இயற்கையின் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதற்கே உண்டான தனித்துவமான அழகை பெற்றுள்ளது.
மலர்கள், நதிகள், மலைகள் ஆகியவற்றை போல மனிதனின் அழகு என்பது ஒவ்வொரு பருவ வயதிலும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஏற்ப இயற்கையாக மாறுபடுகிறது.
அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற எண்ணம் மாறி, தற்போது ஆண் பெண் என இரு பாலாருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.
அழகாக தோற்றமளிப்பது ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆளுமைத் திறனை பன்மடங்கு கூட்டுகிறது. பொது வாழ்வில் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அழகினைப் பெற, நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளைப் பார்ப்போம்.
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள், பச்சைக் கீரைகள், நட்ஸ் வகைகள், ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன்கள் போன்ற உணவுகள் இயற்கையான அழகையும் இளமையையும் தரக்கூடியவை.
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தினமும் உணவில் குறிப்பிட்ட அளவு பருப்புகள் சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறு அருந்துவதன் மூலம் சரும நிறம் கூடும்.
கீரைகளில் முளைக்கீரை என்றால் வளரும் கீரை என்று அர்த்தம். அதாவது பதின் பருவ பிள்ளைகளுக்கான கீரை என்று சொல்லலாம். பசியைத் தூண்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி சருமத்திற்கு மெருகூட்டுகிறது.
தவிர, பிற கீரை வகைகளிலும் உள்ள விட்டமின்கள், செல்களில் உள்ள அழற்சியை குறைத்து சருமத்தை மிருதுவாக்குகின்றன.
பலருக்கும் பதின்ம வயதின் முதல் அடையாளம் பரு வருதல் ஆகும். குடல் சரியில்லாததன் அறிகுறியே பருக்களாக வெளிப்படுகின்றன.
துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் உட்கொள்ளும் பொழுது குடல் பாதிப்படைகிறது. அதன் பிரதிபலிப்பே பருக்களாகவும் தேமலாகவும் முகத்தில் பிரதிபலிக்கின்றன.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி சாறு வகைகளை அருந்துவதன் மூலம் தேவையான கொலாஜன் உற்பத்தி செய்யப்பட்டு, சருமம் தளராமல் பாதுகாக்கப்படுகிறது.
பப்பாளி மற்றும் மாதுளை பழங்களில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் முக பளபளப்பிற்கு உதவுகின்றன. தக்காளியில் உள்ள வைட்டமின்கள் சூரியக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றது.
சிவப்பழகு கிரீம்கள், பருக்களை விரட்டும் கிரீம்கள், உடல்நாற்றம் நீக்குபவை என சந்தையில் அறிமுகமாகும் அத்தனை அழகு சாதனங்களுமே டீன் ஏஜில் உள்ளவர்களை குறி வைத்து களம் இறக்கப்படுகின்றன.
இயற்கை உணவு முறைகளைப் பின்பற்றினால் இவற்றை நாடிப் போக வேண்டிய தேவை ஏற்படாது.
குப்பைமேனி கீரை பெரும்பாலானோர் அறிந்திடாத ஒரு கீரை வகையாக உள்ளது. இதனுடன் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ளும் பொழுது சரும அரிப்பு, அலர்ஜி போன்றவை எளிதில் நீங்கும்.

இந்தக் கீரையுடன் சம அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து குளித்து வரும்பொழுது பெண்களுக்கு முகத்திலும் உடலிலும் ஏற்படும் ரோம வளர்ச்சியும் கட்டுப்படும்.
‘மேனி சாப்பிட்டால் மேனி முடங்காது’ என்ற பழமொழியின் மூலம் இதன் பெருமையை உணர முடியும்.
ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 அமிலம் நிறைந்த உணவுகளான உலர் பழங்களை தினசரி ஒன்றேனும் எடுத்துக்கொண்டு வரும்பொழுது கண்களுக்கு அடியில் கருவளையம் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் வருவதும் தவிர்க்கப்படும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக போதுமான அளவு தண்ணீர் அருந்துவது ஒட்டுமொத்த சரும பராமரிப்புக்கும் உடல் வனப்பிற்கும் இன்றியமையாதது.
இந்த உணவு முறைகளைத் தொடர்ந்து பின்பற்றும்போது காலத்தை வெல்லும் இயற்கையான அழகையும் நீண்ட கால உடல் நலத்தையும் பெற முடியும்.
S. வாணி