தது.

உணவு தேட, ஆபத்திலிருந்து தப்பிக்க, வணிகம் செய்ய, வேறு இடங்களில் குடியேற அல்லது மதம் சார்ந்த காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்தனர்.

அந்தக் காலப் பயணங்களை இன்றைய டூரிஸம் என்று நேரடியாக அழைக்க முடியாது. ஆனால், அதுதான் சுற்றுலாவின் நீண்ட வரலாற்றுக்கான ஆரம்பப் பின்னணி.

பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய காலங்களில் பயணத்தின் தன்மை கொஞ்சம் மாறத் தொடங்கியது.

மக்கள் மத விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பார்க்கவும் பயணம் செய்தனர்.

உலகின் பழமையான புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அப்போதே இருந்திருக்கிறது.

இன்று நாம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பார்க்க பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்வது போல, அன்றும் சிலர் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்கப் பயணம் செய்தனர்.

இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள்.

Great Pyramid of Giza, Temple of Artemis, Statue of Zeus, Colossus of Rhodes போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் அந்தக் கால மக்களின் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இடங்களாக இருந்தன.

ஆனால், அவற்றை இன்றைய tourist attractions போலவே பார்க்க வேண்டும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக Hanging Gardens of Babylon உண்மையில் இருந்ததா என்பதே இன்னும் விவாதத்திற்குரிய விஷயம்.

சுற்றுலா வரலாற்றில் மதப் பயணத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பௌத்தம், இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம் என பல்வேறு மதத்தினர் புனித இடங்களுக்குப் பயணம் செய்து வருகின்றன.

இத்தகைய புனிதப் பயணங்களுக்காக உருவான பாதைகள், தங்கும் இடங்கள், உணவு மற்றும் பயண வசதிகள் பின்னர் டூரிஸம் வளர்வதற்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக உதவின.

ஆனால், புனிதப் பயணத்தை தற்போதுள்ள சுற்றுலாவுக்கு சமமாகக் கருத முடியாது; இரண்டுக்கும் நோக்கங்களில் முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன.

உலகின் சில பகுதிகளில் உடல்நலம் மற்றும் ஓய்வுக்காகப் பயணம் செய்யும் பழக்கமும் பழமையானது. உதாரணமாக, ஜப்பானில் வெப்ப நீருற்றுகளுக்குச் (hot springs) சென்று குளிக்கும் வழக்கம் (onsen tradition) பல நூற்றாண்டுகள் பழமையானது.

அதேபோல், இன்று “spa” என்று நாம் அழைக்கும் வார்த்தை Belgium-ல் உள்ள Spa என்ற இடத்திலிருந்து வந்தாலும், வெப்ப நீருற்றுக்களில் குளிக்கும் வழக்கம்  ஐரோப்பாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

பின்னர் ஐரோப்பாவில் கிராண்ட் டூர் (Grand Tour) என்ற ஒரு புதிய சுற்றுலா கலாச்சாரம் உருவானது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இது பிரபலமானது.

செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து கலை, கட்டடக் கலை, தொல்லியல் தடங்கள், கலாச்சாரம் போற்றவற்றைக் கற்றுக்கொண்டனர்.

இது வெறும் சுற்றுலாகவாக மட்டுமல்லாமல்; ஒரு வகையில் அந்தக் காலத்தின் சுற்றுலக் கல்வியாகவும் இருந்தது. இந்தப் பயணம் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், சில பெண்களும் கிராண்ட் டூர் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், சுற்றுலாவின் உண்மையான பெரிய மாற்றம் தொழிற் புரட்சி (Industrial Revolution) காலத்தில் வந்தது.

ரயில்வே மற்றும் கப்பல் போக்குவரத்து வளர்ந்தது. பயணம் வேகமாகவும், முன்பைவிட எளிதாகவும் மாறியது.

அதே நேரத்தில் நடுத்தர மக்கள் வளர்ந்து, சிலருக்கு ஓய்வு நேரமும் கிடைத்துப் பயணம் செய்யக்கூடிய வருமானமும் கிடைத்தது.

இதனால் பயணம் என்பது வசதியானவர்களுக்கு மட்டும் இருந்த ஒன்றாக இல்லாமல் மெதுவாக அதிகமான மக்களிடம் சென்றது.

இதில் தாமஸ் குக் (Thomas Cook)-ன் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 1841-ல் அவர் இங்கிலாந்தில் உள்ள லெஸ்செஸ்டரிலிருந்து (Leicester) லாபரா (Loughborough) வரை 485 பேருக்காக ஒரு ரயிலில் குழுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அப்போதே பயணிகள் ரயில் இருந்தன. ஆனால், பயணத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்து, பலரையும் ஒரே எல்லோரையும் ஒரே இடத்திற்கு, ஒரே நோக்கத்திற்காக அழைத்துச் சென்றது ’சுற்றுலா வளர்ச்சி’யில் ஒரு முக்கியமான மைல் கல்லாக ஆனது.

பின்னர் தாமஸ் குக்-கின் இந்த சுற்றுலா திட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடைந்தது.

அதன்பிறகு டூரிஸம் இன்னும் பல வடிவங்களை எடுத்தது. பிரிட்டனில் கடற்கரைக்குச் சென்று கடற்கரை குளியல் செய்வது முதலில் உடல்நலத்துடன் தொடர்புடையதாக இருந்தது.

பின்னர் அது மன அமைதிக்கு, பொழுது போக்கு மற்றும் விடுமுறைக் கொண்டாட்டமாக மாறியது. ரயில் போக்குவரத்து வளர்ந்ததால் மக்கள் கடற்கரையில் உள்ள தங்குமிடங்களுக்கு எளிதாகச் செல்ல முடிந்தது.

அதேபோல், வெளிநாடு செல்லாமல் சொந்த நாட்டுக்குள்ளேயே பயணம் செய்வதும் டூரிஸத்தின் முக்கியமான பகுதியாக வளர்ந்தது.

20ஆம் நூற்றாண்டில் இந்த மாற்றம் இன்னும் வேகமடைந்தது. 

கார்களின் பயன்பாடு அதிகரிப்பு, உணவகங்களின் பெருக்கம், தங்குமிடங்கள் உருவாக்கம் போன்றவற்றால் டூரிஸம் அசுர வளர்ச்சி பெற்றது. சுற்றுலா செல்லும் எண்ணம் மக்களிடம் வெகுவாக சென்றடைந்தது.

குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தன்னெழுச்சியான வளர்ச்சி, வருமானம் அதிகரிப்பு, நவீனப் போக்குவரத்து ஆகியவை உலக அளவிலான டூரிஸத்திற்கு வளர்ச்சிக்கு உதவின.

1930களிலேயே பல நாடுகளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பரவத் தொடங்கியிருந்தன; அதோடு, போக்குவரத்து மற்றும் மக்களின் பொருளாதார வசதி இணைந்தபோது நீண்ட தூரப் பயணம் செய்வது அதிகரித்தது.

அதன்பிறகு நம்முடைய டூரிஸம் இன்னும் வேறு மாதிரியாக மாறியது. ஒருகாலத்தில் ஒரு பயணத்தைத் திட்டமிட மேப், வழிகாட்டிப் புத்தகம் மற்றும் தெரிந்தவர்களின் ஆலோசனை தேவைப்பட்டது.

இன்று ஸ்மார்ட் போனில் சில வார்த்தைகளை டைப் செய்தாலே, செல்லும் இடம், வழி, தூரம், உணவகம், தங்குமிடம், அந்த இடத்தின் சிறப்புகள், அதைப் பற்றிய மற்றவர்களுடைய அனுபவங்கள் என அனைத்தையும் பார்க்க முடிகிறது.

இப்போது Artificial Intelligence கூட travel planning-ல் நுழைந்துவிட்டது. 2026 World Tourism Day-ன் theme “Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism” என்பதே tourism எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது.

ஆனால், டூரிஸம் என்பது ஒரு அழகான இடத்திற்குச் சென்று photo எடுத்து திரும்பிவிடுவது மட்டும் அல்ல.

அது உள்ளூர் மக்களின் வாழ்க்கை, வேலைவாய்ப்பு, கலாச்சாரம், இயற்கை மற்றும் பொருளாதாரத்துடனும் தொடர்புடையது.

அதனால்தான் இன்று டூரிஸம் வளர வேண்டும் என்பதோடு, அது நிலையானதாகவும் (sustainable) இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் (World Tourism Day) கொண்டாடப்படுகிறது.

ஐ.நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, முதல் உலக சுற்றுலா தினம் 1980-ல் கொண்டாடப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் தேவைக்காகப் பயணம் செய்தான்.

பின்னர் ஒரு இடத்தைப் பார்க்க, ஒரு கலாச்சாரத்தை அறிய, ஓய்வெடுக்க, கடற்கரையை ரசிக்க, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செய்தான்.

ரயில்கள், கப்பல்கள், கார்கள், விமானங்கள், இணைய வளர்ச்சி என ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பம் அந்தப் பயணத்தை மாற்றியது. இன்று ஏ.ஐ. அந்தப் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.

பயணம் மாறவில்லை; பயணம் செய்வதற்கான நம்முடைய காரணங்கள் மட்டும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

– சங்கீதா 

You might also like